சென்னை செம்மொழி பூங்காவில் 2-வது மலர் கண்காட்சி தொடங்கிச் சிறப்பாக நடந்து வருகிறது. இதில் பூம்புகார் பட்டினத்தினைத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். இது குறித்த கூடுதல் விவரங்களையும், புகைப்படங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
இம்மலர் கண்காட்சியில் 43 வகையான மலர்கள் அனைத்தும் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் செம்மொழி பூங்காவின் நுழைவு வாயில் பகுதியை ஒட்டிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. மலர்கள் வாடிவிடாமல் இருப்பதற்கு என முற்றிலும் குளிரூட்டப்பட்ட அறையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது.
ஆல்ஸ்ட்ரோமேரியா, சாமந்தி, துலிப், அந்துரியம், ஜெர்பிரா, லில்லியம், ஆர்கிட், ஹெலிகொனியா உள்பட 43 வகையான மலர்கள் கிருஷ்ணகிரி, ஓசூர், மதுரை, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.
கண்காட்சியின் முக்கிய பகுதியாகப் பூம்புகார் பட்டினத்தை அப்படியே கண் முன்னரே காட்டும் விதமாக தத்ரூபமாக மலர்களால் அழகுறக் காட்சிப்படுத்தி வைத்திருக்கின்றனர். காவிரி ஆறு மற்றும் கடலும் இணைகின்ற இடத்தில் அமைந்திருந்த இந்த பூம்புகார் பட்டினத்தில் உள்ள மருவூர்பாக்கம், பட்டினப்பாக்கம், நாளங்காடி ஆகிய பகுதிகளின் நிகழ்வுகளை எடுத்துக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
பூம்புகார் காட்சியினை வெளிப்படுத்தும் விதமாகச் சிலம்பு, தேர், முரசு, யானைகளை கொண்டு போர் அடித்தல், மாட மாளிகை, தோரண வாயல், கூலவீதி முதலானவை வைக்கப்பட்டுள்ளன. மேலும், காய்கறி, பழங்கள், நவதானியங்கள், நெசவு, மீனவர்கள் எனப் பூம்பூகாரைப் பிரதிபலிக்கும் விதமானவற்றைப் பூக்கள், காய்கறி, பழங்கள், நவதானியங்கள், மசாலா பொருட்கள் ஆகியவற்றை கொண்டு அலங்கரித்துள்ளனர்.
இம்மலர் கண்காட்சி திங்கள் வரை நடைபெறுகிறது. கண்காட்சியினைப் பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.50 கட்டண்மாகவும், சிறியவர்களுக்கு ரூ.20 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. tnhorticulture.com என்ற தோட்டக்கலைத் துறை இணையதளத்திலும் முன்பதிவு செய்யலாம்.
மேலும் படிக்க
5 நிமிடங்களில் மண் பரிசோதனை: இனி 15 நாட்கள் காக்க வேண்டியதில்லை!