நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 November, 2023 5:55 PM IST
Keezapatti Karikalan

இயற்கை விவசாய முறையில் பாரம்பரிய நெல் ரகம், மா, கரும்பு உட்பட தோட்டக்கலை பயிர் வளர்ப்பிலும் ஈடுபட்டு வருபவர் கரிகாலன். விவசாயத்தில் நவீன வேளாண் நடைமுறைகளை செயல்படுத்தி அதில் வெற்றிக் கண்ட கரிகாலன் கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் சிறந்த விவசாயிக்கான விருதையும் பெற்றார்.

கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா கீழப்பட்டி கிராமத்தை சேர்ந்த கரிகாலன், கணினி அறிவியல் துறையில் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற நிலையிலும், தனது குடும்பத்தார் மேற்கொண்டு வந்த விவசாய பணியில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு young Asia farmers exchange program என்கிற திட்டத்தில் மலேசியாவிற்கு பயணம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுள் கரிகாலனும் ஒருவர்.

கடந்த 15 வருடங்களாக சுமார் 25 ஏக்கரில் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதில் 10 ஏக்கரில் இயற்கை முறையில் இமாம்பசந்த் மாம்பழ வகையையும், 5 ஏக்கரில் கரும்பு மற்றும் பாரம்பரிய நெல் ரகமான மாப்பிள்ளை சம்பா மற்றும் கருப்பு கவுனி போன்றவற்றையும் பயிரிட்டு பராமரித்து வருகிறார். 10 ஏக்கருக்கு கால்வாய் பாசனம் மற்றும் 15 ஏக்கருக்கு கிணற்று பாசனம் என மொத்தமுள்ள 25 ஏக்கரில் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதில் 4 ஏக்கரை குத்தகைக்கு விட்டுள்ளார். மேலும் தனது நிலங்களில் மழை நீர் சேமிப்புக்கான கட்டமைப்பையும் உருவாக்கியுள்ளார்.

தனது சொந்த தேவைகளுக்காக கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வரும் கரிகாலன், தேவைகளைத் தாண்டி உற்பத்தியாகும் மீதமுள்ள பாலினை ஆவின் நிறுவனத்திற்கு வழங்குகிறார். ஒரு மாதத்திற்கு சராசரியாக சுமார் 200 லிட்டர் வரை ஆவினுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இயற்கை முறையில் மா விவசாயம்- லாபம் என்ன?

மா விவசாயத்தில் நவீன வேளாண் தொழில்நுட்ப முறைகளை கடைப்பிடித்து வருவது குறித்தும் அவற்றில் கிடைக்கும் லாபம் மற்றும் சந்தைப்படுத்தும் தன்மை குறித்தும் கரிகாலனிடம் கேட்டப்போது அவர் அளித்த பதில்கள் வியப்பைத் தந்தன.

”நாங்கள் SSI,அதிக அடர்த்தி நடவு, அதி உயர் அடர்த்தி நடவு போன்ற நவீன வேளாண் தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி மாம்பழ விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். இயற்கை விவசாய முறையில் பயிரிடப்படுவதால், எங்கள் மாம்பழத்தின் விலை கிலோ ரூ.300 வரை விற்கிறோம். சந்தை விலையுடன் ஒப்பிடுகையில் எங்களது மாம்பழம் விலை அதிகமாக இருப்பதால், பெரியளவில் லாபம் இல்லை.

Read also: YSR Achievement விருதினை வென்று கவனத்தை ஈர்த்த பழங்குடியின பெண் விவசாயி!

மேலும் மாம்பழங்களை எங்களது வாடிக்கையாளர், கல்லூரி மற்றும் பள்ளி நண்பர்கள், உறவினர்களுக்கு என நேரிடையாக நாங்களே விற்று வருகிறோம். பயிரிடும் கரும்பினை சர்க்கரை உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கும் EID PARRY-க்கு வழங்குகிறோம். விளைவிக்கும் பாரம்பரிய அரிசி மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களையும் நேரிடையாகவே விற்பனை செய்து வருகிறோம்” என்றார்.

8000 சதுர அடியில் சேமிப்பு கிடங்கு:

தற்போதைய காலத்தில் விளைவிக்கும் பொருட்களை சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது வரை விவசாயிகள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இதையும் கருத்தில் கொண்டு அறுவடைக்குப் பிந்தைய இழப்பைக் குறைப்பதற்காகவும், விவசாயிகள் விளைபொருட்களை சேமித்து வைப்பதற்காகவும் சுமார் 8000 சதுர அடியில் சேமிப்பு கிடங்கினையும் அமைத்துள்ளார். 2008 ஆம் ஆண்டு, சுமார் 6000 சதுர அடிக்கு தனது கிராமத்துக்கு அருகிலேயே சேமிப்பு கிடங்கு ஒன்றினை அமைத்த கரிகாலன், மேற்கொண்டு கடந்த 2022 ஆம் ஆண்டு சுமார் 2000 சதுர அடி பரப்பில் மேலப்பட்டி கிராமத்தில் மற்றொரு சேமிப்பு கிடங்கினையும் அமைத்துள்ளார்.

Pig farming- அசோலாவுடன் பன்றி வளர்ப்பில் மாஸ் காட்டும் சிறுமி

முன்னோடியாக விளங்கும் நச்சலூர் FPO:

நச்சலூர் விவசாயிகள் உற்பத்தியாளர் கோ லிமிடெட் என்ற பெயரில் கடந்த 2012 முதல் FPO ஒன்றினையும் நடத்தி வருகிறார். இதில் சுமார் 584 உறுப்பினர்கள் தற்போது அங்கம் வகிக்கின்றனர். இந்த FPO நிறுவனம் விதைகள், உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை வழங்கி வருகிறது.மேலும், விதை சுத்திகரிப்பு ஆலையுடன் சமையல் எண்ணெய் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த FPO நிறுவனம் தொடங்கியது முதல் தற்போது வரை ரூ.16 கோடியளவில் வர்த்தகம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வேளாண் இயந்திரங்களை வாங்குவதற்கும், மூலதனத் தேவைகளுக்காகவும் தமிழ்நாடு VKP-யின் ஆதரவுடன் நச்சலூர் விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தோட்டக்கலை பயிர்கள் வளர்ப்பிலும் மாட்டுச்சானம், கோமியம், வேளாண் கழிவுகள், மீன் அமினோ அமிலம், இயற்கை உரம் போன்றவற்றைத் தான் பயன்படுத்தி வருகிறார். உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை குறைவாகப் பயன்படுத்தவும், சொட்டு நீர் பாசனம் மூலம் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி சாகுபடியினை மேற்கொள்ளவும், பண்ணைக் குட்டைகளை உருவாக்கவும், அறுவடைக்குப் பிந்தைய இழப்பைக் குறைக்க கிடங்கு அமைக்கவும் சக விவசாயிகளுக்கு கரிகாலன் தனது அனுபவத்திலிருந்து வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

தீராத பிரச்சினைகளும்- கோரிக்கையும்:

வேளாண் சார்ந்து அனைத்து துறைகளிலும் கால் பதித்த கரிகாலன், இன்னும் சில பிரச்சினைகளை சந்தித்து வருவதாக குறிப்பிட்டார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், “கிராமப் பகுதியை சேர்ந்த பணியாளர்கள் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிய சென்று விடுவதால் விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் கிடைப்பது எங்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது. கிடைக்கும் பணியாளர்களுக்கும் அதிக ஊதியம் வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. தொழிலாளர் பிரச்சனையால் தோட்டக்கலை பயிர்களில் இறங்க வேண்டிய கட்டாயம். இன்னும் இப்பிரச்சனையில் இருந்து மீளவில்லை” என்றார். இவைகளைத் தவிர தற்போது காலநிலை மாற்றமும் பெரிய பிரச்சினையாக விவசாயிகளுக்கு உருவெடுத்துள்ளது என்றார்.

இயற்கை முறையில் வேளாண் பொருட்களை விளைவிப்பது முதல் சந்தைப்படுத்தும் முறையிலும் சிறந்து விளங்கும் கரிகாலன் அவர்களின் செயல்பாடுகள், பல இளம் தலைமுறை விவசாயிகளுக்கு உந்துசக்தியாக திகழும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை எனலாம்.

Read more: சிங்கார சென்னைக்கு சோதனை- இந்த மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை

English Summary: A success story of Nachalur farmers producer Co ltd Keezapatti Karikalan
Published on: 30 November 2023, 05:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now