பட்டயக் கணக்காளராக வேண்டும் என்ற தனது கனவை ஒதுக்கி வைத்துவிட்டு, மறைந்த தந்தையின் கனவுகளில் ஒன்றை நிறைவேற்றத் தேர்ந்தெடுத்தார், நிகிதா வைஜு பாட்டீல். விவசாயத் தொழிலில் தீவிரமான திட்டமிடல் மற்றும் அவரது ஈடுப்பாட்டால், இன்று அவர் விவசாய சமூகத்திற்கு ஒரு உத்வேகமாக மாறியுள்ளார்.
பெலகாவி தாலுகாவில் உள்ள ஜாபர்வாடி கிராமத்தைச் சேர்ந்த நிகிதா (26) நடுத்தர விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர், பள்ளிப் பருவத்திலிருந்தே பட்டயக் கணக்குப் படிக்க விரும்பினார். ஆனால் கடந்த ஆண்டு, அவரது தந்தை வைஜுவின் எதிர்பாராத மரணத்திற்குப் பிறகு, நிகிதாவின் வாழ்க்கை மாறியது, மேலும் அவரது இலக்குகளும் மாறியது.
நிகிதா ஒரு சிறந்த விவசாயியாக இருக்க வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார். தந்தையின் மறைவிற்கு பிறகு விவசாயத்தை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார். இதில் அவருக்கு தாய் அஞ்சனா, சகோதரர் அபிஷேக், மாமா தானாஜி ஆகியோர் உதவினர்.
நிகிதாவின் இந்த முடிவால் நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்தனர், சிலர் அவரது குடும்பத்தினரிடம் ஒரு பெண் விவசாயத்தை மேற்கொள்வது நல்லதல்ல, ஏனெனில் இது எளிதான வேலை இல்லை என்று கூறினார். ஆனால் நிகிதா உறுதியாக நின்று, ஒரு விவசாயியாக நிச்சயம் சாதிப்பேன் என நம்பிக்கையோடு கால் பதித்தார்.
ஆரம்பத்தில், சோதனை முயற்சியாக 15 குண்டாஸ் நிலத்தில் வெள்ளரிகளை பயிரிட்டார். எதிர்பாராத வானிலை மாற்றத்தினால் பயிர் சேதம் அடைந்து அவரது முதல் முயற்சி தோல்வியடைந்தது. ஆனாலும் நிகிதா துவண்டு போகவில்லை.
அதற்கு காரணம் தனது தந்தை எனக்கு கூறிய வார்த்தைகள் தான் பெரிய ஊக்கம் என நிகிதா விவரிக்கிறார். “தோல்வியே வெற்றிக்கான முதல் படி” என எப்போதும் தனது தந்தை கூறுவார் என தெரிவித்துள்ளார். நிகிதாவும், அவருடைய சகோதரரும் ஆரோக்கியமான பயிர்கள் பயிரிடப்பட்ட வெவ்வேறு வயல்களுக்குச் சென்று, அங்குள்ள விவசாயிகளுடன் அவர்களது நடவுமுறை பற்றி கேட்டறிந்தனர். விவசாயத்தில் கைதேர்ந்த மாமா தானாஜியிடமும் ஆலோசனை பெற்றனர்.
இயற்கை விவசாயம் தவிர, சமீபத்திய விவசாய முறைகளைப் புரிந்து கொள்ளவும், ஆரோக்கியமான பயிர்களை பயிரிடவும் புத்தகங்கள் மற்றும் ஆன்லைன் ஆதாரங்களையும் நாடியுள்ளனர்.
மிளகாய் பவுண்டி:
அவரது அடுத்த பரிசோதனையானது ‘நவல்பட்கா’ என்ற சிறப்பு வகை மிளகாய். தன் குடும்பத்துக்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் 30 குண்டங்களில் மிளகாய் பயிரிட்டார். இதற்கு ஆரம்பத்தில் சில அடிப்படை வேலைகள் தேவைப்பட்டன. நிகிதாவும் அவரது சகோதரரும் இணைந்து, அவர்கள் அமைத்த நர்சரியில் மிளகாய்க் கன்றுகளை வளர்த்து வந்தனர். பின்னர், மரக்கன்றுகளை தங்கள் வயலுக்கு மாற்றினர். மரக்கன்றுகள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வளர்ந்து பெரிய அளவில் மிளகாய் விளைவிக்க ஆரம்பித்தன.
முதல் அறுவடையில் 4 டன் மிளகாய் மகசூல் கிடைத்து, 10 கிலோ ரூ.500-க்கு விற்கப்பட்டது. இதன் விளைவாக லட்சக்கணக்கான ரூபாய் லாபம் கிடைத்தது. அவரது வயலில் 10 முதல் 15 பெண்கள் வேலை செய்து 10-12 நாட்களுக்கு ஒரு முறை மிளகாய் அறுவடை செய்கிறார்கள்.
தனது சகோதரி முறையாக திட்டமிட்டு அர்ப்பணிப்புடன் பணிபுரிவதால், அவருடன் வயல்வெளிகளில் வேலை செய்வதை விரும்புவதாக அபிஷேக் கூறினார். நிகிதா இப்போது தானாஜி மற்றும் அபிஷேக் ஆகியோரின் உதவியுடன் வெவ்வேறு பயிர் சாகுபடியை சோதனைகள் மூலம் ஆராய்ச்சி செய்து வருகிறார்.
ஆன்லைன் மூலம் விவசாயம் பற்றிய தனது அறிவைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார். அவரது வெற்றிக் கதைகளைக் கேட்ட அண்டைப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், அவரது வயலுக்குச் சென்று பயிர்களை பயிரிடும் யுக்திகளைப் பற்றி விவாதிக்கிறார்கள். அவரது கூற்றுப்படி, பல விவசாயிகள் தொழிலை விட்டு வெளியேறி, அவர்களுக்கு மாத சம்பளம் வழங்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயிரிடுவதும், இயற்கை விவசாயம் செய்வதும் அதிக வருமானம் ஈட்ட உதவும் என்கிறார்.
பெலகாவியில் உள்ள பௌராவ் ககட்கர் கல்லூரியில் பி.காம் முடித்த நிகிதா, பட்டயக் கணக்கியல் படிப்பில் சேர்ந்தார், ஆனால் அவரது தந்தையின் மரணம் காரணமாக விலக நேர்ந்தது. தனது தந்தையின் விவசாய தொழிலில் எதிர்பாராதவிதமாக கால் பதிக்க நேரிட்ட நிலையில் தற்போது சாதித்துள்ளார். இதன்பின் தனது படிப்பை தொடரும் எண்ணம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
pic courtesy: TNIE
மேலும் காண்க: