கேரளாவில், தோல் அம்மை நோயினால் கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ஜே.சிஞ்சுராணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கேரளாவில் மாடுகள் லம்பீ ஸ்கின் டிசீஸ் எனப்படும் தோல் அம்மை நோயினால் அதிகளவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தன. இதனால், பொருளாதார வகையில் பெரிதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அம்மாநில அரசு முன்வந்துள்ளது. அதனடிப்படையில், உயிரிழந்த மாடுகளுக்கு 30,000 ரூபாய், இளம் பசுக்களுக்கு 16,000 ரூபாய், உயிரிழந்த ஆறு மாதங்களுக்கு குறைவான கன்றுகளுக்கு 5,000 ரூபாய் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தோல் அம்மை நோய் :
லம்பீ ஸ்கின் டிசீஸ் எனப்படும் தோல் அம்மை நோய் கால்நடைகளை தாக்கும், அதிலும் குறிப்பாக மாடுகளை தான் இந்நோய் அதிகம் தாக்குகிறது. முதலில் தொற்றால் மாடுகள் பாதிக்கப்பட்டால் காய்ச்சல் ஏற்படும். அதன்பின்னர் தொற்றால் பாதிக்கப்பட்ட மாடுகளின் உடலில் சிறிய கொப்பளம் ஏற்பட்டு பின்னர் பெரிய அளவில் புண்ணாகிறது. இப்புண்ணில் ஈ, கொசு, உண்ணி மொய்த்து வேறு மாடுகளுக்கு விரைவில் எளிதாக பரவுகிறது. இதனை கட்டுப்படுத்த தற்போது வரை தடுப்பூசி கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.
நிவாரணம் வழங்க சிறப்பு ஏற்பாடு :
விவசாயிகள் உடனடியாக நிவாரணத்தை பெறும் வகையில், ஒற்றை சாளர முறையில் இயங்க தொடங்கியுள்ளது. அதனடிப்படையில், விரைவாக உரிமம் வழங்குதல், நோய் கண்டறிய தாலுகா அளவிலான ஆய்வகங்களை மேம்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப சிக்கல் தொடர்பான தீர்வுகளுக்காக கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுதல் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தியுள்ளது.
இழப்பீடு வழங்குவதுடன், பண்ணையைத் தொடங்குதல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றை தொழில் முனைவோர்களுக்கு உகந்ததாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. பண்ணை அமைப்பது உட்பட இதர உரிமங்களுக்கு பால்வள மேம்பாடு மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல துறைகளிடமிருந்து விரைவான அனுமதியை பெற்றுத்தர இந்த ஒற்றை சாளர முறை உதவியாக இருக்கும்.
கால்நடை பராமரிப்புத் துறையும் தாலுகா அளவிலான ஆய்வகங்களை வலுப்படுத்துவதன் மூலம் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களைக் கண்டறிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் நோய்களைக் கண்டறிந்து விரைவாக சிகிச்சை அளிக்க முடியும், இதனால் நோய் பரவலை குறைத்து விலங்குகள் இறப்பதைக் குறைக்கலாம்.
மேற்கண்ட செயல்பாடுகளின் போது ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக கால்நடை துறையானது, கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுகிறது. பல்கலைக்கழக உதவியுடன், கால்நடை வளர்ப்புத் துறையில் சமீபத்திய மற்றும் மிகவும் மேம்பட்ட தீர்வுகளைக் கொண்டுவருவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க