உட்புற அறையில் குங்குமப்பூ சாகுபடியில் ஈடுபடுவதன் மூலம் லட்சங்களில் வருமானம் பார்ப்பதோடு கிராமப்புற பெண்கள் பொருளாதார ரீதியில் மேம்படுவதை உறுதி செய்துள்ளார் 64 வயதான உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுபா பட்நாகர்.
64 வயதில், பலர் அமைதியான வாழ்க்கையினை நோக்கி செல்ல எண்ணும் நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள மைன்புரி மாவட்டத்தைச் சேர்ந்த சுபா பட்நாகர், ஒரு புதிய திசையில் பயணிக்கத் தொடங்கினார். தனது குழந்தைகளையும் பேரக்குழந்தைகளையும் வளர்த்த பிறகு, சுபா, தனது நீண்ட கால ஆர்வமான விவசாயத்தில் கால் பதிக்க விரும்பிய போது, பின்னாளில் ஏற்பட்ட புரட்சிக்கர மாற்றத்தை ஒருபோதும் முன்னரே அறிந்ததில்லை என்பது தான் சுவராஸ்யம்.
உட்புற குங்குமப்பூ சாகுபடி: 16 லட்சம் வருமானம்!
குங்குமப்பூ சாகுபடி வெற்றிகரமான தொழிலாக மாறியது, சுபாவின் குடும்பத்தை மட்டுமல்ல, உள்ளூர் சமூகத்தையும் பல்வேறு வகையில் மேம்படுத்தியுள்ளது. குங்குமப்பூ சாகுபடியின் இரண்டாவது ஆண்டில், சுபாவும் அவரது குடும்பத்தினரும் ₹16 லட்சம் மதிப்பிலான குங்குமப்பூவை சாகுபடி செய்துள்ளனர். வரும் ஆண்டில் இது கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
“எனக்கு எப்போதுமே விவசாயத்தில் ஆர்வம் உண்டு, ஆனால் நேரக் கட்டுப்பாடுகள் என்னை முழுமையாக ஈடுபட அனுமதிக்கவில்லை. இப்போது, பல பொறுப்புகளில் இருந்து விடுபட்டு, புதிதாக ஒன்றைத் தொடங்க விரும்பினேன்,” என்று சுபா தன் ஆரம்பக்கால நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில் பேரக்குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தொடங்கியதால் சுபாவின் தினசரிப் பொறுப்புகள் குறைந்துவிடத் தொடங்கின. உட்புறமாக (INDOOR) குங்குமப்பூவை வளர்க்கும் யோசனையை தனது குடும்பத்தினருடன் விவாதிக்கத் தொடங்கினார். அவரது கணவர் குளிர்பதன கிடங்கு வியாபாரம் செய்து வந்தார். அவரது மகன் மற்றும் மருமகள் இருவரும் பொறியாளர்கள். சுபாவின் யோசனையினை கேட்டு குடும்பத்தினர் ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்தனர், ஆனால் விரைவில் ஆர்வமாகி உதவ முன்வந்தனர்.
காஷ்மீரின் தனித்துவமான மண் மற்றும் தட்பவெப்ப நிலையில் பொதுவாக வளர்க்கப்படும் குங்குமப்பூவை, மைன்புரியில் வீட்டிற்குள் உட்புறமாக எவ்வாறு பயிரிடலாம் என்பதை பற்றி யோசிக்கத் தொடங்கினார். சுற்றுச்சூழலைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குறிப்பாக IoT (Internet of things) எவ்வாறு சிறந்த முறையில் உதவும் என்பது குறித்தும் ஆராய்ந்தனர்.
ஏன் குங்குமப்பூ சாகுபடி?
குங்குமப்பூ சுபாவின் கவனத்தை ஈர்த்தமைக்கு காரணம், சந்தையில் அதற்குள்ள அதிக தேவை என்பது மட்டுமல்ல. அதன் அரிதான தன்மை மற்றும் ஆரோக்கிய நன்மைகளும் கூட. இந்தியில் கேசர் என்று அழைக்கப்படும் குங்குமப்பூ உலகின் மிக விலையுயர்ந்த மசாலாப் பொருட்களில் ஒன்றாகும், இது சமையல் நோக்கங்களுக்காக மட்டுமல்ல, அதன் மருத்துவ குணங்களுக்காகவும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
"நான் வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்பினேன்-எனது நகரத்திற்கு ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொடுக்க எண்ணினேன். காளான் வளர்க்கவும் திட்டமிருந்தது, ஆனால் பலர் ஏற்கனவே அதைச் செய்கிறார்கள். குங்குமப்பூ தனித்தன்மை வாய்ந்தது. மேலும் அதற்கு அதிக கிராக்கி இருந்தும் சந்தையில் குறைவாகவே கிடைக்கும்,” என்று சுபா தன் திட்டங்களை குறித்தும் விளக்கினார்.
“நாங்கள் காஷ்மீரில் குங்குமப்பூ விவசாயிகளைச் சந்தித்து அவர்களுடன் 8 முதல் 10 நாட்கள் கழித்தோம். அவர்கள் பயன்படுத்தும் மண் வகை, குங்குமப்பூவை பயிரிடும் செயல்முறை, எவ்வளவு காலம் எடுக்கும், எந்தெந்த வெப்பநிலையில் குங்குமப்பூ செழித்து வளரும் என்பதைப் பற்றிய நுண்ணறிவை அவர்களிடமிருந்து பெற்றோம்,” என்று சுபா நினைவு கூர்ந்தார்.
காஷ்மீரிலிருந்து மைன்புரிக்குத் திரும்பி 560 சதுர அடியில் குளிர்பதனக் கிடங்கு அறையை அமைத்தனர். இங்கே, அவர்கள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் செங்குத்து தட்டுகளைப் பயன்படுத்தி குங்குமப்பூவை வளர்ப்பதற்கான சோதனையைத் தொடங்கினர்.
குங்குமப்பூ சாகுபடியில் IoT மற்றும் ஏரோபோனிக்ஸ் பங்கு:
சுபாவின் மகன் அங்கித் மற்றும் மருமகள் மஞ்சரி, பொறியியல் பின்னணியுடன், ஏரோபோனிக்ஸ் பயன்படுத்தி குங்குமப்பூவை வீட்டிற்குள் வளர்ப்பதற்கான வழிகளை ஆராய்ச்சி செய்தனர் - இது ஒரு நவீன முறையிலான விவசாய தொழில்நுட்பமாகும், இது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் மண் இல்லாமல் பயிர்களை வளர அனுமதிக்கிறது. இந்த முறை குங்குமப்பூவிற்கு சரியானதாகத் தோன்றியது, இதற்கு குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் தேவை.
IoT சாதனங்கள் மற்றும் சென்சார்களைப் பயன்படுத்தி காஷ்மீரின் தட்பவெப்ப நிலையைப் பிரதிபலிப்பதன் மூலமும், பத்து வருட குங்குமப்பூ உற்பத்தித் தரவை பகுப்பாய்வு செய்வதன் மூலமும், குங்குமப்பூ சாகுபடிக்கான சிறந்த சூழ்நிலையை அவர்களது குளிர் சேமிப்பு அறையில் மீண்டும் உருவாக்க முடிந்தது.
“ஏரோபோனிக்ஸ்க்கு அதிக நிலம் தேவையில்லை, செங்குத்து விவசாயம் முறையில் குறைந்த இடத்தில் அதிக அளவில் வளர அனுமதிக்கிறது. இது குறைவான தண்ணீரைப் பயன்படுத்துகிறது, பூச்சிக்கொல்லிகள் தேவையில்லை. பூச்சிகள் அல்லது கணிக்க முடியாத வானிலையால் பாதிக்கப்படாது," என்றும் சுபா தன் விவசாய சாகுபடி முறைகள் குறித்து தெரிவித்தார்.
IoT சாதனங்கள் மற்றும் சென்சார்கள் ஆகியவை, குங்குமப்பூவின் சிறந்த வளரும் நிலைமைகளைப் பிரதிபலிக்க வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் CO2 அளவுகள் போன்ற காரணிகளை உன்னிப்பாகக் கண்காணித்து கட்டுப்படுத்துகின்றன.
Read also: நெற்பயிருக்கான உரம் டூ கால்நடை தீவனம்: அசோலாவின் தன்மை என்ன?
சாகுபடி பரப்பை அதிகரிக்கத் திட்டம்:
"சுமார் 3 முதல் மூன்றரை மாதங்களில், ஊதா நிற குங்குமப்பூ பூக்கள் பூத்து அறுவடைக்கு தயாராக இருந்தது” சுபா பெருமையுடன் கூறுகிறார். குடும்பத்தினர் தங்கள் வணிகத்திற்கு 'சுபவ்னி ஸ்மார்ட் ஃபார்ம்ஸ்' (Shubhavni Smart Farms) என்று பெயரிட்டனர். ஷுபாவ்னி, அதாவது "எங்கள் புனித பூமி" என அர்த்தம். 20-க்கும் மேற்பட்ட பெண்கள் சுபாவின் குங்குமப்பூ சாகுபடி பண்ணையில் பணி புரிந்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் இதன் மூலம் மேம்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுபாவின் குங்குமப்பூ இப்போது சமூக ஊடக தளங்கள் மூலம் ஆன்லைனில் விற்கப்படுகிறது. அதன் தூய்மை மற்றும் தரத்தின் காரணமாக குங்குமப்பூவின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குங்குமப்பூ சாகுபடியில் வெற்றி பெற்றதால், சுபாவும் அவரது குடும்பத்தினரும் உற்பத்தியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.
அவர்கள் உற்பத்தியை இரட்டிப்பாக்கவோ அல்லது மும்மடங்காகவோ அதிகரிக்க வேண்டும் என்ற இலக்குடன், இரண்டாவது குளிர்சாதன அறையைக் கட்டவும், சாகுபடி பரப்பை அதிகரிக்கவும் தயாராகி வருகின்றனர். வருடத்திற்கு இரண்டு குங்குமப்பூ அறுவடைகளை நடத்தவும், உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
Read more:
6 வது ஆண்டில் PM-KMY: குறைந்த பிரீமியத்தில் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம்!
தென்னை இலையில் V வெட்டு & வளர்ச்சி பாதிப்பு- காண்டாமிருக வண்டுக்கு தீர்வு என்ன?