ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பானது தான். இந்த நோக்கத்திலேயே குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை அளிக்கவும் பெற்றோர் விரும்புகின்றனர். குழந்தைகளின் எதிர்கால கல்வி தேவையை சமாளிப்பதற்காக சேமித்து முதலீடு செய்வதும் அவசியமாகிறது. குழந்தைகள் பெயரில் பலவிதங்களில் முதலீடு செய்யலாம் என்றாலும், இதை சரியாக திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலம், கல்வி இலக்கை அடைவதோடு, வரிச்சேமிப்பின் பலனையும் பெறலாம். இதற்கான வழிமுறையை பார்க்கலாம்.
இரட்டிப்பு பலன் (Double Benefits)
உயர்கல்வி, திருமணம் உள்ளிட்ட எதிர்கால இலக்குகளுக்காக செய்யும் முதலீட்டை பெற்றோர், குழந்தைகள் பெயரிலேயே மேற்கொள்ளலாம்.
வரிச்சலுகை கொண்ட சாதனங்களில் இந்த முதலீடுகளை மேற்கொள்வதன் வாயிலாக, வரி சேமிப்பின் பலனையும் பெறலாம்.
ஏற்ற முதலீடுகள் (Best Investments)
பொது ஷேம நல நிதியான பி.பி.எப்., செல்வ மகள் சேமிப்பு திட்டம் ஆகியவை குழந்தைகள் பெயரில் முதலீடு செய்ய ஏற்ற திட்டங்களாக அமைகின்றன. இவை தவிர, காப்பீடு திட்டங்கள் மற்றும் ஒரு சில மியூச்சுவல் பண்டு திட்டங்களும் ஏற்றவை. இவற்றில் நீண்ட கால நோக்கில் தேவையான தொகையை உருவாக்கலாம்.
வரி சேமிப்பு (Tax Saving)
குழந்தைகள் பெயரில் மேற்கொள்ளும் முதலீட்டில் கிடைக்கும் டிவிடெண்ட் அல்லது வட்டி பெற்றோரின் வருமானத்துடன் சேர்க்கப்பட்டு, வருமான வரம்பிற்கு ஏற்ப வரி விதிப்புக்கு உள்ளாகும். பி.பி.எப்., மற்றும் செல்வமகள் திட்டங்களில் செய்யும் முதலீட்டிற்கு 1.50 லட்சம் ரூபாய் வரை 80 சி பிரிவின் கீழ் வரிச்சலுகை பெறலாம்.
காப்பீடு திட்டங்கள் (Insurance Scheme)
குழந்தைகள் பெயரில் ஆயுள் காப்பீடு அல்லது மருத்துவ காப்பீடு பாலிசி எடுத்திருந்தாலும் அவற்றுக்கு வரிச்சலுகை பெற முடியும். இதே போல, இ.எல்.எஸ்.எஸ்., மியூச்சுவல் பண்டு திட்ட முதலீட்டிற்கும் வரிச்சலுகை கோரலாம். பொருத்தமான யூலிப் பாலிசி வாயிலாகவும் பயன் பெறலாம்.
சேமிப்பு கணக்கு (Savings Account)
குழந்தைகள் பெயரில் துவக்கப்படும் வங்கி சேமிப்பு கணக்கு அல்லது வைப்பு நிதி வாயிலாக கிடைக்கும் வருமானத்தில், 1,500 ரூபாய் வரை வரிச்சலுகை கோரலாம். அதிகபட்சம் இரண்டு மைனர் குழந்தைகளுக்கு இது பொருந்தும். வரி சேமிப்பை தனியே மேற்கொள்ளாமல், மற்ற நிதி இலக்குகளுடன் இணைந்து மேற்கொள்வது சிறந்தது.
மேலும் படிக்க
அனுமதி இன்றி கிரெடிட் கார்டு கொடுத்தால் அபராதம்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!