ஊழியர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முன்வந்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
ஒவ்வொரு மாநிலமாக பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் எப்போது அமலாகும் என்று தமிழக அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.
பழைய பென்சன்
அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளில் மிக முக்கியமான ஒன்று பழைய பென்சன் திட்டம். ஏனெனில், தற்போது அமலில் உள்ள CPS எனப்படும் பங்களிப்பு பென்சன் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை. இதில் இழப்புகள் அதிகம் எனவும் கூறப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் இத்திட்டத்தை அமல்படுத்தக் கோரி வலியுறுத்தி வருகின்றன.
ஜார்கண்டில் அமல்
ஒரு சில மாநிலங்கள் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தியுள்ள நிலையில் அந்த வரிசையில் தற்போது ஜார்கண்ட் மாநிலமும் இணைந்துள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ட்வீட் செய்துள்ளார். அதில், தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்ற இப்போது நேரம் வந்துவிட்டது எனவும், ஊழியர்களின் நலனுக்காக பழைய பென்சன் திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமல்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களும், பழைய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வருமா என எதிர்பார்க்கின்றனர்.பழைய ஓய்வூதியத் திட்டத்தை கட்டாயம் செயல்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, தற்போது நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி மறுப்பது சரியல்ல எனவும் அரசு ஊழியர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தாலும் அதில் பிரச்சினைகள் இருப்பதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது. அவ்வாறு, மாநில அரசுகள் மீண்டும் பழைய பென்சன் திட்டத்தைக் கொண்டுவந்தால் நிதி ரீதியாக பெரிய நெருக்கடியைச் சந்திக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் படிக்க...