நவீன மாற்றங்களுக்கு மத்தியில் இன்றும் சில விவசாயிகள் பாரம்பரிய தொழில்நுட்ப முறையை கடைபிடித்து வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், தொப்பூர், பெரும்பாலை, பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, கடத்தூர், மொடப்பூர், உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மானாவாரி நிலங்கள் உள்ளன. அந்நிலங்களில் விவசாயிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பயிர் செய்து வருகின்றனர்.
அண்மையில் பெய்த மழையால் விவசாயிகள் மானாவாரி நிலங்களில் கேழ்வரகு, நிலக்கடலை, சோளம், சாமை, போன்ற பயிர்களை விதைப்பு செய்துள்ளனர். இதில் விவசாயிகள் "பளுக்கு" ஓட்டும் பாரம்பரிய தொழில்நுட்ப முறையை கடைபிடித்து வருகின்றனர்.
பளுக்கு முறை
வழக்கொழிந்து வரும் பாரம்பரிய விவசாய தொழில்நுட்பங்கள் இன்றும் சில விவசாயிகளால் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதை பற்றி விவசாயி கோவிந்தசாமி கூறியதாவது, “உழவு மாடுகள் மூலம் படைகள் அமைக்கப்பட்டு நிலத்தில் உழவு செய்த பின்னர் ஆட்கள் அந்த படையின் நீலத்திற்கேற்ப நின்று கொள்வார்கள். கேழ்வரகு சாகுபடியில் குறிப்பிட்ட நாட்கள் வரை ஓரிடத்தில் நெருக்கமாக நாற்று வளர்க்கப்படும். வளர்க்கப்பட்ட நாற்றை வேருடன் பறித்து, ஏற்கனவே உழவு செய்யப்பட்டுள்ள நிலத்தில் ஆட்கள் மூலம் மழை ஈரத்தில் நடவு செய்வார்கள். உழவு மாடுகள் கடந்து சென்ற பிறகு பயிர்களை நடவு படையில் ஊன்றி, மாடுகள் அடுத்த சுற்று வரும்போது நடவு செய்யப்பட்ட பயிர்களுக்கு நன்றாக மண்ணில் புதைந்து விடும்.
குட்டை கலப்பை
மானாவாரி நிலத்தில் உழவு மாடுகள் மூலம் உழவு செய்து பதமான ஈரத்தின் போது கேழ்வரகு விதைகளை வயல் முழுவதும் நட்டு விடுவார்கள். நன்றாக தேய்ந்த முனையை "குட்டை கலப்பை" என்பர். இவ்வகை உழவுக்கு இந்த கலப்பையை பயன்படுத்துவர். இந்த முறை உழவில் விதைகளை நல்ல ஆழத்தில் விதைக்கப்பட வில்லை என்றாலும் அவை பறவைகளுக்கும், எறும்புகளுக்கும் இரையாகாத வகையில் சிறந்த முறையில் விதைக்கப்பட்டு வயல் முழுவதும் நல்ல விளைச்சல் ஏற்படும்.
பின்னர் இந்த வயலில் 15 இல் இருந்து 20 நாட்களில் பளுக்கு ஓட்ட துவங்குவார்கள். பல்வேறு காரணங்களால் முளைப்பு திறன் குறைந்து விடும், இதனால் விதைகள் சற்று அதிகமாகவே விதைக்கப்படுகின்றன. பின்னர் விதைகள் முளைக்கத் துவங்கியதும் இந்த பளுக்கு ஓட்டும் பனி துவங்கும். இதனால் நெருக்கமாக முளைத்த பயிர்கள் பின்னர் தகுந்த இடைவெளியை அடைந்து விடும்.
சீப்பு தோற்ற கலப்பை
இந்த கலப்பையானது சீப்பு போன்ற வடிவம் கொண்டது. இந்த கலப்பையின் முனைகளில் சிக்கும் பயிர்கள் மண்ணில் இருந்து வெளிவந்து காய்ந்துவிடும். மேலும் கலப்பையில் மற்றும் மாட்டின் கால் குளம்புகளில் சிக்காத விதைகள் புதிய வேகத்துடன் வளரத் தொடங்கும். இதனால் விளைச்சலும் நன்றாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
K.Sakthipriya
krishi Jagran