உத்தரப் பிரதேசத்தில் பசுக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை(Ambulance Service) தொடங்கப்படவுள்ளது. மாநிலக் கால்நடை, மீன்வளத்துறை, பால்வளத்துறை அமைச்சர் லக்ஷ்மி நாராயண் இதனைத் தெரிவித்தார்.
ஆம்புலன்ஸ் சேவை
நேற்று அவர் அளித்த பேட்டியில், "மோசமான நோய்களால் பாதிக்கப்பட்ட பசுக்களின் உயிரைக் காப்பாற்றும் வகையில் உத்தரப் பிரதேசத்தில் பசுக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படவிருக்கிறது. இதற்காக 515 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. இது ஒரு புதுமையான திட்டம்.
கால் சென்டர்
இந்த சேவை 112 அவசரகால சேவையைப் போல் பசுக்களுக்குப் பயன் தரும். ஒவ்வொரு ஆம்புலன்ஸிலும் ஒரு கால்நடை மருத்துவர், இரண்டு உதவியாளர்கள் இருப்பார்கள். அழைப்பு வந்த அடுத்த 15 முதல் 20 நிமிடங்களில் அவர்கள் தேவைப்படும் இடத்தில் இருப்பார்கள். இந்தத் திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படுகிறது. இதற்காக லக்னோவில் ஒரு கால் சென்டர் (Call Center) தொடங்கப்படுகிறது என்று அமைச்சர் லக்ஷ்மி நாராயண் தெரிவித்தார்.
அதேபோல் மாநிலத்தின் பசுக்களைப் பெருக்கும் திட்டமானது, இலவச உயர்தர விந்தணு திட்டம் மற்றும் எம்ப்ரியோ ட்ரான்ஸ்ப்ளான்ட் தொழில்நுட்பம் மூலம் மேன்மையடையும். எம்ப்ரியோ தொழில்நுட்பம் மூலம் மலட்டு மாடுகளைக் கூட, பால் கொடுக்கும் மாடுகளாக மாற்ற முடியும் என்றும் அமைச்சர் லக்ஷ்மி நாராயண் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் படிக்க
கால்நடைகளில் கோமாரி நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை!