பதிண்டாவில் தனது வேலையை ராஜினாமா செய்த அரசு ஊழியர், டிராகன் பழம் விவசாயத்தில் ஈடுபட்டு தற்போது ஆண்டுக்கு பல லட்சங்கள் சம்பாதித்து வருகிறார். இது அப்பகுதி விவசாயிகள் மட்டுமின்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை, சோளம், கரும்பு, நெல் மற்றும் பஜ்ரா போன்ற பிரதான பயிர்களை தான் விவசாயிகள் பெரும்பாலும் பயிரிட்டு வருகின்றனர் . இருப்பினும், பஞ்சாப் மாநிலம் பதிண்டாவைச் சேர்ந்த ஜிதேந்திரா உட்பட பல விவசாயிகள், இந்த பாரம்பரிய பயிர்களில் இருந்து நல்ல வருமானம் ஈட்ட முடியாமல் திணறினர். பாரம்பரிய பயிர்களுக்கு மாற்றாக மற்ற விவசாய நடைமுறைகளின் மூலம் லாபம் ஈட்ட வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர்.
டிராகன் பழம், பஞ்சாபில் வழக்கத்திற்கு மாறான பயிர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் டிராகன் பழ சாகுபடி பொறுமையற்றவர்களுக்கானது அல்ல. இதற்கு குறிப்பிடத்தக்க நேரம் மற்றும் நிதி முதலீடுகள் தேவை. நடவு பருவம் பிப்ரவரி முதல் மார்ச் வரை நீடிக்கும், பெரும்பாலான பயிர்களைப் போலல்லாமல், டிராகன் பழம் முதிர்ச்சியடைய ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை நேரம் எடுக்கும். ஒரு ஏக்கர் நிலத்திற்கான ஆரம்பச் செலவு மொத்தம் ஐந்து லட்சம் ரூபாய் வரை இருக்கும். அதனாலே பழ சிறு, குறு விவசாயிகள் இன்றளவும் டிராகன் பழ சாகுபடி மேற்கொள்ளத் தயக்கம் காட்டி வருகின்றனர்.
அரசு ஊழியராக பணி புரிந்துக் கொண்டிருந்த ஜிதேந்திராவின் ஆர்வத்தை டிராகன் பழம் வெகுவாகத் தூண்டியது. தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு தனது பெற்றோர்களில் நிலத்தில் டிராகன் பழத்தை பயிரிடத் தொடங்கினார்.
ஆனால் தொடக்கக்காலத்தில் இது அவருக்கு மிகவும் சவாலாக இருந்தது. பல பிரச்சினைகளுக்கு நடுவே நிபுணர்களின் வழிகாட்டுதலுடன், டிராகன் பழ விவசாயத்தில் கடினமாக உழைத்தார்.
இறுதியாக ஜிதேந்திராவின் கனவுக்கு டிராகன் பழம் உயிர் கொடுத்தது. டிராகன் பழத்தின் விலை இந்திய சந்தையில், ஒரு கிலோவுக்கு 600 முதல் 800 ரூபாய் வரையிலான விலையில் உள்ளது. ஜிதேந்திராவின் டிராகன் பழ அறுவடையின் மூலம் அவரது ஆண்டு வருமானம் இப்போது 8 முதல் 10 லட்சம் ரூபாயை எட்டுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், டிராகன் பழத்தினை நோயாளிகள் மற்றும் ஆரோக்கிய உணவுக்கட்டுப்பாட்டினை பராமரிக்கும் நபர்கள் மிகவும் விரும்புகின்றனர். இதனால் சந்தையில் இதன் தேவையானது சமீப காலமாக கணிசமாக அதிகரித்து வருகிறது.
டிராகன் பழ சாகுபடியில் லாபம் பார்க்கத் தொடங்கிய ஜிதேந்திராவின் வெற்றிக் கதை, பஞ்சாபில் புதுமையான விவசாய முறைகளை மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது. பாரம்பரிய பயிர்களிலிருந்து டிராகன் பழ சாகுபடிக்கு அவர் மாறியது அவரது குடும்பத்தின் நிதி நிலைமையினை கணிசமாக மேம்படுத்தியது மட்டுமல்லாமல், விவசாயிகள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது.
இதையும் காண்க:
பயிர் காப்பீடு செய்ய இறுதி தேதி அறிவிப்பு- பிரீமியம் தொகை எவ்வளவு?