எவ்வளவு பணம் தேவை? என்பது தனிநபர் நிதியில் அடிக்கடி விவாதிக்கப்படும் கேள்வியாக இருக்கிறது. போதுமான பணம் கைவசம் இருப்பது ஒருவருக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கும். போதிய பணம் இல்லாததே தங்கள் பிரச்னைகளுக்கு எல்லாம் மூலக்காரணம் என பலரும் கருதுகின்றனர்.
எனினும், எந்த அளவு பணம் இருப்பது போதுமானது என்பது விவாதத்திற்கு உரியது. ஓய்வு கால திட்டமிடல் என்று வரும் போதும் இந்த கேள்வி முக்கியமானது. இந்த கேள்விக்கான பதிலை தீர்மானிக்க உதவும் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
தேவை என்ன?
முதலில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை விட, பணத்தை கொண்டு என்ன செய்கிறோம் என்பது முக்கியமானது. இந்த செலவுகள் மகிழ்ச்சி அளிக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். குழந்தைகள் கல்விக்காக செலவிடும் குடும்பங்கள் அதற்கான தியாகங்களை நினைத்து மகிழலாம். நாம் விரும்பும் விஷயங்களுக்கு பணம் இருப்பது முக்கியம்.
பாதுகாப்பு
ஒருவர் தனக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கும் விஷயங்களுக்கு பணத்தை ஒதுக்க வேண்டும். ஒரு சிலர் வங்கி கணக்கில் பணம் இருப்பதை பாதுகாப்பாக உணரலாம். இன்னும் சிலருக்கு சொந்த வீடு அல்லது தங்க நகைகள் பாதுகாப்பை அளிக்கலாம். எனினும் இவற்றில் மிகை அணுகுமுறை வேண்டாம்.
பெரிய செலவுகள்
பல்வேறு தேவைக்காக மேற்கொள்ளப்படும் பெரிய செலவுகளை பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். அந்த செலவுகள் மகிழ்ச்சியை அளிக்கின்றனவா என பார்க்க வேண்டும். பயனில்லாத செலவுகளை தவிர்க்க வேண்டும். ஆனால், செலவு செய்யாமல் இருப்பதும் ஏற்புடையது அல்ல.
சேமிப்பின் பலன்
வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை சேமித்து முதலீடு செய்வது அவசியமானது தான். ஆனால், பணத்தை சேர்ப்பது மட்டும் மகிழ்ச்சி அளிக்காது. சில நேரங்களில் பணத்தை பாதுகாக்கும் கவலையும் வரலாம். சேர்த்து வைக்கும் செல்வத்தை எப்படி செலவிடுகிறோம் என்பதும் முக்கியம்.
நன்கொடை
பணம் தொடர்பான ஆய்வுகள், பணத்தை மற்றவர்களுக்கு கொடுப்பதும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கின்றன. எனவே, அவரவர் சக்திக்கு ஏற்ப நன்கொடை அளிக்கலாம். நெருக்கமானவர்களுக்கும் கொடுக்கலாம். பணத்தை வைத்துக்கொண்டு செய்யும் செயல்களே மகிழ்ச்சியை தீர்மானிக்கின்றன.
மேலும் படிக்க