ஹர்ஷிதா பிரியதர்ஷினி மொஹந்தி அரிய நெல் மற்றும் தினை வகைகளின் விதைகளை சேகரித்து விதை வங்கி ஒன்றினை நிறுவி அதன் மூலம் பராமரித்து வருகிறார். இதுபோல் நிறைய பேர் இருக்கிறார்களே, இவர் மட்டும் என்ன ஸ்பெஷல் என கேட்பவர்களுக்கு ஹர்ஷிதா 7 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு பள்ளி மாணவி. ஆச்சரியமாக இருக்கிறாதா? ஒடிசாவின் விதை மகள் என அன்போடு அழைக்கப்படும் ஹர்ஷிதா குறித்து தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.
ஒடிசா மாநிலம் கோராபுட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி ஹர்ஷிதா. இவர் தனது வீட்டில் 150-க்கும் மேற்பட்ட அரிய வகை நெல், 53 வகையான finger millets மற்றும் 7 வகையான முத்து தினை விதைகளை பாதுகாத்து உணவு தானியம் மற்றும் விதை வங்கியை அமைத்துள்ளார்.
இந்த சிறிய வயதில் எப்படி விதைகள் மீது ஆர்வம் வந்தது, அதற்கு யார் காரணம் என அவரிடம் கேட்டால் அவர் கூறும் பெயர் கமலா பூஜாரி. ஆமாம், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவும், பல்வேறு நெல் வகைகளின் 100-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விதைகளைப் பாதுகாப்பதற்காகவும் அறியப்பட்ட அதே கமலா பூஜாரி தான்.
ஹர்சிதா தனது ‘விதை’ பயணத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார். மாவட்டத்தின் ஜெய்ப்பூர், போய்பரிகுடா, குந்த்ரா மற்றும் போரிகும்மா பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு சந்தைகள் மற்றும் விவசாயிகளிடமிருந்து பல வகையான நெல் மற்றும் தினை விதைகளையும் சேகரிக்கத் தொடங்கியவர் இன்றுவரை அதை தொடர்ந்து செய்து வருகிறார். இதையடுத்து, அவர் தனது வீட்டில் உணவு தானியங்கள் மற்றும் விதைகளை பராமரிக்க விதை வங்கியை அமைத்தார். கண்ணாடி பாட்டிலில் அவற்றை பத்திரமாக சேமித்து பாதுகாத்து வருகிறார்.
பள்ளி சிறுமியினான ஹர்சிதாவின் இந்த பணி சுற்றுவட்டார விவசாயிகள் மட்டுமின்றி வேளாண் அரசு அலுவலர்கள் வரை அனைவரின் கவனத்தையும் பெற்றது. ஹர்சிதாவின் செயலினை கௌரவிக்கும் விதமாக சமீபத்தில் புதுதில்லியில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் சார்பில் நடைப்பெற்ற விவசாயிகளின் உரிமைகள் குறித்த உலகளாவிய கருத்தரங்கில் பங்கேற்கும் வாய்பினை பெற்றார்.
உலகம் முழுவதுமிருந்து 125 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஹர்ஷிதா தனது விதை சேகரிப்பு பணிகள் குறித்தும், இயற்கை விவசாயம் பற்றியும் பேசினார். மேலும் தான் சேகரித்த விதைகளை கண்காட்சியில் மற்றவரின் பார்வைக்கும் காட்சிப்படுத்தினார்.
இதுமட்டுமின்றி ‘ஹர்ஷிதா பிரியதர்ஷினி சயின்ஸ் கிளப்’ என ஒன்றை உருவாக்கி, தனது நண்பர்கள் மற்றும் உள்ளூர் விவசாயிகளை அதில் இணைத்துள்ளார். இந்த கிளப் மூலம், அரிய வகை நெல் சாகுபடிக்கு உதவும் விதைகள் மற்றும் நாட்டில் விளையும் உணவு தானியங்களின் விதைகளை இலவசமாக வழங்குகிறார்.
இதுக்குறித்து ஹர்ஷிதா தெரிவிக்கையில், “கோராபுட்டின் இயற்கைப் பொக்கிஷத்தைப் பற்றி ஒருவர் பேசினால், அது அதன் இயற்கை அழகை மட்டுமல்ல, அதன் நெல் மற்றும் தினை வளத்தையும் குறிக்கும். கமலா பூஜாரியின் உள்நாட்டு விதை வகைகளைச் சேமிக்கும் முயற்சியைப் பற்றி நான் ஒருமுறை படித்தேன், அது தான் என்னை இப்பணியை மேற்கொள்ள தூண்டியது. பல நெல் மற்றும் தினை வகைகள் இப்போது அரிதாகி வருகின்றன, எனது சேகரிப்பு மூலம், எதிர்காலத்தில் அவற்றை வளர்க்க விவசாயிகளுக்கு உதவ விரும்புகிறேன், ”என்றார்.
ஹர்ஷிதா, எதிர்காலத்தில் ஒரு வேளாண் விஞ்ஞானியாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். இவர் இதுவரை காலஜீரா, சட்டியா நாகி, உமுரியா சூடி, அசன் சுடி, நதியா போகா, துளசி போகா, கலாபதி, ராதா பல்லவ், பாட்ஷா, பதான் கோடா, துபராஜ், பர்மா ரைஸ், கோல்கி மோச்சி, லட்னி, துபராஜ், கடாரா, மச்சா போன்ற பாரம்பரிய அரிய நெல் விதைகளை சேகரித்துள்ளார்.
ஒடிசாவின் நெல் மகள் என அன்போடு அழைக்கப்படும் ஹர்ஷிதாவின் நெல் விதை வங்கியினை தினந்தோறும் பார்வையிட பல விவசாயிகள் வருகைத் தருகின்றனர். ஹர்ஷிதாவின் அனைத்து முயற்சிகளுக்கும் அரசு துணை நிற்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் மிகுந்த நம்பிக்கையுணர்வோடு தனது கனவை நோக்கி நகர்கிறார் ஹர்ஷிதா.
மேலும் காண்க:
4 வருடம் பொறுத்தால் 90 ஆண்டு பலன்- அதிகரிக்கும் மூங்கில் சாகுபடி
டெல்லி அருகே நில அதிர்வு- தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று கனமழை