மத்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வாயிலாக வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ) விகிதம் 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வுக்குப் பிறகு ரெப்போ வட்டி 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பணவீக்கம் தற்போது கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியிருக்கிறது.
ரெப்போ வட்டி (Repo Interest)
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் பொதுமக்களுக்கு அதிக சுமை ஏற்பட உள்ளது. ஏனெனில், ரெப்போ வட்டி உயர்வில் தாக்கம் மற்ற அனைத்து வங்கிக் கடன்கள் மீதும் இருக்கும். அதாவது வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு அதிக சுமை ஏற்படும். எனினும் ஃபிக்சட் டெபாசிட் போன்ற திட்டங்களில் பணம் போட்டவர்களுக்கு சலுகை கிடைக்கலாம்.
இன்றைய நாணயக் கொள்கைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய ரிசர்ச் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), பணவீக்கம் ஆகியவற்றின் மதிப்பீடுகளையும் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 16.2 சதவீதமாகவும், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 6.2 சதவீதமாகவும், அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 4.1 சதவீதமாகவும், ஜனவரி - மார்ச் காலாண்டில் 4 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கத்தைப் பொறுத்தவரையில், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 7.1 சதவீதமாகவும், அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 6.4 சதவீதமாகவும், ஜனவரி - மார்ச் காலாண்டில் 5.8 சதவீதமாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
EPFO: இணையத்தில் கசிந்த தகவல்கள்: பென்சனர்கள் அதிர்ச்சி!
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கணக்கீடு: மத்திய அரசு ட்விஸ்ட்!