
தெருவில் திரிந்த கர்ப்பிணிப் பசுவின் வயிற்றில் 71 கிலோ குப்பை கண்டறியப்பட்ட சம்பவம் விலங்கு ஆர்வலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
50 லட்சம் பசுக்கள் (50 lakh cows)
இந்தியா முழுவதும் நகரங்களில் சுமார் 50 லட்சம் பசுக்கள் சுற்றித் திரிவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இவற்றைப் பராமரிக்கவோ, உணவு வழங்கவோ யாரும் முன்வராத நிலையில், பெரும்பாலும் தெருக்களில் கொட்டப்படும் கழிவுகளையும் பிளாஸ்டிக்கையும் உண்டு வாழ்கின்றன.
மீட்கப்பட்ட பசு (Recovered cow)
இந்நிலையில் ஹரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத்தில் அண்மையில் சாலை விபத்தில் சிக்கிய தெருவில் திரிந்த ஒரு கர்ப்பிணி பசு பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் (People for animlas) என்ற அறக்கட்டளை சார்பில் மீட்கப்பட்டது.கால்நடை மருத்துவர்கள் அதைச் சோதித்தபோது பசு கர்ப்பமாக இருந்ததும், அது உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததும் தெரிய வந்தது.
அறுவைசிகிச்சை (Surgery)
இதைத்தொடர்ந்து 4 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் பசுவின் வயிற்றில் கன்றுக்குட்டியுடன், பிளாஸ்டிக், நகங்கள், மார்பிள்கள் மற்றும் பிற குப்பைகள் என சுமார் 71 கிலோக் குப்பைகளும் இருப்பது தெரியவந்தது. எனவே பிரசவத்துக்கு முன்பாக இவற்றை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
தாயும், சேயும் மடிந்தன (Mother and child died)
எனினும் தாயின் கருப்பையில் வளரப் போதிய இடம் இல்லாததால் பசுக் கன்று உயிரிழந்தது. 3 நாட்களுக்குப் பிறகு தாய்ப் பசுவும் பரிதாபமாக உயிரிழந்தது. இதற்கு முன்பாக ஹரியானாவில் பசுவின் வயிற்றில் இருந்து அதிகபட்சமாக 50 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்ற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை 71 கிலோ குப்பையைக் கொண்டிருந்த பசுவும் சேயும் உயிரிழந்தன.
பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தப் பல மாநிலங்கள் தடை விதித்துள்ளபோதிலும், போதிய விழிப்புணர்வு இல்லாததால், இவற்றின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவது, இத்தகைய சம்பவங்கள் நிகழக் காரணமாக அமைகின்றன.
மேலும் படிக்க...
சுட்டெரிக்கும் சூரியன்- கால்நடைகளைப் பராமரிப்பதில் கூடுதல் கவனம் தேவை!