இது வழக்கமான வெற்றிக்கதை என்று நீங்கள் எளிதாக ஒதுக்கி வைத்து விட முடியாது என்ற அளவிற்கு தன் வாழ்வில் வலிகளை தாங்கி மனவலிமையால் வென்றுள்ளார் சங்கீதா பிங்கலே. அவர் வாழ்வில் எதிர்க்கொண்ட துயரம் என்ன? அதிலிருந்து மீண்டது எப்படி என்பதனை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.
ஒரு சராசரி பெண்ணாக தான் சங்கீதா பிங்கலேயின் வாழ்வு ஆரம்பக்கட்டத்தில் இருந்தது. பிங்கலேயின் உலகம் என்பது அவளது குடும்பத்தை சுற்றி மட்டுமே சுழன்றுக் கொண்டிருந்தது. எல்லாவற்றையும் ஒரே நாளில் தலைகீழாக மாற்றியது ஒரு கொடூரமான விபத்து. தன் கணவர் மற்றும், மாமனார் ஆகியோர் ஒரு விபத்தில் உயிரிழக்க பிங்கலேயின் வாழ்வு இருளில் மூழ்கியது.
குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை காலச்சூழ்நிலை வலுக்கட்டாயமாக சங்கீதா தலையில் ஏற்றி வைத்தது. மாமியார் மற்றும் குழந்தைகளின் துயரத்தை நீக்க வேண்டிய கடமையும் சங்கீதா வசம் வந்தது. எதிர்பாராத விபத்தினால் குடும்பத்திலிருந்த அனைத்து உறுப்பினர்களும் செய்வதறியாது செல்லும் திசையற்று விழிப்பிதுங்கி நின்றனர்.
இத்தகைய சவாலான சூழ்நிலைகள் ஒருவரின் சுயமரியாதையை சோதிக்கின்றன என்று சங்கீதா திடமாக நம்பினார். தனது கணவர் மற்றும் மாமனார் பணியாற்றி வந்த வயல்களில் வேலை செய்யத் தொடங்கினார். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என அனைவரும் சங்கீதாவின் செயலுக்கு ஆதரவுக்கரம் நீட்ட தயங்கினார். ஒரு பெண்ணாக எப்படி? இவ்வளவு சுமைகளை நிவர்த்தி செய்ய முடியும் என சந்தேகித்தனர். இருப்பினும், விவசாய பணியில் இறங்க வேண்டும் என்கிற முடிவை யாருக்காகவும் கைவிடவில்லை சங்கீதா.
திராட்சை விவசாயத்தில் களமிறங்குதல்:
திராட்சை விவசாயம் என்பது மற்ற பயிர்களுடன் ஒப்பிடுகையில் அவ்வளவு எளிதானதும் அல்ல; ஒரு சிறிய தவறு கூட பெரிய அளவில் இழப்புகளை ஏற்படுத்தும். போதிய விவசாய பணி தொடர்பான அனுபவம் இல்லாத போதிலும், சங்கீதா தான் ஏற்ற பொறுப்பை மன உறுதியுடன் எதிர்க்கொண்டார்.
விவசாயம் பணிகளை தெரிந்துக்கொள்ள போதிய கல்வியினையும், பயிற்சினையும் பெற உறுதி பூண்டாள். மேலும், களத்தில் கடின உழைப்பை கொட்டியதுடன், மகசூல் அதிகரிப்புக்கு புதிய வழிகளை கண்டறியவும் முயன்றார்.
டிராக்டர்கள் மற்றும் வேளாண் தொழில்நுட்பத்தில் பல்வேறு புதிய வசதிகளை ஒன்றன் பின் ஒன்றாக தனது விவசாய பணியில் இணைத்து வந்தார். அதன் மூலம் உற்பத்தி அதிகரிப்பதையும், தனது தயாரிப்புகளுக்கான தேவை அதிகரிப்பதையும் கண்டார். கையிலிருக்கும் வளங்களை தேவைக்கேற்ப பயன்படுத்தியதன் மூலம் இன்று, விவசாய பணியில் ஈடுபட்டிருக்கும் அக்கம் பக்கத்தினருக்கு முன்னோடி விவசாயியாக விளங்குகிறார்.
தனது கடிமையான உழைப்பினாலும், வேளாண் பணியில் மேற்கொண்ட தொழில் நுட்ப முறைகளாலும் சங்கீதா பொருளாதார ரீதியில் தன்னிறைவு அடைந்துள்ளார். மேலும், ஆரம்பத்தில் தனது முடிவினை சந்தேகித்த அனைவருக்கும் தனது வெற்றியை பதிலாக கொடுத்துவிட்டார். புதிய பொறுப்புகளை ஏற்று, தன் குடும்பத்துக்கான கடமைகளை நிறைவேற்றிய நிலையில், இன்றும் தனது பணியினை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் சங்கீதா பிங்கலே.
Read more:
பாசிப்பயறு மற்றும் நிலக்கடலையில் புதிய இரகம் வெளியீடு- கைக்கொடுக்குமா விவசாயிகளுக்கு?
போலியோவால் பாதிக்கப்பட்ட சந்தோஷ் கைட்- டிராக்டர் மூலம் விவசாய பணிகளில் சாதனை