Animal Husbandry

Friday, 25 October 2024 02:19 PM , by: Muthukrishnan Murugan

Census of livestock (pic credit: Julien GAROT)

இந்தியாவில் கால்நடை கணக்கெடுப்பு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுகிறது. இதுவரை 20 கால்நடை கணக்கெடுப்புகள் நடைபெற்றுள்ளன. தற்போது 21-வது கால்நடை கணக்கெடுப்பு 25.10.2024 முதல் நாடு முழுவதும் தொடங்க உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திற்கும் இந்தப்பணி கால்நடை பராமரிப்புதுறை மூலம் மேற்கொள்ள ஏதுவாக திருநெல்வேலி மாவட்டத்தில் 188 கால்நடை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 41 மேற்பார்வையாளர்களுக்கு நேர்முக பயிற்சி மற்றும் களப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-

16 வகையான கால்நடைகள் கணக்கெடுப்பு:

கால்நடை கணக்கெடுப்பு வருவாய் கிராமம் வாரியாகவும், நகர்ப்பகுதியில் வார்டு வாரியாகவும் நடைபெற உள்ளது. இந்த கணக்கெடுப்பின் மூலம் கிராம மற்றும் நகர்ப்பகுதிகளில் வளர்க்கப்பட்டு வரும் 16 வகையான கால்நடைகளின் எண்ணிக்கை, இனம், வயது பாலினம் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும்.

கால்நடைகளின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கெடுப்பதன் மூலம் கால்நடை பராமரிப்பிற்கான எதிர்கால திட்டங்களை தீட்டுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவை சிறப்பாக செய்ய இயலும். கால்நடைகளுக்கு எதிர்காலத்தில் தேவைப்படும் தீவனம், கால்நடை நோய்த்தடுப்பூசி, கால்நடைமருந்துகள் உற்பத்தி போன்றவற்றை தட்டுப்பாடு இல்லாமல் தயாரிக்க கால்நடைகளின் எண்ணிக்கை குறித்து அறிந்திருப்பது முக்கியம்.

வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கால்நடைகளில் இருந்து உணவுப்பொருட்களான பால், பாலாடைக்கட்டி, பன்னீர், தயிர், வெண்ணெய், நெய், ஆட்டிறைச்சி, பிற இறைச்சிகள், முட்டை போன்றவற்றை தட்டுப்பாடின்றி உற்பத்தி செய்ய கால்நடை கணக்கெடுப்பு மிகமிக முக்கியமானதாகும்.

நோய் தடுப்பில் கணக்கெடுப்பின் முக்கியத்துவம்:

கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய விலங்கு வழி தொற்று நோய்களான ரேபிஸ் எனப்படும் வெறிநோய், புரூசெல்லா எனப்படும் கருச்சிதைவு நோய், எலிக்காய்ச்சல் எனப்படும் மஞ்சள் காமாலை போன்ற 100-க்கும் மேற்பட்ட நோய்களை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் கால்நடைகளின் எண்ணிக்கை அவசியமானது.

கடும்மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் கால்நடைகள் பாதிக்காமல் தடுக்கவும், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உரிய நிவாரணம் அளிக்கவும் கால்நடை கணக்கெடுப்பு முக்கியமாகும். கால்நடைகளுக்கான கொட்டகை வசதி, கால்நடை காப்பீடுவசதி, கால்நடை தீவன உற்பத்தி போன்றவற்றை திட்டமிட கால்நடை எண்ணிக்கை இன்றியமையாதது.

கால்நடை கணக்கெடுப்பின் வழிமுறைகள்:

அனைத்து கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் இக்கணக்கெடுப்பு நடைபெறும். கால்நடை உள்ள மற்றும் இல்லாத அனைத்துவீடுகள், நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் பண்ணைகள், வழிபாட்டுதலங்கள் விலங்கு நலமையங்களில் உள்ள பசுமடங்கள் உள்ள விவரங்கள் சேகரிக்கப்படும்.

கால்நடை வைத்துள்ளவரின் பெயர், முகவரி, ஆதார், தொலைபேசி எண், முக்கிய தொழில், அவரிடம் உள்ள நிலத்தின் அளவு, அவரிடம் உள்ள கால்நடை எண்ணிக்கை, இனம், வயது, பாலினம் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும்.

எனவே கால்நடை கணக்கெடுப்பாளர்கள் உங்கள் பகுதியில் விவரங்கள் சேகரிக்க வரும்போது அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கி, உரிய விவரங்களை அளித்து கால்நடை கணக்கெடுப்புப்பணி துல்லியமாக நடைபெறவும், எதிர்காலத்தில் கால்நடைகள் வளம் மற்றும் நலத்துடன் மனிதர்களுக்கான உணவுப்பாதுகாப்பு மற்றும் திட்டமிடவும் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வரும் தேவையான தரவுகளை அளித்திடுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., தான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Read more:

கால்நடைகளை தாக்கும் நோய்களுக்கான மேலாண்மை முறை குறித்து நரிப்பள்ளியில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி!

Rooftop Garden: எந்த வகையான மாடித்தோட்டம் காய்கறி உற்பத்திக்கு ஏற்றது?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)