செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட சூரிய கிரகணத்தை நாசாவின் 'பெர்சிவிரன்ஸ் ரோவர்' விண்கலம் படம் பிடித்துள்ளது. பூமிக்கு ஒரு நிலவு உள்ளது. செவ்வாய்க்கு 'போபஸ்', 'டெய்மாஸ்' என இரு நிலவு உள்ளது. பூமியின் நிலவை விட 'போபஸ்' 157 மடங்கு சிறியது. இது செவ்வாய் கோளை 9375 கி.மீ., தூரத்தில் இருந்து சுற்றுகிறது. 'டெய்மாஸ்' அதை விட சிறியது.
சூரிய கிரகணம் (Solar Eclipse)
பூமி - சூரியன் இடையே நேர்கோட்டில் நிலா வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அதுபோல சூரியன் - செவ்வாய் இடையே, செவ்வாயில் உள்ள நிலா வரும் போது அங்கு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ஏப்ரல் 2ல் செவ்வாயில் ஏற்பட்ட இந்நிகழ்வை நாசா விண்கலம் படம் பிடித்தது. இது 40 வினாடி மட்டுமே நீடித்தது. செவ்வாயின் நிலவு வேகமாக சுற்றுவதே இதற்கு காரணம். கிரகணத்தின் அளவும், பூமி கிரகணத்துடன் ஒப்பிடும் போது மிக சிறியது.
நாசா விஞ்ஞானி ராச்செல் ஹாவ்சன் கூறுகையில், 'சூரிய கிரகணத்தை படம் பிடித்தது ஒரு அற்புத நிகழ்வு. இக்கண்டுபிடிப்பு செவ்வாய் நிலவின் சுற்றுப்பாதை, செவ்வாயின் புவி ஈர்ப்பு விசை குறித்து அறிந்து கொள்ள உதவும்' என்றார்.
ஏற்கனவே 2012ல் நாசாவின் 'கியூரியாசிட்டி' விண்கலம் செவ்வாயின் சூரிய கிரகணத்தை படம் பிடித்துள்ளது. 2021ல் செவ்வாயில் தரையிறங்கிய 'பெர்சிவிரன்ஸ்' ரோவரில் பொருத்தப்பட்ட அதிநவீன கேமரா மூலம் தற்போது முதன்முறையாக துல்லியமாக படம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
அனுமதி இன்றி கிரெடிட் கார்டு கொடுத்தால் அபராதம்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!