ஆந்திரா மாநிலம் பாபட்லா மாவட்டம், சிமடவாரி பாலம் கிராமத்தைச் சேர்ந்த 31 வயதான பெண் விவசாயி கனிமிசெட்டி பத்மஜா விவசாயிகள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார். அதற்கு காரணம் இயற்கை விவசாயிகளை கௌரவிக்கும் ஜெய்விக் விருதினை வென்றது தான்.
அவர் நூற்றுக்கணக்கான விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு மாற ஊக்குவித்ததோடு மட்டுமல்லாமல், இரசாயனமற்ற உணவின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வையும் தொடர்ச்சியாக பொது மக்களிடம் பரப்பி வருகிறார். அவரது அர்ப்பணிப்பு உணர்வுக்கும், முயற்சிக்கும் வலுசேர்க்கும் விதமாக சிறந்த இயற்கை விவசாயப் பெண்கள் பிரிவில் மதிப்புமிக்க ஜெய்விக் விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.
பத்மஜா, ஒரு பிஏ பட்டதாரி, விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர். “ரசாயன அடிப்படையிலான விவசாயத்தின் மூலம் நான் நல்ல லாபம் சம்பாதித்து வந்தாலும், அது ஆரோக்கியமானதல்ல என்று எனக்குத் தெரியும். நான் இயற்கை விவசாயத்தை நோக்கி செல்ல விரும்பினேன் ஆனால் எப்படி அதை நோக்கி பயணிப்பது என தெரியாமல் இருந்தது” என்கிறார்.
அப்போது தான் “2016 ஆம் ஆண்டில், Rythu Sadhikaraka Samstha (RySS) அதிகாரிகள் எனது கிராமத்திற்கு வருகை தந்து இயற்கை விவசாயத்தின் செயல்முறை மற்றும் அதன் பயன்களை விளக்கினர். எனது தாய் மாரடைப்பால் உயிரிழந்தார். என் பாட்டி புற்றுநோயுடன் போராடுவதைப் பார்த்தேன். இது தான் இயற்கை விவசாயத்தை நான் மேற்கொள்ள பிடிவாதமாக இருந்தமைக்கு காரணம்,” என்று பத்மஜா மேலும் கூறினார்.
"இது எளிதான பாதை அல்ல. நானே ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்கு விதை, ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன், சமையல் அறையில் உருவாகும் கழிவுகளில் இருந்து ‘ஞானஜீவாமிர்தம்’, ‘திராவஜீவாமிருதம்’ உள்ளிட்ட உரங்களை நானே தயாரித்து வைத்தேன்”.
”ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, நான் இப்போது இரண்டு ஏக்கர் நிலத்தில் 21 வெவ்வேறு பயிர்களை பருவமழைக்கு முந்தைய உலர் விதைப்பு நடைமுறைகள் மூலம் பயிரிடுகிறேன், ”என்று அவர் தனது விவசாய பணிகளை விளக்கினார். இவரின் விவசாய நடைமுறைகளை கண்டு மேலும் அவரது கிராமத்தில் 150 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இப்போது பத்மஜாவின் இயற்கை வேளாண் முறையினை பின்பற்றுகிறார்கள்.
மற்ற விவசாயிகளுக்கு கல்வி கற்பது எளிதான காரியம் அல்ல என்பதை விளக்கிய பத்மஜா, “ஆரோக்கியமான உணவை பயிரிடுவதோடு, மண்ணின் ஆரோக்கியத்தையும் பராமரிப்பதும் முக்கியம். ஆரம்பத்தில், மாட்டுச் சாணம், சமையலறைக் கழிவுகள் மற்றும் மண்ணின் வளத்தை அதிகரிக்கும் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்த தொடங்கினேன். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளுக்கு செலவழிக்கும் பணத்தை மிச்சப்படுத்துவதற்காக, வீட்டில் எல்லா உரங்களையும் தயாரித்ததற்காக பலர் என்னைக் கேலி செய்தனர். ஆனால் இறுதியில், இன்று அனைவரும் என்னை பாரட்டுகின்றனர்'' என்கிறார்.
ஜெய்விக் விருதுகளைப் பெறுவது குறித்த தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்ட பத்மஜா, “நான் எனது வேலையைச் செய்து கொண்டிருந்தேன், எனக்குப் பிடித்தமானது, தேசிய மேடையில் இதுபோன்ற அங்கீகாரத்தைப் பெறுவேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இது உண்மையிலேயே ஒரு பெருமையான தருணம் மற்றும் மண்ணின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், மக்களுக்கு ஆரோக்கியமான உணவை வழங்கவும் பாடுபடும் என்னைப் போன்ற பல விவசாயிகளுக்கு இது மிகவும் ஊக்கமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
ஆர்கானிக் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், பத்மஜா தனது பொருட்களை எந்த சந்தையிலும் போய் விற்க வேண்டிய தேவை வரவில்லை. ஏனெனில் பல நம்பகமான வாடிக்கையாளர்கள் அவரிடம் வந்து பொருட்களை நேரடியாக அவரது பண்ணையில் இருந்து வாங்குகிறார்கள்.
மேலும் காண்க: