மதுரை மாவட்டம் மேலுார் அம்பலக்காரன்பட்டி விவசாயி ராமையா. 3 ஏக்கரில் வாழை விவசாயம் செய்கிறார். வாழை நடுவதற்கு முன்பு நிலத்தை தயார் செய்வது முதல் அறுவடை வரையான தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ஒரு ஏக்கரில் ஒட்டுவாழை (சக்கை) நடவு செய்துள்ளேன். நடவுக்கு முன்பாக ரோட்டோவேட்டர் உட்பட பல கருவிகளை கொண்டு 5 முறை நிலத்தை உழுதேன். 20 லோடு குப்பை உரம் வயலில் பரப்பினேன். ஒரு வாழைக்கன்று ரூ.5 வீதம் ஏக்கருக்கு 1100 கன்றுகள் வாங்கினேன். குழியெடுத்து நடுவதற்கு ஒரு வாழைக்கு ரூ.10 கூலி.
வாழைக்கன்று (Banana Tree)
வாழைக்கன்று வைத்த 3ம் மாதத்தில் பவர் டிரில்லர் வைத்து மரங்களுக்கு இடையே உழுது விட்டேன். வாய்க்கால் வெட்டி மண் அணைக்க வேண்டும். பொட்டாஷ், டி.ஏ.பி., 20:20 உரம் சேர்த்து மண் அணைத்தேன். ஏக்கருக்கு 8 மூடை உரம் தேவைப்படும். அதற்கு வேலையாட்களுக்கு சம்பளம் தர வேண்டும். தாய்மரத்திலிருந்து இலை அறுவடை செய்ய முடியாது.
அதன் அருகிலேயே பக்க கன்று வெடிக்கும் போது தொடர்ந்து இலை அறுவடை செய்யலாம். வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் இலையை அறுவடை செய்யலாம். சீசனுக்கு ஏற்ப கட்டு ரூ.200 முதல் ரூ.2000 வரை விலை கிடைக்கும். எட்டாவது மாதத்தில் பூக்கும் தருவாயில் 5 மூடை உரம் வைக்க வேண்டும். ஒரு மாதம் கழித்து வாழைப்பூவை வெட்டினால் ஒரு பூ ரூ.2 - 3 விலை போகும். அதிலிருந்து 50 - 60 வது நாளில் வாழைத்தார் தயாராகிவிடும். தாருக்கு 70 முதல் 150 காய்கள் கிடைக்கும். ஒட்டுரகம் என்பதால் பூச்சி, நோய் தாக்குதல் வராது.
கம்பு ஊன்றி வாழைக்கு முட்டு கொடுக்க வேண்டியதில்லை. 10 மாத முடிவில் ஒரு ஏக்கருக்கு 1000 தார்கள் கிடைக்கும். வியாபாரிகள் மனது வைத்தால் தாருக்கு குறைந்தது ரூ. 150 கிடைக்கும். வாழை வைத்தால் வரம் தான் என்கிறார்.
தொடர்புக்கு: 89401 49656
மேலும் படிக்க
நவீன தொழில்நுட்பத்தில் தரமான விதைகள் உற்பத்தி செய்தால் கூடுதல் இலாபம்!
மாசிப்பட்டத்தில் இறவைப் பயிராக பருத்தி சாகுபடி: சில நுணுக்கங்கள்!