இன்றைய சூழ்நிலையில் விவசாயத்தில் எந்த முன்னேற்றமும், லாபமும் காணாத விவசாயிகள் மத்தியில் இயற்கை விவசாயம் செய்து ஓர் முன்னோடியாக விளங்கி வருகிறார் இந்த விவசாயி. பொள்ளாச்சியில் உள்ள வேட்டைக்காரன்புதூரில் விவசாயி வள்ளுவன் அவர்களின் இயற்கை தோட்டம் அமைந்துள்ளது. அவரது தோப்பில் 1,900 தென்னை மரங்கள், 9000 டிம்பர், 700 பழ வகைகள், 600 வாழை, 500 ஜாதிக்காய், 100 பப்பாளி என இப்படி ஏராளமான மரங்களை ஒரே இடத்தில் நட்டு சிறிய காட்டையே உருவாக்கியுள்ளார்.
ஈஷா வழிகாட்டுதலுடன்
2006-ல் இந்த தோப்பை வாங்கிய போது சுற்றிலும் வெறும் தென்னை மரங்களாகவே இருந்தது. ஈஷா விவசாய இயக்கத்தின் வழிகாட்டுதலோடு 2009-ல் பல அடுக்கு பயிர் முறையை துவங்கினேன். தென்னை மரங்களுக்கு நடுவே மற்ற மரங்களை ஊடு பயிராக நட்டுவைத்தேன். தென்னைக்கு அடுத்தப்படிய சிறிது உயரம் குறைவான டிம்பர் மரங்களையும், பாக்கு மரங்களையும், நட்டு வைத்துள்ளேன். அதற்கு அடுத்தபடியாக வாழை மரங்கள், இடை இடையில் ஜாதிக்காய், எலும்பிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகிய மரங்களை நட்டு வைத்துள்ளேன், என்று கூறினார்.
வளர்ச்சிக்கு உதவும் ஈரப்பதம்
இப்படி அடுக்கடுக்காக மரங்களை நட்டிருப்பதால் அனைத்து மரங்களுக்கும் சரிசமமாக சூரிய ஒளி கிடைக்கிறது, மற்றும் அதிக அளவில் சூரிய ஒளி தரையில் படாத காரணத்தால் நிலத்தில் எளிதில் வறட்சி ஏற்படாது. மரங்களில் இருந்து விழும் இலை, தலைகள், தென்னை மட்டை எதையும் தூக்கி போடாமல் நிலத்திலேய விட்டு விடுவதால் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும் மற்றும் சிறிது காலம் மண்ணோடு மக்கி உரமாக மாறிவிடுகிறது.
ஒரு வருடத்திற்கு முன்பு ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக பக்கத்து தோப்புகளில் உள்ள அணைத்து மரங்களின் இலைகளும் காய்ந்து, நஷ்டம் அளித்தது. ஆனால் என்னுடைய தோப்பில் மட்டும் மரங்கள் தாக்குப்பிடித்து பழங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
வருமானம்
தென்னங்காயை உரித்து அதில் வரும் தேங்காய் மற்றும் கொப்பரையாக்கி விற்கிறேன், கொப்பரையை செக்கில் அரைத்து எண்ணெய்யாக்கி விற்பனை செய்கிறேன், பின்பு எலும்பிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகிய வற்றை விற்பனை செய்து வருமானம் ஈட்டுகிறேன். மேலும் மழை மற்றும் பனி காலங்களில் பயிர் பொருட்களை உலர வைப்பது சிரமமாக இருக்கும் காரணத்தால் சூரிய ஒளி உலர் களம் ஒன்றை அமைத்துள்ளதாக கூறினார்.
நீர் மேலாண்மை
ஈஷா விவசாய இயக்கத்தின் வல்லுனர்களின் ஆலோசனைப்படி சொட்டுநீர் பாசன முறையில் நீர் பாய்ச்சல் செய்து வருகிறேன். இதனால் சாதாரணமாக மற்ற விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கே எனக்கு தேவைபடுகிறது.
பிரபலமானார் வள்ளுவன்
இந்த செய்திகள் அனைத்தும் தெரிந்து கொண்டு ஏராளமான விவசாயிகள் எனது தோட்டத்தை பார்த்து விட்டு செல்கின்றனர். அத்துடன் உள்ளூர் விவசாயிகள் மட்டுமன்றி வெளி மாநில விவசாயிகளும் சிறந்த முறையில் சாகுபடி செய்வதாக பாராட்டி செல்கின்றனர் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
இப்படி ஒரே இடத்தில் பல்வேறு மரங்களை ஊடு பயிராக நட்டுவைத்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் இந்த விவசாயி வள்ளுவன்.
K.SAKTHIPRIYA
KRISHI JAGRAN