மக்காச்சோளத்தின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என அகில இந்திய கோழி வளர்ப்போர் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்காச்சோளத்தைப் பயன்படுத்தி எத்தனால் உற்பத்தி செய்வதால் எதிர்காலத்தில் கோழி மற்றும் கால்நடைத் தொழிலுக்கு மக்காச்சோள தட்டுப்பாடு ஏற்படலாம் என தனது அச்சத்தையும் AIPBA வெளிப்படுத்தியுள்ளது.
அனைத்திந்திய கோழி வளர்ப்பாளர் சங்கம் (AIPBA- All India Poultry Breeder Association) ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்திற்கு, கோழிப்பண்ணை தொழிலின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய, வரியில்லா மக்காச்சோள இறக்குமதியை அனுமதிக்குமாறு கடிதம் எழுதியுள்ளது.
இறக்குமதி வரி 50%:
மக்காச்சோளத்திற்கான தற்போதைய அடிப்படை இறக்குமதி வரி 50% ஆக உள்ளது. எத்தனால் உற்பத்தியில் அதிகரித்து வரும் மக்காச்சோள நுகர்வு குறித்தும் கடிதத்தில் தனது கவலைகளை அகில இந்திய கோழி வளர்ப்பாளர் சங்கம் (AIPBA) வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒரு ஆண்டிற்கான மக்காச்சோள உற்பத்தி 34.60 MMT இருக்கும் நிலையில், கோழி தொழில் மற்றும் நாட்டின் உணவு பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்ய இந்தளவு போதுமானதாக இல்லை எனவும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் அக்கடிதத்தில், இந்திய தினை ஆராய்ச்சி நிறுவனத்தின் (Indian Institute of Millets Research) மதிப்பீட்டின்படி, கோழி மற்றும் கால்நடைத் தொழில்களில்- நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோள உற்பத்தியில் 60% க்கும் அதிகமாக பயன்படுத்துகிறது. இந்த சூழலில், 2025-26 ஆம் ஆண்டுக்குள் மக்காச்சோளத்தில் இருந்து பாதி எத்தனாலை உற்பத்தி செய்யும் அரசின் லட்சியத் திட்டம் கோழிப்பண்ணை மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற துறைகளில் சில தீவிரமான தாக்கங்களை உண்டாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்கால சிக்கல் என்ன?
கடந்த பத்தாண்டுகளில், மக்காச்சோள உற்பத்தி வளர்ச்சி 4.5% ஆகவும், கோழித் தொழில் 8-9% வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த ஏற்றத்தாழ்வு கோழித் தொழிலுக்கு எதிர்பார்க்கப்படும் மக்காச்சோள பற்றாக்குறையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது எனவும், குறிப்பாக எத்தனாலுக்காக மக்காச்சோளத்தை பயன்படுத்த முடிவெடுத்திருக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தால் கடும் சிக்கல்களை உண்டாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கால்நடை தீவனம் மற்றும் பிற தொழில்கள் இரண்டிலும் மக்காச்சோளத்திற்கான அதிகரித்து வரும் தேவையை நிவர்த்தி செய்ய இரண்டு வழிகள் தான் உள்ளது. அதில் ஒன்று, மக்காச்சோளத்தை இறக்குமதி செய்வது. மற்றொரு வழி- உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது. இருப்பினும், குறுகிய காலத்திற்குள் உள்நாட்டு உற்பத்தியினை அதிகரிப்பது என்பது சாத்தியமற்றதாக கருதப்படுகிறது.
எனவே, பிற நாடுகளில் இருந்து மக்காச்சோளத்தை இறக்குமதி செய்வது மட்டுமே உடனடித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான சாத்தியமான தீர்வாகத் தெரிகிறது ”என்று AIPBA சங்கம் தெரிவித்துள்ளது.
தலைவலி தரும் விலையேற்றம்:
மக்காச்சோளத்திற்கான விலையும் கொஞ்ச காலமாக அதிகரித்து வரும் நிலையில், விலையேற்றம் பிரச்சினையும் இந்திய கோழி விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்தியா முழுவதும் மக்காச்சோளத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 22-23 ஆக இருக்கும் நிலையில், கோழிப்பண்ணையாளர்கள் பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கின்றனர். பிப்ரவரி 2024-க்குள் இந்த விலையேற்றம் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read also: தோட்டக்கலை மிஷன் திட்டம்: டிராகன் பழ சாகுபடிக்கு 40% மானியம்!
உலகில் மக்காச்சோள உற்பத்தியில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது மற்றும் இந்தியாவில் அதன் உற்பத்தி கோதுமை மற்றும் அரிசிக்கு அடுத்தபடியாக உள்ளது. எனவே, நிலைமை சீராகும் வரை, மக்காச்சோளத்தின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும் தனது கடிதத்தில் அடிக்கோடிட்டு காட்டியுள்ளது AIPBA.
Read more:
ஒருங்கிணைந்த பண்ணை முறையில் லாபம் காணும் அரியலூர் அசோக்குமார்
புகையிலை விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்- மத்திய அரசு பரிசீலனை