பால் பண்ணை என்று வரும்போது, கறவை மாடுகளின் ஒத்துழைப்பு இல்லாமல் வருமானம் ஈட்ட முடியாது. அவ்வாறு வருமானம் ஈட்ட விரும்புபவர்கள் அவற்றை நோய்களில் இருந்து நன்குப் பாதுகாத்துப் பராமரிப்பது முக்கியம்.
தமிழகத்தில் ஜெர்ஸி மற்றும் ஹோல்ஸ்டின் பிரிசியன் கலப்பின பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. இத்தகைய மாடுகள் அதிக பால் கொடுக்கும். நாட்டு பசுக்களைக் காட்டிலும் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பதால், தொற்று நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
அப்படித் தாக்கக்கூடிய நோய்களில் மிகவும் முக்கியமானது மடி நோயாகும். இந்த நோயால் ஆண்டுக்கு சுமார் ரூ. 6,010 கோடி விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என அறியப்பட்டுள்ளது.
மடிநோய்க்கான காரணங்கள்:
நுண்ணுயிரி, நச்சுயிரி மற்றும் பூஞ்சைக் கிருமிகள் பால் உற்பத்தி செய்யும் சுரப்பு திசுக்களைப் பாதித்து, மடி நோயை உண்டாக்குகின்றன.
நோய்க் கிருமிகள் பசுவின் மடியில் பால் சுரப்பிகளைத் தாக்குவதால், பசு வளர்ப்பவர்களுக்கு பெரும் பொருள் சேதத்தையும் ஏற்படுத்துகின்றன.
தரையின் சுத்தம், மடியின் சுத்தம், ரத்தம் மூலமாகவோ அல்லது காம்பின் துவாரத்தின் வழியாகவோ மடியை அடைந்து மடி நோய் ஏற்படுகிறது.
தொற்றுப் பரவல்
மேலும், மடியில் ஏற்படும் காயத்தின் மூலம் இந்த நோய் பரவுகிறது. கறப்பவரின் சுத்தமற்ற கை மற்றும் மடிநோய் தாக்கிய மாட்டின் பாலை கறந்த பிறகு, மற்றொரு மாட்டின் பாலைக் கறக்கும்போது, இந்த நோய் பரவுகிறது.
தவறான முறையில் பால் கறந்தாலும், அதாவது கட்டை விரலை மடக்கி பால் கறந்தாலும் மடி நோய் தாக்கும்.
சிகிச்சை முறைகள்:
ஆரம்ப நிலையில் கண்டறிந்து மருத்துவம் செய்யாவிட்டால், மடியின் பால் சுரப்பி நிரந்தரமாகக் கெட்டு, பால் சுரக்கும் தன்மையைப் பசு இழக்கும் ஆபத்து உள்ளது. பின்னர், பாதிக்கப்பட்ட மடியைக் குணப்படுத்துவது இயலாத காரியமாகி விடும். எனவே, நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் பாதிக்கப்பட்ட மாட்டைப் பிரித்து, கால்நடை மருத்துவரின் மூலம் நுண்ணுயிர்க் கொல்லி மருந்தினைப் பயன்படுத்தி குணப்படுத்தலாம்.
தடுப்பு முறைகள்:
- தொழுவத்தை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- அயொடொபார், சோடியம் ஹைப்போ குளோரைட், குளோர்ஹெக்சிடின் போன்றக் கிருமி நாசினி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
- பால் கறப்பதற்கு முன், கறப்பவர்கள் தங்களது கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினி போட்டுக் கழுவிய பின்னரேக் கறக்க வேண்டும்.
- பால் கறக்கும் இயந்திரத்தைச் சுத்தம் செய்து வைத்தல் அவசியம். கறவை நேரத்தை ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும்.
- மடியில் பால் தேங்கக்கூடாது. பாலை முற்றிலும் கறந்துவிட வேண்டும். சினை மாட்டின் மடியை அன்றாடம் கண்காணிக்க வேண்டும்.
- கறவைக் காலம் முடிந்தவுடன் கால்நடை மருத்துவர் உதவியுடன் காம்புக்குள் நுண்ணுயிர்க்கொல்லி மருந்தைச் செலுத்த வேண்டும்.
Read More