நமது கிரிஷி ஜாக்ரன் குழு கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் விவசாயம் தொடர்பான சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, பிசியோதெரபி மருத்துவர் ஒருவர் குறைந்த நிலப்பரப்பிலும் நிறைவான விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார் என கேள்விப்பட்டோம். அவர் யார்? தனது நிலத்தில் எவ்வித முறையில் வேளாண் பணியில் ஈடுபடுகிறார் என்பதை பற்றி தெரிந்துக் கொள்ள நேரிடையாக அவரை பேட்டி கண்டோம். அதன் விவரங்கள் பின்வருமாறு-
50 செண்ட் நிலத்தில் பகுதி நேரமாக ஒருங்கிணைந்த பண்ணை முறையில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் பிஸியோதெரபி மருத்துவர் ராஜீவ் காந்தி, சேரன்மாநகர் பகுதியில் 2 கிளினிக் மூலம் பிஸியோதெரபி மருத்துவ பணியிலும் ஈடுபடுகிறார். ஒருபுறம் மருத்துவப் பணியில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் வேளையில், ஒருங்கிணைந்த பண்ணை முறையில் விவசாயப்பணியில் ஈடுபட எதனால் ஆர்வம் வந்தது என்று நேரிடையாகவே நாம் கேட்டோம்?
அதற்கு “நான் பகுதி நேரமாக தான் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பின் தான் விவசாயத்தில் இறங்க முடிவு செய்தேன். விவசாயத்தில் ஈடுபட முழு காரணமும் அப்பா தான். சிறிய வயதில் அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்ட பண்ணை செயல்பாடுகள் தற்போது உதவுகிறது” என ராஜீவ் காந்தி பதிலளித்தார்.
விவசாயத்துடன் நாட்டுக் கோழி வளர்ப்பு:
50 செண்ட் நிலப்பரப்பில், 43 தென்னை மரங்கள் மற்றும் மாதுளை, எலுமிச்சை, முள் சீத்தா, பலா மரம், கொய்யா, மரம், நெல்லி, பப்பாளி உட்பட 50 பழ மரங்களையும் பயிரிட்டு பராமரித்து வருகிறார். ராஜீவ் தனது விவசாய பணிகள் முழுமையும் இயற்கை விவசாய முறையில் தான் செய்து வருகிறார். விவசாயத்தை தாண்டி கால்நடை வளர்ப்பில் பெருவிடை, சிறுவிடை, கடக்நாத் போன்ற கோழி வகைகளையும், வாத்துகளையும் வளர்த்து வருகிறார்.
மகசூலை விட ஆரோக்கியம் முக்கியம்ல?
மீன் அமில கரைசல், பஞ்சகாவ்யா, மோர் கரைசல், நாட்டுக்கோழிகளின் கழிவுகள் போன்றவற்றை தான் பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தி வருகிறார்.
செயற்கை உரங்களை பயன்படுத்தினால் மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என கருதப்படும் நிலையில், இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்க காரணம் என்ன என்று கேட்டதற்கு, “ நீங்கள் சொல்றது சரிதான். மகசூல் கிடைக்கும், ஆனா அதை விட ஆரோக்கியம் ரொம்ப முக்கியம்ல. எனது குழந்தைகளுக்கு நாட்டுக் கோழி முட்டை தான் தருகிறோம். பிராய்லர் கோழி போன்றவற்றை தவிர்த்து வருகிறோம்” என்றார்.
Read more: பட்டுப் புழு வளர்ப்பு- 3 பயனாளிகளுக்கு ரூ.1.81 கோடி மானியம்! முழு விவரம்
மருத்துவ பணி முதன்மையானதாக இருப்பதால், தினந்தோறும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் தேவைக்கேற்ப குறைந்தது 2 முதல் 3 மணி நேரமாவது விவசாய பண்ணை மற்றும் கால்நடை பராமரிப்பு பணிகளுக்காக நேரத்தை செலவழித்து வருகிறார். ஆரம்ப காலக்கட்டத்தில் சொட்டு நீர் பாசன முறையை தான், விவசாய பணிகளுக்காக பயன்படுத்தி வந்துள்ளார் ராஜீவ் காந்தி.
ஆனால், சொட்டு நீர் பாசன முறையில் முழுமையாக நீர் பாய்ச்ச அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக உணர்ந்ததால், தற்போது வாய்க்கால் முறையில் தான் தனது விவசாய பணிகளை மேற்கொள்கிறார். போர்வெல் மூலம் வாய்க்கால்களில் நீர் பாய்ச்சுவதால் அதிகப்பட்சம் 2 மணி நேரத்திற்குள் முழுமையாக நீர் பாசன பணிகளை முடித்துவிடுகிறார்.
எதிர்க்கால திட்டம் என்ன?
தற்போது செய்து வரும் பணிகளை எதிர்காலத்தில் விரிவுப்படுத்த ஏதாவது திட்டமிருக்கிறதா என நாம் எழுப்பிய கேள்விக்கு, ” தற்போது அதற்கு சாத்தியமில்லை. மருத்துவ பணியில் கூடுதல் நேரம் செலவழித்து வருகிறேன். முழு நேர விவசாயியாக மாறும் போது நிச்சயம் இப்போது செய்து வருவதை விரிவுப்படுத்துவேன். தென்னை நன்றாக வளர்ந்து வருகிறது, எதிர்க்காலத்தில் கொப்பரை மூலம் எண்ணெய் தயாரிப்பு போன்ற மதிப்பு கூட்டுமுறையில் ஈடுபட ஒரு திட்டம் இருக்கிறது” என ராஜீவ் குறிப்பிட்டார்.
விவசாயத்தில் ஈடுபட விரும்புபவர்களுக்கு ஏதாவது கூற விரும்புறீங்களா என கேட்டதற்கு, ”உங்க வீட்டை சுற்றி கூட சின்ன சின்ன இடம் இருக்கும். தராளமாக விவசாய பணிகளை தொடங்கலாம். உங்க குழந்தைக்கு விவசாயம் பற்றி சொல்லிக் கொடுக்க விரும்பினால், பெற்றோர்களாகிய நீங்கள் முதலில் விவசாயம் மேற்கொள்ள வேண்டும். அடுத்த தலைமுறைக்கு விவசாயம் இருக்குமா என்று நீங்கள் யோசிக்கீறிங்க? முதலில் இந்த தலைமுறைக்கே ஆரோக்கியமான விவசாய பொருட்கள் இல்லை என்பது தான் நிதர்சனம். அடுத்த தலைமுறை என்றெல்லாம் இல்லீங்க..விவசாயம் இந்த தலைமுறை தான்” என தனது கருத்தினை ஆழமாக நம்மிடம் பகிர்ந்தார் பிசியோதெரபி மருத்துவர் ராஜீவ் காந்தி.
Read more:
ஒரே நேரத்தில் 6 வரிசையில் நெல் நடவு- மஹிந்திராவின் 6 RO Paddy Walker சிறப்பம்சம்!
இறைச்சிக்கு மாற்றாக தயார் நிலையில் பலாக் கறி: அசத்திய ICAR- IIHR விஞ்ஞானிகள்