ICAR-CMFRI-யின் பவளப்பாறைகள் பற்றிய ஆராய்ச்சி 2023 ஆம் ஆண்டுக்கான ஹஸ்முக் ஷா நினைவு விருதை வென்றுள்ளது. இந்த விருதினை பெறுவதற்கு காரணமாக ICAR-CMFRI-யின் ஆல்வின் ஆண்டோவிற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஹஸ்முக் ஷா நினைவு விருது, குஜராத் சூழலியல் சங்கத்தால் நிறுவப்பட்டது மற்றும் கச்சனார் அறக்கட்டளை நிதியுதவியுடன் செயல்பட்டு வருகிறது. சமூகத்தில் நிலவும் சுற்றுச்சூழல், தொழில்நுட்ப பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கும், அதனை வெகுவாக குறைப்பதற்கும் கணிசமான பங்களிப்பை வழங்கும் நபர்களை அங்கீகரித்து வெகுமதி அளிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தான் 2023 ஆம் ஆண்டிற்கான ஹஸ்முக் ஷா நினைவு விருதினை ICAR-CMFRI (Central Marine Fisheries Research Institute) யின் ஆல்வின் ஆன்டோ வென்றுள்ளார். லட்சத்தீவுகளில் உள்ள பவளப்பாறைகளின் மீள்தன்மை மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் மனித நடவடிக்கையினால் உண்டாகும் அச்சுறுத்தல்களின் பாதிப்பு குறித்த தனது ஆராய்ச்சி முடிவினை விருதிற்காக சமர்பித்து இருந்தார் ஆல்வின் ஆண்டோ. இவரின் ஆராய்ச்சி முடிவுகள் அனைவரின் கவனத்தையும், பாராட்டுகளையும் பெற்ற நிலையில் ஹஸ்முக் ஷா நினைவு விருதை 2023 ஆல்வின் வென்றுள்ளார்.
ஆல்வின் ஆன்டோ, தீவிர கடல் ஆர்வலர் மற்றும் டைவிங் பயிற்றுனர்களின் தொழில்முறை சங்கத்தின் மூலம் சான்றளிக்கப்பட்ட டைவ் மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் கடலோரப் பகுதிகள் மற்றும் தீவுகளில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள், பவளப்பாறைகள் மீது குறிப்பிட்ட கவனம் செலுத்தி, ஆழ்கடலில் நீருக்கடியில் பல்வேறு ஆய்வுகளை முன்னெடுத்துள்ளார்.
ஹஸ்முக் ஷா நினைவு விருதை வென்ற இளம் தொழில் நிபுணரான ஆல்வின் ஆன்டோவிற்கு விருதுடன், ₹2 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் அங்கீகாரச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. லட்சத்தீவுகளில் உள்ள பவளப்பாறைகளின் பின்னடைவை மையமாகக் கொண்ட அவரது ஆய்வு முடிவுகள் காலநிலை மாற்றம் மற்றும் மனிதனால் தூண்டப்பட்ட பல்வேறு காரணிகளால் சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்கொள்ளும் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக வல்லுனர்கள் பாராட்டியுள்ளனர்.
ஹஸ்முக் ஷா குஜராத் சூழலியல் ஆணையத்தின் (GES- Gujarat Ecology Society) முதல் தலைவராக இருந்தார். அவர் குஜராத் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெசர்ட் எக்காலஜியின் (GUIDE- Gujarat Institute of Desert Ecology) நிறுவனர் தலைவராகவும் இருந்தார்.
அவரது வழிகாட்டுதல்களில் GES, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய 110 திட்டங்களை நிறைவு செய்துள்ளது. இந்தியன் பெட்ரோகெமிக்கல்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் தனியார் மயமாக்கப்படுவதற்கு முன்பு அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் காண்க:
சூப்பர்! பாதி விலையில் வெங்காயம் வாங்க தமிழக அரசு நடவடிக்கை
பள்ளி மாணவர்களுக்கு நவ.10 வரை விடுமுறை நீட்டிப்பு- இதான் காரணமா?