மண்ணை உயிரோட்டமுள்ள மண்ணாக மாற்றவும், சத்துக்கள் குறையாத நெல், காய்கறி, பழங்கள் போன்றவற்றை சாகுபடி செய்ய இயற்கை விவசாயத்தால் மட்டுமே முடியும் எனக் கூறுகிறார், சாதனை பெண் விவசாயி தேவி வேலுசாமி.
கிருஷி ஜாக்ரன் பத்ரிகையின் சார்பில் மாதம் தோறும் 2வது ஞாயிற்றுக்கிழமைகளில் பெண் விவசாயிகள் பங்கேற்றும் ''Farmer The Brand'' என்ற நிகழ்ச்சி ஃபேஸ்புக் பக்கம் மூலம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி ஜனவரி 10ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண் விவசாயிகள் பங்கேற்றனர்.
5 பெண் விவசாயிகள் (Fix Lady Farmers)
தமிழ்நாடு, கேரளா, டெல்லி உட்பட 5 மாநிலங்களைச் சேர்ந்த 5 சாதனை பெண் விவசாயிகள் பங்கேற்று, தங்களது வெற்றியின் ரகசியம் குறித்து எடுத்துரைத்தனர்.
இதில் தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்தில் உள்ள கணபதி பாளையத்தைச் சேர்ந்த பெண் விவசாயி தேவி வேலுசாமி கலந்துகொண்டு பேசினார்.
ரசாயன உரத்தின் விளைவு (Effect of chemical fertilizer)
அவர் கூறுகையில், கடந்த 2015ம் ஆண்டு முதல் விவசாயம் செய்து வருகிறேன். முதலில் என் குடும்பத் தேவையை நிறைவேற்றுவதற்காக குறைந்த பரப்பளவில், சின்னவெங்காயம், காய்கறிகள் உள்ளிட்டவற்றை விளைவித்தேன். பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல்களில் இருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக அளவுக்கு அதிகமான ரசாயன உரங்களைப் பயன்படுத்தினேன்.
இதன் விளைவாக என் கணவருக்கு இதய பாதிப்பு ஏற்பட்டது.
இந்த பாதிப்பு என்னை இயற்கை விவசாயம் நோக்கி பயணிக்க வைத்தது. பயிர்களின் சத்துக்கள் குறையாமல், அப்படியே வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்ல இயற்கை விவசாயமே சிறந்தது என்பதை உணர்ந்துகொண்டேன்.
சுபேஷ் பாலேக்கரிடம் பயிற்சி (Training)
அப்போது சுபேஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் ஆர்கானிக் ஃபார்மிங் பயிற்சி வகுப்பு பல்லடத்தில் நடைபெற்றதால், அதில் கலந்துகொண்டு, 8 நாள் பயிற்சி எடுத்துக்கொண்டேன். ஈஷா பசுமைக்கரங்களும் உதவி செய்ததால், இயற்கை விவசாயத்தை இன்று வெற்றிகரமாகச் செய்து வருகிறேன்.
முருங்கைக்கீரையில் முக்கியத்துவம் (Emphasis on drumsticks
முருங்கைக் கீரை சூப்பை நாள்தோறும் தவறாமல் குடிக்குமாறு கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இந்த அறிவுரை என்னை முருங்கையின் பக்கம் இழுத்தது.
மருத்துவரின் அறிவுரையைக் கருத்தில்கொண்டு, அனைவருக்கும்ம் சத்துக்கள் குறையாமல், முருங்கையை வளர்த்து கீரைப் பொடியாக விற்பனை செய்ய முன்வந்தேன். எங்களுடைய தயாரிப்பான முருங்கைக் கீரைப் பொடியை பேராசிரியர் சரவணன், டேப்ளட் (Tablet) செய்வதற்காக கொள்முதல் செய்துகொள்கிறார்.
பொன். ஆர்கானிக் முருங்கா (Pon.Organic Murunga)
இதுபோக, முருங்கைக் கீரை சூப் பொடி, முருங்கைக் கீரை தேனீர், முருங்கைக் கீரை இட்லி சாதப் பொடி ஆகிய மதிப்புக்கூட்டுப்பொருட்களாகவும் மாற்றி, பொன். ஆர்கானிக் முருங்கா(Pon.Organic Murunga)என்ற பிராண்ட்டில் இடைத்தரகர் இல்லாமல், விற்பனை செய்து வருகிறேன்.
என்னுடைய பிரதானப் பயிரான முருங்கையின் சாகுபடியைப் பொருத்தவரை, களை மேலாண்மை மிகவும் சவால் மிகுந்தது. அதைவிட சிக்கலானது நிழலில் உலர்த்தி நிறம் மாறாமல், பொடியாக்குவது. எனவே இவ்விரண்டு சவால்களையும் எதிர்கொள்ள அரசு உதவி செய்தால், கிராமப்பெண்களாகிய நாங்கள் இன்னும் பல பயிர்களையும் அதிகளவில் அறுவடை செய்து, இடைத்தரகர்கள் இல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்போம் என உறுதி அளிக்கிறேன்.
இடுபொருட்கள் (Inputs)
காங்கேயம் ரக நாட்டுகளையும் வளர்த்து வருகிறேன். அதன் சாணம், கோமியம் ஆகியவற்றைக் கொண்டு, பஞ்சாமிர்தம், ஜீவாமிர்தம் போன்றவற்றைத் தயாரித்து, களை மேலாண்மை செய்கிறோம். இது நுண்ணுயிர் பெருக்கத்திற்கும், மண்புழு உருவாக்கத்திற்கும் கை கொடுக்கிறது.
மண்வளத்தைக் காத்து, மனிதகுலத்தை பேணவேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். அதற்காக அயராது பாடுபடுகிறேன். இதுபோக, எங்களது மற்றப் பயிர்களான தென்னை, நிலக்கடலை ஆகியவற்றையும் மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றி விற்பனை செய்யயும் திட்டமிட்டுள்ளேன்.
பெண்களால் முடியும்(Women can Do)
21ம் நூற்றாண்டில் ஆணுக்கு நிகராக பெண்கள் எல்லாத் துறைகளிலும் சாதிப்பதைப் போல், விளைவித்தலை நேசிப்பதோடு இறங்கிச் செய்தால், இயற்கை விவசாயமும் சாத்தியம்தான்.
தரமான விதைகள், வளம்மிக்க மண், இயற்கை இடுபொருட்கள், ஆட்கள் பற்றாக்குறையைப் போக்க உதவும் இயந்திரங்கள் ஆகியவற்றுடன் அயராது உழைத்து, எங்கள் பண்ணையை மாதிரிப்பண்ணையாக மாற்ற வேண்டும் என்பது எனது கனவு. அதற்காக தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு தேவி வேலுசாமி கூறினார்.
மேலும் படிக்க...
விவசாயத்தில் ஜெயிக்க விவசாயக் குடும்பப் பின்னணி கட்டாயமில்லை- சாதனை பெண் விவசாயி கிரிஜா!