ஆடியில காற்று அடிச்சா, ஐப்பசியில மழைப்பெய்யும்னு பாட்டு பாடிய காலமெல்லாம் போயிடுச்சு போல என்று புலம்பும் அளவிற்கு தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாதத்தில் கடும் வெப்பம் நிலவுகிறது.
கடந்த 24 மணி நேரத்தினை பொறுத்தவரை அதிகப்பட்சமாக தமிழகத்தில் மதுரை விமான நிலையத்தில் 41.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் கன்னியாகுமரி மற்றும் கரூர் மாவட்டங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக (5.1 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் மேல்) வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதைப்போல் தஞ்சாவூர், சென்னை, தருமபுரி, ஈரோடு, மதுரை, நாகப்பட்டினம், நெல்லை, சேலம், திருவள்ளூர், வேலூர், சென்னை, கோவை, கடலூர் மாவட்டத்திலும் இயல்பை விட அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 07.08.2023 முதல் 09.08.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10.08.2023 மற்றும் 11.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் மற்ற விவரங்கள் பின்வருமாறு-
12.08.2023 மற்றும் 13.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை :
07.08.2023 மற்றும் 08.08.2023: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தப்பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
மன்னார் வளைக்குடா மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 9 ஆம் தேதி வரை மீனவர்களுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அரபிக்கடல் பகுதிகளில் எத்தகைய எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
மேலும் தமிழ்நாடு வானிலை தொடர்பான தகவல்களை தெரிந்துக் கொள்ள Mausam.imd.gov.in/Chennai என்கிற இணையதளத்தை காண சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
மல்லிகை, சம்பங்கி போன்ற உதிரி மலர் சாகுபடிக்கு 40 % மானியம்!
இறுதி அஸ்திரமும் போச்சு- அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு