தமிழர்களின் பண்டிகையான பொங்கலுக்கு 5,000 ரூபாய் மதிப்புள்ள தொகுப்பை வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது
2023 ஆம் ஆண்டு தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதி வாய்ந்த அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், 1,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.5,000
இந்நிலையில், தமிழர்களின் பண்டிகையான பொங்கலுக்கு 5,000 ரூபாய் மதிப்புள்ள தொகுப்பை வழங்க வேண்டும் என்று, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
நிதிச்சுமை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:ஓரிரு மாதங்களுக்கு முன்னர், ஏழை, எளிய மக்கள் தமிழக அரசு அன்றாடம் பயன்படுத்தும் பால் விலையையும், பால் பொருட்களின் விலையையும் உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றியது. இந்த மாதமும், வருகிற மாதமும் பண்டிகைக் கால மாதம் ஆகும்.
உள்நோக்கம்
இந்தக் காலங்களில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகமாக பயன்படுத்தும் நெய் விலையை அரசு உயர்த்தி மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றி இருக்கிறது. பண்டிகைக் காலங்களில் மக்கள் நெய்யை அதிகம் பயன்படுத்துவார்கள் என்று தெரிந்தே அவற்றின் விலையை உயர்த்தி இருப்பது, தமிழக அரசு, மக்களின் நலனில் அக்கறையில்லாமல், வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவது நிதர்சனமாக தெரிகிறது.
எனவே அடுத்த மாதம் தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு வருடந்தோறும் வழங்கக் கூடிய பொங்கல் தொகுப்பை கால தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். இவற்றிற்கான பொருட்களை விவசாயிகளிடம் இருந்து கரும்பு மற்றும் வெல்லம், பருப்பு வகைகளை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
மேலும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன் பெறும் வகையில் 5,000 ரூபாய் மதிப்புள்ள தரமான பொங்கல் தொகுப்பை அரசு வழங்க வேண்டும். அதோடு மக்களை நேரடியாக பாதிக்கும் நெய் விலை உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் படிக்க...
காய்கறி சாகுபடிக்கு ரூ.80,000 மானியம்- தொடர்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!