இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் முற்றிலும் மாறுபட்ட சூரிய அடுப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. நாட்டில் எல்பிஜி (LPG) எனப்படும் சமையல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் இண்டக்ஷன் பயன்படுத்த தொடங்கினர். இருப்பினும் மின்சார கட்டணத்திற்கு அதிக பணம் செலவாகிறது. இவை இரண்டையும் தவிர்க்கவும், உங்கள் பணத்தை மிச்சப்படுத்தவும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் சூர்யா நூதன் (Surya Nutan) என்ற சூரிய அடுப்பை அறிமுகப்படுத்தி உள்ளது.
சோலார் அடுப்பு (Solar Oven)
சூர்யா நூதன் அடுப்பு, பழைய சோலார் அடுப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. அதாவது, இந்த சோலார் அடுப்பை மேற்கூரையில் அல்லது வெயிலில் வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் சூர்யா நூதன் அடுப்பை சமையலறையில் எளிதாக பொருத்திக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், பார்ப்பதற்கு இது சாதாரண அடுப்பு போல இருக்கும்.
இந்த அடுப்பில் இரண்டு அலகுகள் கிடைக்கிறது. அதுபோக ஒரு யூனிட் சமையலறையிலும் மற்றொன்று வெளியில் வெயிலிலும் வைக்கப்படும். மேலும், சூரிய ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றும் தெர்மல் பேட்டரியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்திலும் பயன்படுத்தலாம். பகலில் ஆற்றலைச் சேமித்து, இரவில் சீராக இயக்க முடியுமாம். சூர்யா நூதன் சோலார் ஸ்டவ் இரண்டு வகைகளில் வருகிறது.
விலை (Price)
இதன் குறைந்த பட்ச விலை 12 ஆயிரம் ரூபாயாகவும், டாப் வேரியண்டின் விலை 23 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) இன்னும் சந்தையில் அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி சந்தைக்கு வரும்பட்சத்தில், இந்தியன் ஆயில் கேஸ் ஏஜென்சி மற்றும் பெட்ரோல் பம்ப் ஆகிய இடங்களில் இருந்து வாங்கலாம். இந்த அடுப்பை ஒரு முறை 12 ஆயிரம் ரூபாய் செலவழித்து வாங்குவதனால், வாழ்நாள் முழுவதும் இலவசமாக உணவு சமைக்கலாம்; தேவைப்படுவோர் மின்சார பயன்பாட்டிலும் இயக்கிக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
ரேஷன் கடைகளில் வெல்லம் விற்பனை செய்யுங்கள்: தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை!
வீட்டுக்குள்ளேயே ஆக்சிஜன் தோட்டம்: கோவை கஸ்தூரி பாட்டி அசத்தல்!