மலேர்கோட்லா மாவட்டத்தில் உள்ள ஃபெரோஸ்பூர் குத்தாலா கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான முற்போக்கு விவசாயி குர்ப்ரீத் சிங் குத்தாலா மற்ற விவசாயிகளைப் போல் அல்லாமல் நெல் வைக்கோலில் இருந்து மட்டும் நன்றாக சம்பாதித்து வருகிறார். இந்த ஆண்டு ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவேன் என நம்பிக்கையுடன் திகழ்கிறார்.
பஞ்சாப் விவசாயிகளுக்கு முன்னோடியாக திகழும் குத்தாலாவிற்கு அம்மாநில வேளாண் துறை அமைச்சரும் தனது வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மற்றும் டெல்லி மாநிலங்கள் இடையே தற்போது நிலவும் பெரிய பிரச்சினை காற்று மாசு. அதற்கு பெரும்பாலான காரணமாக கருதப்படுவது விவசாயிகள் அறுவடைக்கு பிந்தைய விவசாய கழிவுகளை எரிப்பதே ஆகும். மாநில அரசும் விவசாய கழிவுகளை உரிய முறையில் அப்புறப்படுத்தாது எரிக்கும் விவசாயிகள் மீது வழக்குத் தொடர்வது போன்ற கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இந்நிலையில் தான் விவசாய கழிவுகளுள் ஒன்றான வைக்கோலினை உரிய முறையில் விற்பனை செய்து லட்சங்களை ஈட்டும் பஞ்சாப் விவசாயி குத்தாலா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள குத்தாலா மொத்தம் 40 ஏக்கர் நிலத்தில் (தனக்கு சொந்தமாக 10 ஏக்கர் மற்றும் 30 ஏக்கர் குத்தகைக்கு) விவசாயம் செய்து வருகிறார்.
இவர் கடந்த ஆண்டு 12000 குவிண்டால் நெல் வைக்கோல் மூட்டைகளை சப்ளை செய்ய சங்ரூர் ஆர்என்ஜி பயோ கேஸ் ஆலை, பஞ்சகராயன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, நெல் வைக்கோலை விற்று சுமார் ரூ.16 லட்சம் சம்பாதித்துள்ளார். இப்போது, இந்த இளம் விவசாயி தனது நண்பர் சுக்விந்தர் சிங் உதவியுடன் நான்கு புதிய பேலர்ஸ் மற்றும் ரேக்ஸ் இரண்டு இயந்திரங்களை (விவசாய கழிவுகளை சுத்திகரிக்கும்) வாங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு கிடைத்த லாபத்தை விட இந்த ஆண்டு ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்த இளம் விவசாயி, 18 ஆயிரம் குவிண்டால் நெல் வைக்கோல் மூட்டைகளை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.160-க்கும், சங்ரூர் ஆர்என்ஜி பயோ கேஸ் ஆலைக்கு கொண்டு செல்ல ரூ.10-க்கும் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறியுள்ளார். இந்த பருவத்தில், அமிர்தசரஸ் மாவட்டத்தில் 5000 குவிண்டால் நெல் வைக்கோல் மூட்டைகளையும், உள்ளூர் குஜ்ஜார் சமூகத்திற்கு 5000 குவிண்டால்களையும் வழங்க புசாவ் பெலருடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
அவர் தனது சொந்த நிலம் மற்றும் அருகிலுள்ள பிற கிராமங்களில் இருந்து சுமார் 20,000 குவிண்டால் மூட்டைகளை சேமித்து வைப்பதாகவும், சீசன் இல்லாத காலத்தில் காகித ஆலைகள், பயோ-சிஎன்ஜி ஆலைகளுக்கு சுமார் 280 ரூபாய்க்கு வழங்குவதாகவும் தெரிவித்தார்.
சுற்றுச்சூழலைக் காப்பதற்கான மாநில அரசின் முயற்சியில் இணைந்ததற்காக இளம் விவசாயிக்கு வாழ்த்து தெரிவித்த பஞ்சாப் மாநில விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் குர்மீத் சிங் குதியன், அனைத்து விவசாயிகளும் முற்போக்கான விவசாயி குர்பிரீத் சிங்கின் உத்வேகத்தைப் பெற்று, பஞ்சாப் மாநிலத்தின் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
நெல் வைக்கோல் எரிப்பு சம்பவங்களைத் தடுக்கவும், பயிர் எச்சங்களை திறம்பட நிர்வகிக்கவும் இந்த அறுவடைக் காலத்தில் மாநில விவசாயிகளுக்கு மேற்பரப்பு விதைகள் உள்ளிட்ட சுமார் 24,000 பயிர் எச்ச மேலாண்மை (CRM) இயந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் குளிர்க்காலங்களில் காற்றின் தரக்குறியீடு மிகவும் மோசமாகி வருவது குறிப்பிடத்தக்கது. காற்று மாசுப்பாடுக்கு விவசாயிகளும் ஒரு காரணம் என கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தொடர்ந்து விவசாய கழிவுகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. காற்று மாசுப்பாட்டினால் பொதுமக்கள், குழந்தைகள் என பலரும் உடல்நலப் பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில் பஞ்சாப் விவசாயியின் வியாபார யுக்தி அனைவரின் பாரட்டுகளைப் பெற்றுள்ளது.
இதையும் காண்க:
தொப்பென்று விழுந்த தங்கம்- ஒரே நாளில் அதிரடி விலை சரிவு
PVR INOX Passport: வெறும் ரூ.699-க்கு மாசம் 10 படம் பார்க்கலாமா?