ஒரு நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 420 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, அந்த நாடு எது எனத் தெரியுமா? ஆம். இலங்கைதான்.
இந்தியாவின் அண்டைநாடான இலங்கை, ஏற்கெனவே மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பணவீக்கம், விலைவாசி உயர்வு, கடன்கள், அந்நிய செலாவணி நெருக்கடி என பல்வேறு பிரச்னைகளில் இலங்கை சிக்கியுள்ளது.
111 ரூபாய்
இந்நிலையில், இலங்கையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 82 ரூபாய் வீதம், அந்நாட்டின் பொதுத்துறை நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (CPC) உயர்த்தியுள்ளது. இதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 111 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.420
இதனால், இலங்கையில் பெட்ரோல் டீசல் விலை மிக மோசமாக உயர்ந்துள்ளது. இப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 420 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 400 ரூபாயாகவும் உள்ளது. இது இலங்கையில் வரலாறு காணாத விலை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களை வாங்குவதற்கு இலங்கை அரசிடம் போதிய பணம் இல்லை. இதற்காக இந்தியாவிடம் இருந்து கடன் கிடைக்கும் எனவும் இலங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறது. அதிகாலை 3 மணி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கையில் ஏற்கெனவே பணவீக்கம் மிக மோசமாக உள்ளதால் சாதாரண மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கே திணறி வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...