அரசு ஊழியர்களை சார்ந்து வாழும் மகன் மற்றும் மகளை, அவர்களின் வயது வரம்பை கருத்தில் கொள்ளாமல், மருத்துவ காப்பீட்டு (Medical Insurance) திட்டத்தில் இணைக்க, தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ காப்பீட்டு திட்டம் (Medical Insurance Scheme)
அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் 25 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மட்டும் சேர்க்கப்பட்டனர். காப்பீட்டு தொகை, ஐந்து லட்சம் ரூபாயில் இருந்து, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும், 'பிரிமீயம்' தொகை, 300 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
அரசாணை (Government Order)
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், 25 வயதுக்கு மேற்பட்ட பணியில் இல்லாத, திருமணமாகாத மகன் மற்றும் மகள்களையும் சேர்க்கும்படி, அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. அதை ஏற்று, அரசு ஊழியர்களை சார்ந்து வாழும் மகன்கள் மற்றும் மகள்களை, வயது வரம்பை கருத்தில் கொள்ளாமல் சேர்க்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வேலை இல்லாத குழந்தைகள், உயர் கல்வி கற்கும் குழந்தைகள், திருமணமாகாத, சட்டப்படி விவகாரத்து பெற்ற மகள்கள், மனநிலை சரியில்லாத குழந்தைகள் போன்றோர், அரசு ஊழியர் காப்பீட்டு திட்டத்தில் பயன் பெறலாம். இதற்காக, 1.09 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க