கோவை கணபதியை சேர்ந்த, அரசு பஸ் கண்டக்டர் யோகநாதன், கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தனி நபராக மரக்கன்றுகளை (saplings) நட்டு, வளர்க்கும் பணியை செய்து வருகிறார். பஸ் கண்டக்டர் பணியில் இருந்து கொண்டே, வார விடுமுறை நாட்களில் பொதுமக்களிடம் சூழலியல் குறித்த விழிப்புணர்வை, ஏற்படுத்தி வருகிறார். பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை வளாகங்கள் என, பல்வேறு இடங்களில் பல லட்சம் மரங்களை நட்டு வளர்த்து இருக்கிறார். மரம் வளர்க்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு, மரக்கன்றுகளை இலவசமாக வழங்குகிறார்.
சுற்றுச்சூழல் செயல் வீரர் விருது
இவரது சேவையை பாராட்டி, மத்திய அரசு சுற்றுச்சூழல் துறை சார்பில், சுற்றுச்சூழல் செயல் வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது. 'எக்கோ வாரியர்' விருது, அமெரிக்காவின் கிண்டர் லேண்ட் அமைப்பின் 'அன் சங் ஹீரோ' விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்று உள்ளார். சமீபத்தில் நமது பிரதமர் மோடி (PM Modi), தனது 'மன் கி பாத்' உரையில் இவரது சேவையை பாராட்டி பேசியதையடுத்து, இவரது 'இன்பாக்ஸ்' வாழ்த்துக்களால் நிரம்பி வழிகிறது.
ஆர்வம்
எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர். 40 ஆண்டுகளுக்கு முன்பே கோத்தகிரிக்கு வந்து விட்டோம். இயற்கை சூழலில் வாழ்ந்ததால், சூழலியல் மீது தனி ஆர்வம் ஏற்பட்டது. 1987ம் ஆண்டு, கோத்தகிரி பகுதியில் மரங்களை வெட்டக்கூடாது என, ஒரு பொதுநல அமைப்பு போராட்டம் நடத்தியது. அவர்களோடு இணைந்து நானும் போராடினேன். அப்போது தான், மரம் வளர்க்க வேண்டும், வனம் மற்றும் வன உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. பஸ் கண்டக்டர் வேலை கிடைத்ததால், கோவை வந்து விட்டேன். விடுமுறை நாட்களில் மட்டும் மரக்கன்றுகளை நடுகிறேன்.
நல்ல கானுயிர் படங்களை சேகரித்து, சிலைடு தயாரித்து வைத்து இருக்கிறேன். அதை புரொஜெக்டர் (Projector) மூலம் பள்ளி, கல்லுாரிகளுக்கு எடுத்துச்சென்று சிலைடு ஷோ நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். மரங்கள், சுற்றுச் சூழலின் முக்கியத்துவம் குறித்து, மாணவர்களிடம் உரையாற்றுகிறேன். பள்ளி வளாகத்தில் இடம் இருந்தால், பள்ளி நிர்வாகத்தின் உதவியுடன் மரக்கன்றுகளை கொடுத்து நட உதவுகிறேன்.
எத்தனை மரங்கள் நட்டு இருக்கிறீர்கள்?
இதுவரை, 3.5 லட்சம் மரங்கள் நட்டு வளர்த்து இருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில், 1.25 லட்சம் மரக்கன்றுகளை, பொதுமக்களுக்கு இலவசமாக கொடுத்து இருக்கிறேன். நான் நட்ட 90 மரங்கள் வளர்ந்துள்ளன. கொடிசியா வளாகத்தில் நான் நட்ட பல மரங்கள் நன்றாக வளர்ந்துள்ளன. பெருந்துறையில் உள்ள உள்ள சிப்காட் வளாகத்தில், இம்மாதம் 2,000 மரக்கன்றுகள் நட இருக்கிறேன்.
என்ன மாதிரியான மரக்கன்றுகள்
நம் மண்ணுக்கு உரிய மரபு சார்ந்த, வேம்பு, பூவரசு, கருவேலம், வாகை, உசிலை உள்ளிட்ட மரங்களை நடுகிறேன். எந்த வகை மண்ணில் என்ன மரம் வளரும் என, எனக்கு தெரியும். அதற்கு ஏற்ப மரக்கன்றுகளை தேர்வு செய்து நடுகிறேன்.
மரம் நடும் விழா, தேவை இல்லை
பல ஆண்டுகளாக என் சம்பளத்தில் இருந்து, ஒரு தொகையை இதற்காக ஒதுக்கி, மரக்கன்றுகள் வாங்கி இலவசமாக கொடுத்து வந்தேன். கோவையை சேர்ந்த வாசுதேவன் (Vasudevan) என்பவர், அமெரிக்காவில் ஐ.டி., துறையில் பணியாற்றுகிறார். அவருக்கு ஆலந்துறையில் சொந்த நிலம் உள்ளது. என் பணியை பற்றி கேள்விப்பட்டு, அவரது நிலத்தின் ஒரு பகுதியில், மரக்கன்று பதியம் போட்டு வளர்க்க அனுமதி கொடுத்துள்ளார். ஒரு சில அமைப்பினரை தவிர, மற்றவர்கள் எல்லாம் விளம்பர பிரியர்கள். மரக்கன்று நடும் விழா மட்டும் தான் நடத்துவார்கள். நட்டதை மரமாக வளர்க்க மாட்டார்கள். மரம் நடும் விழா, தேவை இல்லை. நட்ட மரம் வளர்ந்த பிறகு விழா எடுக்க வேண்டும். அதனால் நான் தனியாக செயல்படுகிறேன்.கல்லுாரி மாணவர்கள், உண்மையான இயற்கை ஆர்வலர்கள் பலர் உள்ளனர். அவர்களுடன் இணைந்து செயல்படுகிறேன்.
பிரதமர் மோடி பாராட்டு
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 'யோக நாதன் பஸ் கண்டக்டராக இருந்து கொண்டு, சூற்றுச் சூழலை பாதுகாக்க நிறைய பணி செய்து வருகிறார். தேச மக்கள் இவரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அவரை வாழ்த்த வேண்டும்' என, தனது உரையில் குறிப்பிட்டு இருக்கிறார். தொலைபேசியில் அழைத்து பேசுவார் என கூறி உள்ளனர். பிரதமரின் (Prime minister) இந்த பாராட்டு, தொடர்ந்து சேவை செய்யும் உற்சாகத்தை அளித்துள்ளது.
மரம் வளர்க்க வேறு என்ன திட்டம்
வரும் ஜூன் மாதம் முதல், கிராமப்புறங்களில் மா (Mango), பலா, கொய்யா, நெல்லி மற்றும் தென்னை (Coconut) என, ஐந்து மரங்கள் நடும் திட்டத்தை, செயல்படுத்த இருக்கிறேன். வீடுகளில் இடம் இருந்தால், நானே கன்றுகளை நட்டு வளர்த்து கொடுத்து விடுவேன். இதன் மூலம் அவர்களுக்கு, நல்ல வருமானம் (Income) கிடைக்கும். ஊருக்குள் பொது இடங்களிலும் நட்டு வளர்க்கலாம். நாடு முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வெப்ப அயற்சியிலிருந்து கோழிகளைப் பாதுகாக்க தெளிப்பான்களை உபயோகிக்கலாம்! ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்!
இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி!