பொருளாதார மந்தநிலை அச்சம் குறித்த பேச்சு தற்போது தினமும் செய்திகளில் அடிபடுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக எம்.என்.சி., டெக் கம்பெனிகள் பல ஆயிரம் பணியாளர்களை வேலையை விட்டு தூக்கி வருகிறது. கடுமையாக உழையுங்கள் இல்லையெனில் உங்கள் வேலையும் பறிக்கப்படும் என பயமுறுத்தியும் வருகின்றனர்.
தனியார் ஊழியர்கள் (Private Employees)
கோவிட் தொற்றினால் உலகளவில் போடப்பட்ட ஊரங்கு பல்வேறு தொழில்களை முடக்கியது. கடந்த 2021 இறுதியிலிருந்து மெல்ல பொருளாதாரம் மீண்டு வந்தது. அந்த சமயத்தில் அமெரிக்காவில் பணவீக்கம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்திருந்தது. இந்தாண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா - உக்ரைன் போர் ஏற்பட்டதால் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலையும் உயர்ந்தது. இது ஏற்கனவே எகிறிக்கிடந்த விலைவாசியை இன்னும் உயர்த்தியது. இதனால் அனைத்து நாடுகளின் மத்திய வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. தொழில்நுட்பங்களுக்கு செலவிடுவதை குறைக்கின்றன. இது தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலை இழப்பு (Job loss)
இந்தாண்டில் மட்டும் உலகளவில் பல பெருநிறுவனங்கள் தங்களின் செலவை குறைக்கும் நோக்கில் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. உலகின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான மைக்ரோசாப்ட் ஜூலையில் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்கள் நிறுவனங்களில் இருந்து 1,800 ஊழியர்களின் சீட்டை கிழித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஒப்பந்த பணியில் இருந்த வேலைக்கு ஆள் தேர்வு செய்யும் 100 நபர்களையே வீட்டு அனுப்பியுள்ளது. புதிய நபர்கள் எடுப்பதை கட்டுப்படுத்த மற்றும் செலவை குறைக்க இந்நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.
சீன டெக் நிறுவனமான டென்சென்ட்டின் காலாண்டு வருவாய் முடிவுகள் திட்டமிட்டப்படி இல்லாததால் வேலை நீக்கத்தை அறிவித்தது. கடந்த காலாண்டில் மட்டும் 5,500 பேரை வேலையை விட்டு தூக்கியுள்ளது.
பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் ஜூன் மாதம் 3,00 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மே மாதமும் இந்நிறுவனம் 150 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது. இதன் வரவு - செலவு பாதிக்கப்பட்டதால் இந்நடவடிக்கையில் இறங்கியது.
டுவிட்டர் நிறுவனம் ஜூலையில் வேலைக்கு ஆள் எடுக்கும் குழுவிலிருந்து 30 சதவீதம் பேரை பணி நீக்கியது. மேலும் 100 பணியாளர்களை நீக்கியுள்ளது.
மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஜூலையில் அமெரிக்க அலுவலகங்களிலிருந்து 229 பேரை தூக்கியது.
டெக் அசுரன் கூகுள், கடுமையாக உழைக்க வேண்டிய காலக்கட்டம், இல்லையேல் வீட்டுக்கு செல்ல வேண்டியிருக்கும் என தங்கள் ஊழியர்களை எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க