புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
பழைய பென்சன் திட்டம்
தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இதற்கு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் தற்போது பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தாமல் ஏமாற்றுவதாக அரசு ஊழியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மாநிலம் முழுவதும்
தமிழ்நாடு அரசு ஊழியர் மாநில செயற்குழு முடிவின்படி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அப்போது அகவிலைப்படி, சரண் விடுப்பு, வருங்கால வைப்பு நிதி, வட்டி குறைப்பு உள்ளிட்ட கொரானா தொற்றுக் காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை உடனே வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அரசுத்துறைகளில் காலியாக உள்ள 4.5 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் எனவும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், MRB செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும் இந்தப் போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
பணி வரன்முறை
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி வரன்முறை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அரசு பரிசீலனை
போராட்டங்கள் வலுத்து வருவதால், அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
ரூ.2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை- TNPSC அறிவிப்பு!
இதய ஆரோக்கியத்திற்கு தினமும் 3 அல்லது 4 முந்திரி!