விவசாயம், இந்த மக்களுக்கு சொல்லித்தரும் விஷயங்கள் ஏராளம். அதை அப்படியேப் பிடித்துக்கொண்டு, அனுதினமும் உழைத்தால், படிப்படியான வளர்ச்சி சாத்தியமே. ஏன், வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் நஷ்டத்தைக்கூட, துணைத்தொழில்கள் அல்லது ஆதரவுத் தொழில்கள் என அழைக்கப்படும் தொழில்களை ஒருங்கிணைத்து செய்தால், லாபம் கொட்டும் தொழிலாக விவசாயத்தை மாற்றிக்கொள்ளலாம்.
லாபகரமான தொழில்
அதிலும் இயற்கை விவசாயத்தில் அளப்பரிய நன்மைகளையும் நமதாக்கிக்கொள்ள பல வாய்ப்புகள் உண்டு. அந்த வகையில் ஒருங்கிணைந்த இயற்கை பண்ணையத்தை அமைத்து, லாபகரமானத் தொழிலாக விவசாயத்தை மாற்றியிருப்பதோடு, மற்றவர்களுக்கும், லாபம் ஈட்டும் யுக்தியையும் சொல்லிக்கொடுக்கிறது கோவை மாவட்டம் பன்னிமடையில் இயங்கும் கிருஷ்ணா இயற்கை ஒருங்கிணைந்த பண்ணையம்.
கிருஷி ஜாக்ரன் தமிழ்நாடு ஃபேஸ்புக் பக்கத்தில், Farmer the Brand நிகழ்ச்சியின் மாதாந்திர நிகழ்ச்சியில், ஸ்ரீ கிருஷ்ணா இயற்கை ஒருங்கிணைந்த பண்ணையத்தின் உரிமையாளர்கள் பொன்ராஜ் பிரபு, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், பங்கேற்று, தங்களது ஒருங்கிணைந்த இயற்கை பண்ணையத்தின் பல்வேறு யுக்திகள் குறித்து விளக்கினர்.
பார்வையிட அனுமதி (Visitors Allowed)
இதில் பேசிய பொன்ராஜ்பிரபு, தங்களது அங்கக சான்று பெற்ற நிறுவனம் என்பதாகவும், தங்கள் பண்ணையத்தை பார்வையிடவும், பயிற்சி பெறவும் மற்றவர்களுக்கு வாய்ப்பு அளித்திருப்பதாகவும் கூறினார்.
மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் (Value Added Products)
மேலும், காஃபிக்கொட்டையில் இருந்து சுத்தமான காஃபி பொடி, மண்புழு உரம், மரச்செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், Dish Wash Gel , பினாயில் ஜீவாமிர்தம், 5 இலை உரம், பூச்சி விரட்டி, நல்லெண்ணெய், முருங்கக்கீரைப் பருப்புப் பொடி, குளியலுக்கான மூலிகை சோப்பு போன்ற மதிப்புக்கூட்டுப்பொருட்களையும், நாட்டுக்கோழி முட்டை, வாத்து முட்டை, மற்றும் மரக்கன்றுகள் போன்றவற்றையும் விற்பனை செய்வதாகவும், மக்களிடையே தங்களது தயாரிப்புகளுக்கு எப்போதும் தேவை அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கிருஷ்ணமூர்த்தி, தென்னைக்கு இடையே ஊடுபயிராக காய்கறிகளையும், பழங்களையும் சாகுபடி செய்து, அவற்றையும் விற்பனை செய்வதாகவும், பாக்கு, தேக்கு, நாட்டுத் தென்னை(நெட்டை) நர்சரி வைத்து கன்றுகளை விற்பனை செய்வதாகவும் தெரிவித்தார்.
குளம், குளத்தில் மீன் வளர்ப்பு, அத்துடன் கால்நடைகளின் புரதச்சத்து தீவனமான அசோலா வளர்ப்பு, அதன் மேல் பரண் அமைத்து ஆடு வளர்த்தல், அவற்றுடன் இணைத்து, நாட்டுக்கோழி, மாடு, தேனீ, முயல், ஈமுக்கோழி ஆகியவற்றையும் வளர்ப்பதால், தங்கள் பண்ணையம் ஒருங்கிணைந்த பண்ணையமாகத் திகழ்வதாகக் கூறினார்.
ஆடுகளின் கழிவு மீன்களுக்கு உணவாதல், மற்றவற்றின் கழிவுகள் அனைத்தையும் உர நீராக மாற்றி, சொட்டுநீர் பாசத்தில் கலந்து, இயற்கை சாகுபடிக்கு பயன்படுத்துதல் போன்றவற்றால், இயற்கை சீற்றம் ஏற்படும் காலங்களில் கூட, இந்த துணைத்தொழில் வருமானம் மூலம் இயற்கை விவசாயத்தை லாபகரமாக மாற்றியிருப்பதாகவும் கிருஷ்ணமூர்த்தி விளக்கினார்.
தந்தையும், மகனுமாக சேர்ந்து இவர்கள் மேற்கொள்ளும் யுக்தியை மற்ற விவசாயிகளும் கடைப்பிடிக்க முன்வரலாமே.
மேலும் படிக்க...
மானிய விலையில் நெல் விதைகள் - வாங்கிப் பயனடைய உடுமலை விவசாயிகளுக்கு அழைப்பு!
பட்டுப் புழு வளர்ப்பை அதிகரிக்க மத்திய அரசின் திட்டம் - தேனி விவசாயிகளுக்கு வாய்ப்பு!