Animal Husbandry

Monday, 30 December 2024 05:18 PM , by: Muthukrishnan Murugan

Foot and mouth disease

தேசிய கால்நடை நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி பணி வருகிற ஜனவரி 3 ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை சென்னை மற்றும் கன்னியாக்குமரி மாவட்டத்தில் நடைப்பெற உள்ளதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏற்கெனவே கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைப்பெற்று வரும் நிலையில், சென்னை மற்றும் கன்னியாக்குமரி மாவட்டத்தில் அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் நடைப்பெற உள்ளது. இதுத்தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் விவரம் பின்வருமாறு-

கோமாரி நோயினால் பொருளாதார இழப்பு:

கால்நடைகளில் ஏற்படும் தொற்று நோயான கால் மற்றும் வாய் நோய் எனப்படும் கோமாரி நோய் மூலம் கால்நடைகள் இறப்பதால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. மேலும், பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளில் எடை குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

பெரும்பான்மையான கால்நடை உரிமையாளர்கள் சிறுகுறு விவசாயிகளாக உள்ளதால், கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பை தாங்க இயலாத நிலையில் உள்ளனர். எனவே, கால்நடைகளை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது.

மேலும், இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம், நோய் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள் சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்நோய் விரைவாக காற்றின்மூலம் பரவும் தன்மைக்கொண்டது. மேலும், இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர்,பால்,உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.

சென்னை மாவட்டம்- இலக்கு என்ன?

சென்னை மாவட்டத்தில் உள்ள 30,300 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் ஆறாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணி 03.01.2025 முதல் 31.01.2025 நடைபெறவுள்ளது.

எனவே, கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றிற்கு கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசியினை 03.01.2025 முதல் தவறாது போட்டுக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம்: 6 வது சுற்று தடுப்பூசி பணி

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை ஐந்து சுற்று கால்நோய் வாய்நோய் தடுப்பூசி பணி நடந்துள்ளது. எதிர்வரும் 6-வது சுற்றில் சுமார் 58,700 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டிட இலக்கு நிர்ணயித்து கால்நடை பராமரிப்புத்துறை செயல்திட்டம் வகுத்துள்ளது.

இதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கால்டை பராமரிப்புதுறையை சார்ந்த கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஆகியோர்களை கொண்ட 52 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more:

சிறுதானிய சாகுபடிக்கு உழவு மானியம்- விவசாயிகள் யாரை அணுகுவது?

நெல் விவசாயிகளுக்கான சி.நாராயணசாமி நாயுடு விருது: யாரெல்லாம் விண்ணப்பிக்கத் தகுதி?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)