குறைந்தளவு இடம் இருந்தாலும் ஆடு, மாடு, கோழி, மீன், காளான் வளர்ப்புடன் காய்கறி, பிற பயிர் சாகுபடி செய்வதே ஒருங்கிணைந்த பண்ணையம். முதல் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக மீனும் காளானும் அறுவடையில் உள்ளது என்கின்றனர் மதுரை மேற்கு மிளகரணை கிராமத்தைச் சேர்ந்த விவசாய தம்பதி கோபால், சாந்தி.
சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகராக இருந்து மீண்டும் விவசாயத்திற்கு திரும்பிய கோபால் தங்களது அனுபவம் குறித்து மனைவியுடன் கூறியதாவது: 2013 ல் மிளகரணை கிராமத்தில் ஒரு எக்டேர் நிலம் வாங்கினேன். ஆங்காங்கே 30 தென்னை மரங்கள் வளர்க்கிறேன். முதலில் காளான் குடில் அமைத்து வளர்த்தேன்.
காளான் குடிலில் வைக்கோலை பதப்படுத்தி காளான் படுக்கை தயாரித்து சிப்பி காளான் விற்பனையை துவங்கினோம். தினமும் 10 கிலோ காளான் வரை கிடைக்கிறது. காளான் அறுவடை முடிந்தபின் அந்த வைக்கோல் சக்கையை நிலத்தில் உள்ள குட்டையில் ஊறவிடுவேன். அதை எடுத்து தென்னந்தோப்பில் மூடாக்காக பரப்பி விடுவேன்.
வைக்கோல் உரம் (Straw Compost)
இந்த வைக்கோல் சக்கை உரமாகவும் நீர் ஆவியாகி வெளியேறாமல் மெத்தை போன்றும் பாதுகாக்கிறது. மட்கிய பின் உரமாவதால் இளநீர் நன்கு காய்க்கிறது. ஒன்றின் கழிவை மற்றொன்றின் உரமாக மாற்ற ஆரம்பித்தேன்.
தோட்டக்கலை துறை மூலம் அரை ஏக்கரில் வெங்காய விதை பயிரிட்டேன். நுாறு சதவீத மானியத்தில் விதைகளைத் தந்தனர். அறுவடை நன்றாக இருந்தபோது மழை வந்ததால் கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டது. மீன்வளத்துறை மூலம் உணவு மீன் உற்பத்தி குறித்து பயிற்சி தந்தனர்.
மீன் வளர்ப்பு (Fish Farming)
சின்னதாக 10 சென்ட் இடத்தில் குட்டை வெட்டினேன். அதில் வளர்ப்பதற்கு 2500 மீன் குஞ்சுகள் இலவசமாகவும் ரூ.20ஆயிரம் மதிப்புள்ள தீவனமும் இலவசமாக தந்தனர். 76 பேர் ஒரே நேரத்தில் மானியம் பெற்று வளர்த்ததில் எனது குட்டையில் உள்ள மீன்கள் மற்றவற்றை விட எடை கூடி அதிக வளர்ச்சி பெற்றதாக மீன்வளத்துறையினர் தெரிவித்தனர். வழக்கமான தீவனத்துடன் நானே தயாரித்த தீவனத்தையும் கொடுத்து பராமரித்தேன். இப்போது மீன்கள் குறைந்தது அரைகிலோ எடையில் வளர்ந்து வருகின்றன. தற்போது பயோபிளாக் முறையில் வட்ட வடிவ பாத்திகள் மூன்றை அமைத்து கூடுதலாக மீன்உற்பத்தி செய்கிறேன்.
காளான் வளர்ப்பு (Mushroom Farming)
காளானை அறுவடை செய்து பேக்கிங் செய்வதற்காக விவசாயத்துறை மூலம் ரூ.2 லட்சம் மானியத்தில் பேக்கிங் குடில் கட்டி வருகிறேன். இதில் மீன், காளான் ஆகியவற்றை பேக்கிங் செய்யலாம். 100 விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் அரசிடம் ரூ.5 லட்சம் மானியம் பெற்று 2 பவர் டிரில்லர், 2 களையெடுக்கும் கருவிகளை வாங்கி அனைவரும் பயன்படுத்தி வருகிறோம்.
அடுத்ததாக நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட உள்ளேன். நிலம் பெரிதாக இருக்க வேண்டும் என்பதில்லை. வெறுமனே நெற்பயிரை மாற்றி மாற்றி நடுவதை விட ஒரே இடத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு இரண்டையும் சேர்த்து வளர்த்தால் தான் நல்ல லாபம் கிடைக்கும் என்பதை உணர்ந்துள்ளேன். இதை மற்ற விவசாயிகளும் உணரவேண்டும் என்றார்.
தொடர்புக்கு: 94441 13262
மேலும் படிக்க
தென்னையை பாதுகாக்கும் பச்சை இறக்கை பூச்சி: விவசாயிகளுக்கு விற்பனை!
விவசாயிகள் கவனத்திற்கு: விதைச்சான்று பெற என்ன செய்ய வேண்டும்!