பசுவிலிருந்து கறக்காத, ஆனால் அதே மணம், சுவை, சத்துள்ள பாலை தயாரிக்க முடியுமா? விலங்குகளிலிருந்து கிடைக்கும் பாலை தவிர்க்க விரும்புவோருக்கு இந்த செய்தி இனிக்கும். அமெரிக்காவிலுள்ள 'பெட்டர்லேண்ட்' பசுவில்லாப் பாலை தயாரிப்பதில் வெற்றி கண்டுள்ளனர். சில ஆண்டுகள் பரிசோதனைக்கு பின், தற்போது, பெட்டர்லேண்ட் பால் பாக்கெட்டுகள் விற்பனைக்கு தயாராகிவிட்டன.
பசுவில்லா பால் (Cow-Free Milk)
பெட்டர்லேண்டின் ஆராய்ச்சியாளர்கள், 'வே புரோட்டீன்' எனப்படும், தயிரின் மீது பிரிந்து வரும் தண்ணீர் போன்ற திரவத்தில் உள்ள புரதங்களை கண்டறிந்தனர். பின்னர், அதே போன்ற புரதங்களை உற்பத்தி செய்யும் பூஞ்சைகளை கண்டுபிடித்து, பொறுப்பை அவற்றிடம் ஒப்படைத்து விட்டனர். அவை, பசுவின் பாலில் உள்ள புரதத்தை அதேபோல உற்பத்தி செய்து தள்ளின. அதைவைத்து, விலங்குப் புரதங்களை உணவில் சேர்க்க விரும்பாத 'வீகன்' பிரியர்கள் போன்றோருக்கு என்று தனியாக பெட்டர்லேண்ட் பாலை அவர்கள் விற்பனைக்கு கொண்டு வந்து விட்டனர்.
பெட்டர்லேண்ட் பால் (Betterland Milk)
அதுமட்டுமல்ல, நுண்ணுயிரிகள் தந்த பால் புரதங்களை வைத்து ஐஸ்கிரீமையும் தயாரித்து, ருசிபார்த்து பாராட்டுகளை பெற்றுள்ளனர். இந்த வகை பால் 8 கிராம் புரதமும், அசல் பாலைவிட 67 சதவீதம் குறைவான சர்க்கரைகளும் கொண்டவை. எனவே வீகன் மற்றும் பத்தியக்காரர்கள் இதை விரும்பி அருந்தலாம்.
ஆனால், அசல் பால் புரதத்தின் அதே அமைப்புள்ள புரதம் தான் பெட்டர்லேண்ட் பாலிலும் உள்ளபடியால், பால் அலர்ஜி கொண்டோருக்கு இதுவும் பிடிக்காது என்று பெட்டர்லேண்ட் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க
ஒடிசாவில் முதல் முறையாக தாய்ப்பால் வங்கி துவக்கம்!
வீசும் காற்றைக் கட்டுப்படுத்தி கூடுதல் இலாபம் தரும் 'ஜிங்குனியானா' சவுக்கு மரம்!