இந்தியாவில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கின்றன. உபத் தொழிலாக இருந்துவந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு நிலையான வருமானத்தையும், சத்து நிறைந்த உணவுப் பொருட்களையும் கொடுப்பதால் சமீபகாலமாக கால்நடை வளர்ப்பு பிரதான தொழில் ஆகி வருகிறது.
பல்கலைக் கழகங்களின் பங்கு
இந்தியாவில் பசுந்தீவன உற்பத்தி மற்றும் இதர தீவனங்களின் இருப்பு ஒட்டுமொத்த தேவையில் பாதிக்கும் குறைவாகவே கிடைக்கிறது. எனவே, கால்நடைகளால் அவற்றின் முழுமையான உற்பத்தித் திறனை எட்ட முடியவில்லை. கால்நடை வளர்ப்பில் முக்கால்வாசி செலவு அதாவது 70 சதவீத செலவு தீவன உற்பத்திக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. எனவே, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தீவன மேலாண்மையில் புதிய தொழில்நுட்பங்களையும், புதிய வகை தீவனப் பயிர்களையும் விவசாயிகளுக்காக கண்டுபிடித்து தீவனச் செலவை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகின்றனர்.
தீவன வகைகள்
மக்காச் சோளம், தீவனக் கம்பு போன்ற தீவன வகை பயிர்கள், கினியாப் புல், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கொழுக்கட்டை புல் போன்ற புல் வகை பயிர்கள், அகத்தி, கிலைரீசீடியா, கொடுக்காப்புளி, வாகை போன்ற மர வகை தீவனப் பயிர்கள் மற்றும் தீவன தட்டை பயறு, முயல் மசால், வேலி மசால் போன்ற பயறு வகை தீவனப் பயிர்கள் என நான்கு வகையான தீவனப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
பசுந்தீவன உற்பத்தி
எல்லா வகை மண் மற்றும் சூழல்களிலும் வரப்பு ஓரங்களிலும் வயலின் எல்லைகளிலும் மர வகை தீவனப் பயிர்களை குறிப்பிட்ட இடைவெளியில் நட்டு வளர்க்கலாம். மேலும், மண், இடம், நீர் இருப்பு மற்றும் கால சூழ்நிலைக்கு ஏற்ப பயறுவகை, தீவன வகை, புல் வகை தீவனப் பயிர்களை கலப்பு முறையில் ஊடுபயிர் செய்து சரியான அளவில் சரிவிகித தீவன உற்பத்தியை எட்டலாம்.
அடர் தீவனம்
அடர் தீவனம் தயாரிக்க வணிகரீதியில் விற்கப்படும் தீவனங்களை நாடாமல் விலை குறைவாக அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் விவசாய உப பொருட்களை கொண்டு நாமே தீவனம் தயாரிக்கலாம். சோளம், கம்பு, கேழ்வரகு, அரிசி தவிடு, கோதுமை தவிடு, உளுந்து பொட்டு, அரிசி குருணை போன்றவற்றை தீவனத்தை உற்பத்திக்கு பயன்படுத்தலாம்.
வறட்சி கால தீவன மேலாண்மை
மிக அதிக வறட்சி நிலவும் காலங்களில் விதை நீக்கிய சூரிய காந்தி பூ, கரும்பு தோகை, கரும்பு சக்கை, மதுபான ஆலை கழிவுகள், போன்றவற்றையும் தீவனத்தோடு கலந்து பயன்படுத்தலாம். வேளாண் கழிவுப் பொருட்களான கிழங்கு திப்பி, ஓடு நீக்கப்பட்ட புளியங்கொட்டை, பருத்திக்கொட்டை போன்றவையும் தீவனத்தில் கலந்து பயன்படுத்தலாம். சோளத்தட்டை, கேழ்வரகு தட்டை, வைக்கோல் போன்ற கூல தட்டைகளை பயன்படுத்தும்பொழுது 4% யூரியா கரைசல் கொண்டு ஊட்டமேற்றி பயன்படுத்துவதன் மூலம் தீவனத்தில் புரதச்சத்து மேம்படுகிறது.
தீவன மேலாண்மை
காலை மற்றும் மாலை நேரங்களில் தீவனம் அளிப்பதால் கால்நடைகள் நல்ல முறையில் தீவனத்தை உட்கொள்கின்றன. மாடுகளுக்கு தீவனம் கொடுக்கும் போது அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தீவனம் இரைந்து வீணாவது தடுக்கப்படுகிறது. உப்பு கரைசல் அல்லது வெல்லக் கரைசல் தெளித்து கொடுப்பதன் மூலம் கால்நடைகள் தீவனத்தை விரும்பி உண்ணும். மழை இன்றி வாடும் சோளப் பயிர்களையோ அல்லது இளம் சோளப் பயிர்கள்களையோ கால்நடைகளுக்கு அளிப்பதால் கால்நடைகள் உயிரிழக்கவும் நேரிடலாம். தீவனங்களில் உள்ள விஷத்தன்மை குறித்து விவசாயிகள் அறிந்திருக்க வேண்டும். வெயில் மற்றும் பனி அதிகம் உள்ள நேரத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. கால்நடைகளுக்கு தேவையான குடிநீரை வழங்க வேண்டும். மொத்த தீவனத்தையும் ஒரே நேரத்தில் வழங்காமல் சிறு சிறு பகுதிகளாக பிரித்து நாள் ஒன்றுக்கு மூன்று முதல் நான்கு முறை வழங்கலாம். மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி தீவன செலவை குறைத்து விவசாயிகள் நல்ல லாபம் அடையலாம்.
சி. அலிமுதீன்
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
சென்னை-07
Dr. ச. பாவா பக்ருதீன்
கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி,
குரு அங்கத்தேவ் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
லூதியானா, பஞ்சாப்-141001