காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில், அஞ்சல் துறையில் பலவித சேமிப்பு கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஆயுள் காப்பீடு மற்றும் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்ட பாலிசிகள் எண்ணிக்கையும் இரு மடங்கு உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் அஞ்சலக கோட்டத்தின் கீழ், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய தலைமை தபால் நிலையங்கள், 54 துணை அஞ்சலகங்கள், 273 கிளை தபால் நிலையங்கள் உள்ளன.
இங்கு, செல்வ மகள் சேமிப்பு திட்டம், தொடர் வைப்பு கணக்கு, முதியோர் சேமிப்பு திட்டம், பொன்மகன் வைப்பு நிதி, கால வைப்பு கணக்கு, மாதாந்திர வருமான திட்டம் செயல்படுத்தப்படுகின்றன. மேலும், அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், கிஸான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.
அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் (Post Office Schemes)
அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு, 4 சதவீத வட்டியில் இருந்து, வாடிக்கையாளர் எடுக்கும் திட்டங்களுக்கு ஏற்றவாறு, 8.5 சதவீதம் வட்டி வரை, அஞ்சல் துறை வழங்கி, சேமிப்பு கணக்குகள் துவக்குவதை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில், 2020 - 21ம் ஆண்டு, 77 ஆயிரத்து 992 அஞ்சல் கணக்குகள் துவக்கப்பட்டன. நடப்பாண்டு, 2021 - 22ம் நிதி ஆண்டில், 99 ஆயிரத்து 459 கணக்குகள் துவக்கப்பட்டு உள்ளன. 21 ஆயிரத்து 467 கணக்குகள் அதிகரித்துள்ளன.
மேலும், கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில், கடந்த ஆண்டு, 2,263 பாலிசிகள் துவக்கப்பட்டன. நடப்பாண்டு, 4,922 பாலிசிகள் துவக்கப்பட்டு உள்ளன. இது, கடந்த ஆண்டைவிட 2,659 பாலிசிகள் அதிகமாகும்.
காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முரளி கூறியதாவது: காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில் பலவித அஞ்சல் கணக்குகள் துவக்குவதில், முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக, அஞ்சல் துறை மண்டலத்தில், காஞ்சிபுரம் கோட்டம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில், அஞ்சல் துறை ஊழியர்களின் ஒத்துழைப்பால், புதிய பாலிசிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
மேலும் படிக்க
தொழில் முனைவோருக்கு புதிய செயலி: ஐசிஐசிஐ வங்கி அசத்தல்!
அமைதிப்படையில் பணியாற்றிய 1,160 இந்திய வீரர்களுக்கு ஐ.நா. விருது!