திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் மங்கலம் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட சாலை அருணுக்கு தனி அறிமுகம் தேவையில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு விதை இரகங்களை சேகரிக்க இந்திய அளவில் பயணம் மேற்கொண்ட தமிழர் என விவசாயிகள் மத்தியில் ஆழமாக பதிந்த பெயர் தான் சாலை அருண்.
இந்நிலையில் சாலை அருண் தற்போது எத்தகைய பணியில் ஈடுபட்டுள்ளார்? அவரது வருங்கால திட்டம் என்ன? போன்றவற்றை தெரிந்துக் கொள்வதற்காக நமது கிரிஷி ஜாக்ரன் தொலைபேசி வாயிலாக சாலை அருணிடம் நேர்க்காணல் மேற்கொண்டது. அதன் விவரங்கள் பின்வருமாறு-
கே: தங்களின் இளைமைக்காலம் எப்படி? விதை சேகரிப்பிற்கான இந்திய பயணம் குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன்.
”சின்ன வயசுல தாத்தா-பாட்டி வீட்ல தான் வளர்ந்தேன். தாத்தா விவசாய பணியில் ஈடுபட்டு வந்தார். சிறு வயது முதலே விவசாயம் மேற்கொள்ளும் முறையினை பார்த்து தான் வளர்ந்தேன். விவசாயம் செய்யல, பார்த்தேன். நான் சிறியவனாக இருக்கும் போது விவசாயப் பணியில் ஈடுபட எல்லாம் தாத்தா அனுமதிக்கல. பொதுவாக ஏதாவது விஷயத்தை செய்யக்கூடாது என தடுத்தால், அதை செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் வரும்ல அப்படி தான் விவசாயத்தின் மீது ஆர்வம் வளர்ந்தது.”
”2011 ஆம் ஆண்டு ஐயா நம்மாழ்வார் அவர்களை ஒரு புத்தக கண்காட்சியில் சந்தித்தேன். அதன்பின் அவர்களது விவசாயம் குறித்த வானகம் பயிற்சி வகுப்பில் கலந்துக் கொண்டேன். கிட்டத்தட்ட வானகத்தில் 3 வருடங்களாக தங்கி நான் மற்றவர்களுக்கு ஒரு மாத பயிற்சி, 6 மாத பயிற்சி, 50 நாள் பயிற்சி என வகுப்பு நடத்தியுள்ளேன்.”
”இதன்பின் முசிறியில் ஒரு நாட்டு விதை விற்பனை கடையில் வேலை செய்தேன். அப்போது தான் விதைகள் மீது அதீத ஆர்வம் வந்தது. சேகுவேராவின் மோட்டார் சைக்கிள் டைரி எனக்குள் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்திய விஷயங்களில் ஒன்று. அவற்றினை படித்தது முதல் நம்மளும் இந்தியா முழுவதும் நடந்து போக வேண்டும் என்கிற ஆசை இருந்துச்சு. ஒருப்புறம் உடல்நிலை சரியில்லாமல் மோசமாக மோசமாக.. சரி, நடக்க வேண்டாம், சைக்கிளிலில் பயணிக்கலாம் என்றெல்லாம் திட்டமிட்டேன்.”
”பின்னர் 2021 ஆம் ஆண்டு கையில் இருந்த 300 ரூபாயோடு, நண்பர்களின் பங்களிப்போடும் பைக்கில் விதை சேகரிப்பு தொடர்பான இந்திய பயணத்தை தொடங்கினேன். முன்னதாக தமிழ்நாட்டிற்குள் மட்டும் கிட்டத்தட்ட 80,000 கி.மீ பயணித்து 300 வகையான நாட்டு காய்கறி விதைகளை சேகரித்து வைத்திருந்தேன்."
"இந்திய பயணத்தின் போது விதை விற்பனையாளர்கள், விதை சேகரிப்பாளர்கள், விதை மீது ஆர்வம் கொண்டவர்கள்னு தேடி தேடி போய் அவர்களிடம் அதனை இலவசமாக வழங்கினேன். 6 மாதங்களில் ஏறத்தாழ 15 மாநிலங்களுக்குள் பயணித்து விதை சேகரிப்பு பணியில் ஈடுபட்டேன்” என்றார்.
Read also: ஒரே கிணறு- 50 ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனம்: அசத்தும் சிவகங்கை இளைஞர்!
கே: இப்போ எங்க இருக்கீங்க? என்ன மாதிரியான பணியில் ஈடுபட்டு வாறீங்க?
”மெய்வழிச்சாலை மீதான ஆர்வத்தில் அங்கேயே சென்று நிரந்தரமாக தங்கிவிடலாம் என ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்தேன். 5 செண்ட் பரப்பளவில் தோட்ட பராமரிப்பில் ஈடுபடத் தொடங்கினேன். காய்கறி, கீரை வகை, பூ வகை, செடி, மூலிகை, மரம் என 300-350 வகைகளை உள்ளடக்கிய தோட்டம் ஒன்றினை பராமரித்து வருகிறேன். வேறு இடத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளதால் தற்போது புதிதாக எதுவும் பயிரிடுவதில்லை. ஏற்கெனவே இருப்பதை மட்டும் பராமரிக்கிறேன்.
”கற்பகத்தரு” என்கிற பெயரில் சேகரித்த விதைகளை விற்கும் பணியினை தொடங்கியுள்ளேன். 100 வகையான விதைகள் இப்ப நம்மக்கிட்ட கிடைக்கும். சுரைக்காய்ல 15 இரகம், அவரையில் 20 இரகம், தக்காளி, மிளகாய், பீர்க்கங்காய் போன்றவற்றில் தலா 10 இரகம்னு என்னிடம் மட்டும் விதைகள் இருக்கு. இதுப்போக இந்தியா முழுவதுமுள்ள எனது நண்பர்களிடம் மற்ற வகைகள் இருக்கு. வேண்டும் என்கிற தருணத்தில் ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொள்வோம்” எனக் குறிப்பிட்டார் சாலை அருண்.
(விரிவான பேட்டி இம்மாத கிரிஷி ஜாக்ரன் மாத இதழில் வெளிவரும்.)
Read more:
விவசாயம்.. காளான் வளர்ப்பில் 100 நாள் திட்ட பணியாளர்கள்- வருமானம் ஈட்டி அசத்தும் தட்டட்டி ஊராட்சி
கொஞ்சம் மருந்து தெளிச்சாலும் பிரச்சினை தான்- மிளகாய் ஏற்றுமதியில் அசத்தும் இயற்கை விவசாயி