ஆடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோய் ஒழிப்பு தடுப்பூசி கால்நடை மருந்தகங்களில் கடந்த (27.09.2023)-லிருந்து 30 நாட்கள் இலவசமாக செலுத்தப்பட்டு வரும் நிலையில் அதனை கால்நடை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார்.
ஆட்டுக்கொல்லி நோய் ஆடு வளர்ப்போருக்கு அதிக பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் ஒரு கொடிய நோயாகும். இந்நோய் மோர்பில்லி வைரஸ் (Morbilli Virus) என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. இந்நோய் காற்றில் பரவும் வாய்ப்புள்ளதால் நோய்த்தொற்று கண்டறிந்ததும் அதனை கட்டுப்படுத்துவது அவசியம்.
ஆட்டுக்கொல்லி நோய்க்கான அறிகுறிகள்:
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு அதிக காய்ச்சல், சோர்வு, தீனி உட்கொள்ளாத தன்மை, மூக்கிலிருந்து சளி வடிந்து உறைந்து இருத்தல், கண்களில் பூளை தள்ளுதல், வாயின் உட்புறங்கள் ஈறுகள் மற்றும் நாக்கில் புண் ஏற்பட்டு அதிக உமிழ்நீர் சுரத்தல், கழிச்சல், இருமல் ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்.
நோய்த்தொற்று பரவும் முறை:
நோயுள்ள இடங்களில் இருந்து ஆடுகள் வாங்கி புதியதாக மந்தையில் சேர்ந்தால் பிற ஆடுகளுக்கு இந்நோய் எளிதில் தொற்றிக் கொள்ளும். நோய்கண்ட ஆடுகள் இருமும் போது வெளிப்படும் சளி மற்றும் உமிழ்நீர் ஆகியன காற்றில் கலந்து மற்ற ஆடுகளில் படும் பொழுது இந்நோய் தொற்றிக் கொள்ளும். நோயுற்ற ஆடுகளில் கண் மற்றும் மூக்கிலிருந்து வடியும் நீர், சாணம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றால் இந்நோய் எளிதில் பரவும்.
நோய்ப்பரவலை தடுக்கும் வழிமுறை:
இந்நோய் பரவாமல் தடுப்பதற்கு பாதிக்கப்பட்ட ஆடுகளை உடன் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். ஆட்டுக்கொட்டில்களையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆட்டுக்கொல்லி நோய் வராமல் தடுப்பதற்கு ஆண்டுக்கு ஒருமுறை குறிப்பாக 4 மாத வயத்திற்கு மேற்பட்ட ஆட்டுக்குட்டிகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி கண்டிப்பாக செலுத்த வேண்டும்.
ஆட்டுக்கொல்லி நோய் பாதிப்பினை ஒழிக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் திண்டுக்கல் உட்பட 12 மாவட்டங்களில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் ஆட்டுக்கொல்லி நோய் ஒழிப்பு தடுப்பூசி பணியானது 27.09.2023 முதல் துவங்கி 30 நாட்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது.
ஆகவே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆடு வளர்க்கும் விவசாயிகள் 4 மாதத்திற்கு மேல் வயதுடைய ஆட்டுக்குட்டிகளுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்கள் மூலமாக நடைபெறும் முகாம்களில் ஆட்டுக்கொல்லி நோய்த் தடுப்பூசியினை இலவசமாக செலுத்திக்கொண்டு, தங்களது ஆடுகளை நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., கால்நடை வளர்ப்பவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் காண்க:
2000 ரூபாய் நோட்டு: கடைசி நேரத்தில் மீண்டும் ஒரு சான்ஸ் தந்த RBI
தாறுமாறாக உயர்த்தப்பட்ட சிலிண்டரின் விலை- இன்று முதல் புதிய விலை அமல்!