மடிவீக்க நோய் கறவை மாடுகளில் ஏற்படும் மடி அழற்சியை குறிக்கும். பல்வேறுபட்ட காரணிகளால் ஏற்படும் இந்நோய் மாடுகளில் பால் உற்பத்தியையும் அதன் தரத்தையும் வெகுவாக குறைத்து விடுவதால் பண்ணையாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. கலப்பின மாடுகள் மற்றும் வெளிநாட்டின மாடுகளில் இந்நோய் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. நாட்டின மாடுகளிலும் பால் உற்பத்தி குறைவாக உள்ள மாடுகளிலும் இந்நோய் பாதிப்பு அரிதாகவே ஏற்படுகிறது.
நோய்க் காரணிகள்
- பல்வேறு வகையான பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் மைக்கோபிளாஸ்மா போன்ற நுண்ணுயிரிகள் இந்நோய்க்கான முதன்மையான காரணிகளாகும்.
- முழுவதுமாக பால் கறக்கமால் விடுதல், சுகாதாரமற்ற சுற்றுப்புறம், நோய்க்கிருமிகளின் தொற்று, நுண்ணுயிரிகள் பெருக்கமடைய ஏற்ற சாதகமான உடல் நிலை, நோய் பாதித்த பசுக்களோடு தொடர்பு, கிருமித் தொற்று உடைய உபகரணங்கள் போன்றவற்றின் மூலமாக இந்நோய் பரவுகிறது.
- நோயின் அறிகுறிகள்
- திடீரென பால் உற்பத்தி குறைந்தும் பாலின் நிறம் இயல்பில் இருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறியிருப்பதும் முக்கியமான அறிகுறிகளாகும் .
- பாதிப்பை பொறுத்து சில சமயங்களில் இரத்தம் கலந்த பால் மடியிலிருந்து கிடைக்கும்.
- மடியானது வீக்கமடைந்து காணப்படுவதுடன் சூடாகவும் இருக்கும். தொடும் போது கட்டியாக இருக்கும்.
- மிகுந்த வலியின் காரணமாக மாடானது பால் கறக்க அனுமதிக்காது.
சிகிச்சை முறைகள்
- நோயினால் பாதிக்கப்பட்ட மாட்டின் மடியிலிருந்து பாலினை முழுவதுமாக கறந்து முறையாக கிருமி நீக்கம் செய்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கொட்டி விட வேண்டும்.
- ஐஸ் கட்டி கொண்டு ஒத்தடம் கொடுப்பதால் வீக்கம் குறையும்.
- பால் கறப்பதற்கு முன்பும், பால் கறந்த பின்பும் மடியினை சுத்தமாக கழுவ வேண்டும். பால் கறந்த பின்பு மடிக் காம்பினை கிருமி நாசினிக் கரைசலில் முக்கி எடுக்க வேண்டும்.
- கொட்டகையை சுகாதாராமான முறையில் பராமரிக்க வேண்டும் “நோய் பாதித்த மாடுகளை மற்ற மாடுகளில் இருந்து தனிமைப்படுத்துவது சிறந்தது.
- மாடுகளை மண் தரையில் பராமரிப்பது நல்லது. கான்கிரீட் தரைகளை விட மண் தரையில் நுண்கிருமிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
- தகுதியான கால்நடை மருத்துவரை அணுகி உரிய நுண்ணுயிர் எதிர் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.
தடுப்பு முறைகள்
- நோய் பாதித்த மாடுகளை பிற மாடு மாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்துதல்.
- பாதிப்பு உள்ள காம்பில் கன்றுகளுக்கு பால் ஊட்டக் கூடாது.
- ஆரோக்கியமான மாடுகளிடம் பால் கறந்து பின்னர் நோய் பாதித்த மாடுகளில் பால் கறக்க வேண்டும்
- எளிதில் பரவக் கூடிய நோய் என்பதால் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
- தூய்மையான முறையில் கொட்டகைகளை பராமரிப்பதும் விலங்குகளை சுகாதாரமான முறையில் பேணுதலும் நல்ல பயனைக் கொடுக்கும்.
- கொட்டகை, சுற்றுப்புறம் போன்றவற்றை தக்க கிருமிநாசினிக் கொண்டு நாளொன்றுக்கு இரண்டு முறை சுத்தப்படுத்த வேண்டும்.
S. Alimudeen
Madras Veterinary College,
TANUVAS,
Chennai.