மீன் கழிவுகளை உரமாக மாற்றும் கேரளப் பெண்ணின் முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது மட்டுமின்றி, பாராட்டுகளையும் குவித்து வருகிறது. ஐவி ஜோஸ் அவர்களின் செயல்பாடுகளை, மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI) அங்கீகரித்துள்ளது. ஐவி ஜோஸின் ‘ஃபிஷிலைசர்’ (Fishilizer- உற்பத்தி பொருளின் பெயர்) தயாரிப்பு குறித்தும், அவர் எதிர்க்கொள்ளும் சவால்கள் குறித்தும் இப்பகுதியில் காணலாம்.
கேரளாவின் கடற்கரை நகரமான மலப்புரத்தில் வளர்ந்தவர் ஐவி ஜோஸ். தனது இளமைப் பருவம் முதலே கடற்கரை சூழலில் வளர்ந்து வந்ததால், கடற் சார்ந்து தொழில் முனைவோராக மாற வேண்டுமென ஜவி ஜோஸ் ஆர்வம் கொண்டிருந்தது ஆச்சரியம் அளிக்கும் விஷயமில்லை எனலாம். புதிய விஷயங்களை கற்பதில் கைத்தேர்ந்த ஜவி, அதன் மூலம் மீனவ சமூகத்திற்கு உதவ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
STI HUB திட்டம்:
ஐவியின் தொழில் முனைவோருக்கான அடித்தளம் 15 வயதில் தொடங்கியது எனலாம். KVK மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த பயிற்சிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்தார். 2007 ஆம் ஆண்டில், எர்ணாகுளம் மாவட்டம், ஞாறக்கல்லில் உள்ள KVK-யின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஸ்ரீலதா, CMFRI-யின் கீழ் மீன் கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் STI HUB திட்டத்தைப் பற்றி ஐவிக்கு தெரிவித்தார். இருப்பினும், அந்த நேரத்தில் ஐவி ஜோஸினால் திட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. இருந்தபோதிலும், திட்டம் குறித்த நுண்ணறிவினை பெற்றார்.
உரம் தயாரிக்கும் அடிப்படை விஷயங்களான மீன் கழிவுகளை காய வைக்கும் முறை, அரைப்பது மற்றும் பேக்கிங் செய்வது பற்றி கற்றுக்கொண்டார். இருப்பினும் திட்டத்தின் பார்வையாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், உரம் தயாரிப்பு பற்றிய கூடுதல் அறிவைப் பெற முடியாமல் செய்வதறியாது திகைத்தார்.
ஐவியின் அக்ரோ ஹப் உதயம்:
சவால்களுக்கு மத்தியில் மனம் தளராமல் தன் வீட்டில் உள்ள கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் யூனிட்டைத் தொடங்கி அதில் தனது முழு கவனத்தையும் செலுத்தினார். ஸ்ரீலதா, KVK மற்றும் CMFRI க்கு ஐவி ஜோஸின் செயல்பாடுகளை தெரிவித்து அவருக்கு உதவ பரிந்துரைத்தார். உரம் தயாரிப்புக்கு தேவையான பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கான வசதிகளுக்காக அதிகாரிகள் ஐவிக்கு ஆரம்பக் கட்டத்தில் சிறு நிதியுதவினை வழங்கினர். இது 'ஐவியின் அக்ரோ ஹப்' (Ivy's Agro Hub) நிறுவப்படுவதற்கு வழிவகுத்தது. இந்நிறுவனம் தற்போது முனம்பம் துறைமுகம் (Munambam Harbor) அருகே இயங்கி வருகிறது.
எதிரே இருக்கும் சவால்கள்:
ஐவியின் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் CMFRI மற்றும் KVK ஆகியவற்றின் ஆதரவு இருந்தபோதிலும், அவரது முயற்சி இன்னும் நிலையான வருமானத்தை அளிக்கவில்லை.
ஒரு மாதத்திற்கு 5-10 உர பாக்கெட்டுகள் மட்டுமே விற்க முடிகிறது. அவரது வெற்றிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது சரியான மார்க்கெட்டிங் வழிமுறைகள் இல்லாததுதான். KVK மற்றும் CMFRI விற்பனை நிலையங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் விற்பனையைத் தவிர, ஐவி தனது தயாரிப்பை விளம்பரப்படுத்த மற்ற வழிகளைக் கண்டறிய சிரமப்பட்டு வருகிறது. ஆனால், இதையெல்லாம் வருங்காலத்தில் சமாளித்து வெற்றியை தன் வசமாக்குவேன் என நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் ஐவி ஜோஸ்.
Read more: இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்?
மார்ச் 2024 இல், மகளிர் தினத்தன்று மீன் உர உற்பத்தியில் ஐவி ஜோஸின் தொழில் முனைவோர் திறனுக்கான செயல்பாடுகளை பாராட்டி CMFRI மூலம் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
"கழிவு மேலாண்மையில் ஈடுபட்டு அதற்கான அங்கீகாரத்தை சம்பாதித்தது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். நான் வீட்டில் இருந்திருந்தால், என் கனவுகளை நோக்கி ஒரு படி கூட எடுக்காமல் இருந்திருந்தால் என்னால் இதை ஒருபோதும் சாதித்திருக்க முடியாது" என்றார் ஐவி ஜோஸ்.
Read more:
நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்?