இந்திய வம்சாவளியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜீனியர் கார்த்திக் சுப்பிரமணியம் எடுத்த புகைப்படம் நேஷனல் ஜியோகிராபிக்கின் இந்தாண்டுக்கான சிறந்த புகைப்பட விருதுக்கு தேர்வாகியுள்ளது.
நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகின் தலைசிறந்த புகைப்படத்தை தேர்வு செய்து அதனை தன் புத்தக அட்டையில் பிரசுவித்தும், பரிசுத்தொகை வழங்கியும் புகைப்பட கலைஞர்களை கெளரவித்து வருகிறது. இதனடிப்படையில் இந்த ஆண்டுக்கான புகைப்பட போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கார்த்திக் சுப்ரமணியம் க்ளிக் செய்த புகைப்படம் இந்தாண்டுக்கான சிறந்த புகைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்ரமணியம் க்ளிக் செய்த வெண்தலை கழுகுகள் (Bald Eagles) புகைப்படத்துக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் விவரம்:
இந்தாண்டு இயற்கை, மக்கள், இடங்கள் மற்றும் விலங்குகள் என்ற நான்கு பிரிவுகளின் கீழ் புகைப்பட போட்டி நடைப்பெற்றது. உலகம் முழுவதும் இருந்தும் கிட்டத்தட்ட 5,000 புகைப்படங்கள் பரிசீலனைக்கு வந்தன. அவற்றில் இருந்து கார்த்திக் சுப்ரமணியம் எடுத்த படம் சிறந்ததாகத் தேர்வாகியுள்ளது. அலாஸ்காவின் ஹெய்ன்ஸ் பகுதியிலுள்ள சில்காட் வெண்தலை கழுகு சரணாலயத்தில், 4 கழுகுகள் குழுமியிருப்பது போல் இருக்கும் படத்தை கார்த்திக் சுப்ரமணியம் எடுத்திருந்தார்.
போட்டியில் வெற்றிப்பெற்றது குறித்து, நேஷனல் ஜியோகிராஃபிக் இதழுக்கு பேட்டியளித்த கார்த்திக் சுப்ரமணியம் குறிப்பிட்டவை:
”நூற்றுக்கணக்கான வெண்தலை கழுகுகள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம், அலாஸ்காவின் ஹெய்ன்ஸ் பகுதியிலுள்ள சில்காட் வெண்தலை கழுகு சரணாலயத்திற்கு படையெடுக்கும். அங்கு சாலமன் வகை மீன்களை பிடிக்க வருகை தரும். இரண்டு ஆண்டுகளாக அவற்றை படமெடுக்க நான் அங்கு சென்றிருக்கேன்.
அப்போது தான் இதனை க்ளிக் செய்தேன். சாலமன் மீன்களை பிடிப்பதற்காக மரக்கிளையில் அமர்ந்திருந்த சக கழுகினை மற்றொரு கழுகு விரட்டும் காட்சியை க்ளிக் செய்தேன். இதற்கு நான் “டான்ஸ் ஆப் தி ஈகிள்ஸ்” (Dance of Bald Eagles) என பெயரிட்டுள்ளேன்” என்றார்.
போட்டியில் வென்ற இந்த புகைப்படம் வரும் மே மாதம் வெளியாக உள்ள நேஷனல் ஜியோகிராபிக் புத்தக அட்டையில் இடம் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
வெண் தலை கழுகுகள் என்பது வட அமெரிக்க கண்டத்தில் வாழும் இரண்டும் கழுகினங்களில் ஒன்றாகும். இக்கழுகு எளிதில் கண்டறியும் வகையில் தலை முழுவதும் வெள்ளையாய் இருக்கும். இதனை அமெரிக்க கழுகு என்றும் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் தேசிய பறவையாகவும் அறியப்படுகிறது. இப்பறவைகள் சுமார் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. வட அமெரிக்காவிலுள்ள மற்ற பறவைகளை காட்டிலும் இந்த பறவைகள் மிகப்பெரிய கூடுகளை கட்டுக்கின்றன. அமெரிக்கா தவிர்த்து கனடா, மெக்சிகோ போன்ற பகுதிகளிலும் இப்பறவைகள் காணப்படுகின்றன.
மேலும் படிக்க:
மீனவர்களின் கடுமையான வாழ்க்கையைப் படம்பிடித்த புகைப்படக்கலைஞர்
செட்டிதாங்கல் கிராமத்தில் உள்ள விவசாயிகளின் எழுச்சியூட்டும் கதை