பன்றிகள் சிறியதாக இருக்கும் போதே விதைநீக்கம் செய்திடக்கூடாது என சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில், பன்றி வளர்ப்பில் சிறப்பாக ஈடுபட்டு வரும் யுவராஜ் தெரிவித்துள்ளார்.
தற்போது 11 கறிப்பன்றி, 12 தாய் பன்றி, 3 ஆண் பன்றி, 38 குட்டிகள் என தனது பண்ணையில் வளர்த்து வருகிறார் யுவராஜ். ”சினைக்காலத்தில் தாய் பன்றிக்கு என்று தனி பாரமரிப்பு எல்லாம் இல்ல. அதை அப்படியே விட்டுடணும் தனியா. அதுக்கூட வேற ஏதாவது பன்றி இருந்தால் பெரும்பாலும் பிரச்சினையில்ல. ஆனா, அதே நேரத்தில் ஒன்றோடு ஒன்று மோதினால் சினை கலைந்து போகவும் வாய்ப்பிருக்கு. நம்ம பண்ணையிலேயே இந்த மாதிரி சம்பவம் நடந்து இருக்கு” என நம்மிடம் குறிப்பிட்ட யுவராஜ், கறிப்பன்றிக்கு என்ன மாதிரியான வளர்ப்பு முறைகளை பின்பற்றுகிறோம் என்பதையும் குறிப்பிட்டார்.
பன்றிகளின் எடை அதிகரிப்புக்கு விதை நீக்கம்:
”பன்றிகள் சிறியதாக இருக்கும் போதே விதைநீக்கம் பண்ணிடக்கூடாது. அப்படி செய்தோம் என்றால், அவற்றின் வளர்ச்சி பெரிதாக இருக்காது. வளர்ச்சியின்மையால், எடை அதிகரிப்பின் போது பந்து போல் உடலமைப்பு செல்லும். 50 கிலோ இருக்கும் போது விதை நீக்கம் செய்தால் மூன்று மாதத்தில் நல்ல வளர்ச்சியுடன் 150 கிலோ வரை எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது."
"கிலோ தற்போதைய நிலவரப்படி 400 முதல் 450 ரூபாய் வரைக்கூட போகும். நம்ம சிவகங்கை தவிர்த்து, திருப்பூர், திண்டுக்கல் என அண்டை மாவட்டத்திற்கும், கேரளாவிற்கும் பன்றியினை ஏற்றுமதி செய்கிறோம்” என்றார்.
பன்றி வளர்ப்பில் வருமானத்திற்கான வாய்ப்பு எவ்வாறு உள்ளது என கேட்டதற்கு “வருமானத்துக்கு ஆசைப்பட்டு குறுகிய கால இடைவெளியில் பலர் பன்றியை வலுக்கட்டாயமாக இனச்சேர்க்கையில் ஈடுபடுத்துகின்றனர். அவ்வாறு செய்வதால் ஒரு பயனும் கிடையாது. இதனால், ஊனமுற்ற அல்லது வளர்ச்சியற்ற குட்டிகள் பிறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்."
"பன்றி வளர்ப்பில் மாத வருமானம் என பார்க்க முடியாது. அதிகப்பட்சம் 4 வருடம் வரை பன்றியினை நன்றாக வளர்க்கலாம். சிம்பிளா சொல்லணும்னா பன்றி உயிரோடு இருக்கிற வரை அதற்கேற்ப நமக்கு காசுதான்” என குறிப்பிட்டார்.
தற்போது செய்து கொண்டிருக்கும் பன்றி வளர்ப்பு தொழிலை வருங்காலத்தில் பெரிய அளவில் மேற்கொள்ள வேண்டும், குட்டிகளின் எண்ணிகையை மூன்று, நான்கு மடங்கு அதிகரிக்க வேண்டும் என தனது ஆசைகளையும் நம்மிடம் யுவராஜ் பகிர்ந்துக் கொண்டார். பொதுவாக கால்நடை வளர்ப்பு என்றால் கோழி,ஆடு, மாடு என செல்பவர்கள் மத்தியில் பன்றி வளர்ப்பிலும் உழைப்புகேற்ற லாபத்தை பார்க்கலாம் என நிரூபித்து உள்ளார் யுவராஜ். (யுவராஜ்- தொடர்பு எண்: 88389 12769)
Read more:
தீவனச் செலவில்லாமல் பன்றி வளர்ப்பு- அசத்தும் சிங்கம்புணரி யுவராஜ்!