பிரச்சனைகளை கண்டு துவண்டு சரணடைவது அறிவுடைமை ஆகாது. உங்களுக்கு நேரம் சரியில்லை என்றாலும் முயற்சி செய்வதைக் கைவிடக் கூடாது. இதைத்தான் வலியுறுத்துகிறது. ‘முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்’ என்பது தமிழ் முதுமொழி.
மத்தியப்பிரதேச மாநிலம் முறைனா மாவட்டம் ஜபல்பூர் கிராமத்துப் பெண்மணி ரேகா தியாகி. தனது கடும் உழைப்பின் காரணமாக விவசாயத்தில் சாதனை புரிந்துள்ள இவர் இன்று ஒரு முன்மாதிரி பெண்மணியாக விளங்குகிறார்.
சிறுதானியப் பயிர் சாகுபடியில் இமாலய சாதனைபுரிந்து பெரிய விவசாயிகளும் பெரும் நிலச் சுவான்தாரர்களும் செய்ய முடியாத செயலை ரேகா தியாகி வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளார். சிறுதானியப் பயிர் சாகுபடியில் அமோக மகசூலை அறுவடை செய்துள்ள முதல் பெண் விவசாயி இவர்தான் என்று பாராட்டப்பட்டுள்ளார்.
ரேகாவின் கல்வித்தகுதி ஐந்தாம் வகுப்பு மட்டுமே. இவரது கணவர் இறந்த பிறகு இவருக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன. பணக்கஷ்டம் இவரைவாட்டியது. குடும்பத்தினருக்கு உணவு அளிக்க முடியாமல் கஷ்டப்பட்டார். இவருக்கு விவசாயம் செய்வதற்கு விளைநிலம் இருந்தது. ஆனால் விவசாயம் செய்வது எப்படி என்பது இவருக்குத் தெரியாது. தேவையான பணமும் இவரிடம் கிடையாது. இத்தகைய சூழ்நிலையில் இவரது 20 எக்டர் நிலத்தில் சிறுதானியப் பயிரைப் பயிரிட்டார். பாரம்பரியமுறை பயிர் சாகுபடியை கைவிட்டுவிட்டு, விஞ்ஞான முறை சாகுபடிக்கு மாறினார். புதிய பயிர் ரக விதைகளை தேர்வு செய்து விதைத்தார். மண் பரிசோதனை செய்து உரமிட்டார். நவீன முறையில் பாசனம் செய்தார்.
சிறுதானியப் பயிர் விதைகளை நேரடியாக வயலில் விதைப்பதை தவிர்த்து விட்டு. நாற்று விட்டு நடவு செய்தார். இந்த சாகுபடி முறையில் சாதனை படைக்கும் அளவுக்கு மகசூல் கிடைத்தது. பாரம்பரிய விவசாய முறையில் சிறுதானியப் பயிரில் 15 – 20 குவிண்டால் மகசூல்தான் கிடைக்கும். இவர் கடைபிடித்த கட்டுக்கோப்பு சாகுபடி முறையில் 40 குவிண்டால் மகசூல் கிடைத்தது.
ரேகாவின் விவசாய வெற்றி பற்றிய செய்தி பிரதம மந்திரிக்கு கிடைத்தது. அவர் தனது பாராட்டுக்களை ரேகா தியாகிக்குத் தெரிவித்தார். இந்திய வேளாண்மை அமைச்சகம் இவரது வேளாண் சாதனையைப் பாராட்டி 2 லட்சம் பணமுடிப்பும் பாராட்டு பத்திரமும் வழங்கி கௌரவித்தது.
விவசாயத்தில் மாபெரும் சாதனை புரிந்துள்ள ரேகா தியாகியை பாராட்டி மத்தியப் பிரதேச பெண் விவசாயிகளுக்கு இவரை ஒரு முன்மாதிரி பெண் விவசாயியாக அம்மாநில அரசு பிரகடனம் செய்யும் என்று மாநில விவசாயத்துறை துணை இயக்குனர் விஜயாசார்சியா கூறியுள்ளார்.