விவசாயிகளுக்கு பால் உற்பத்தியில் லாபகரமான விலை கிடைக்க 'ஆவின்' நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. சில ஆண்டுகள் வரை 'ஆவின்' நிறுவனம் மட்டுமே கோலோச்சி வந்தது. தற்போது தனியார் நிறுவனங்கள் ஆவினுக்கு போட்டியாக வந்து விட்டன. தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள் ஆட்டோவை அனுப்பி தோட்டம் தோட்டமாக பாலை கொள்முதல் செய்ய துவங்கி விட்டனர். இதனால், பலரும் தனியாருக்கு மாறுகின்றனர். ஆவினும், தனியாரும் போட்டிபோட்டு பாலை கொள்முதல் செய்த போதிலும் பெரிய அளவில் பால் விலை உயரவில்லை.
கறவை மாடு வளர்ப்பு (Dairy Cows)
தீவனம் மற்றும் கூலி உயர்வு அதிகரித்துள்ள நிலையில் இளைய தலைமுறை விவசாயிகள் கறவை மாடு வளர்ப்பதை தவிர்க்க துவங்கி விட்டனர். முதியவர்கள் மட்டுமே மாடுகளை மேய்த்து வருகின்றனர். மூத்த விவசாயிகளுக்கு வயது முதிர்வு ஏற்பட்டால் மாடு மேய்க்க ஆட்கள் குறைந்து விடுவர். இன்னும் பத்தாண்டுகளில் பால் உற்பத்தி வெகுவாக குறைந்துவிடும் அல்லது பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
விவசாயிகள் சிலரின் கருத்துக்கள் (Comments from Farmers)
வீரக்குமார், ராமம்பாளையம்: இதற்கு முன் ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கினேன். அதன்பின், தனியாருக்கு மாறிவிட்டேன். பருத்தி கொட்டை, 2,400 ரூபாய்க்கு விற்கிறது. மாடு மேய்ப்பது உபயோகமானதாக இல்லை. இரண்டு மாடு உள்ளது. ஒன்றை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளேன். வீட்டுத் தேவை போக மீதமுள்ளவற்றை விற்பனை செய்கிறேன். ஒரு லிட்டருக்கு, 28 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது.
கணேஷ், செட்டிபாளையம்: ஆவினுக்கு பால் வழங்குகிறேன். லிட்டருக்கு, 30 ரூபாய் கிடைக்கிறது. கட்டுப்படி ஆகவில்லை. நான்கு கறவை மாடுகள் வைத்திருந்தேன். இரண்டை விற்று விட்டேன். ஒன்றை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளேன். ஒரு மாடே போதும் என்ற மனநிலைக்கு வந்து விட்டேன். வீட்டுத் தேவை போக மீதம் இருக்கும் பாலை விற்பனை செய்கிறேன்.
சுப்பிரமணி, பருவாக்கரைப்பாளையம்: ஆவினில் லிட்டருக்கு, 27 முதல், 30 ரூபாய் வரை தருகின்றனர். ஆறு கறவை மாடு வைத்துள்ளேன். மாடுகள், 20 ஏக்கரில் மேய்கிறது. இதனால், தீவன செலவு குறைகிறது.குறைந்த பரப்பளவில் மாடு மேய்ப்பவர்களுக்கு கட்டுப்படி ஆகாது. கிடைக்கும் வருமானம் குடும்ப செலவுக்கு போதுமானதாக உள்ளது. கறவை ஆண்டுதோறும் ஒரே சீராக இருக்காது. வறட்சி மற்றும் சினை பருவங்களில் பால் உற்பத்தி குறையும். சராசரியாக மாதம், பத்து முதல், 15 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும்.
தினமும், 15 மணி நேரம் வேலை செய்கிறேன். இது கட்டுப்படியானதாக இல்லை. வேறு வேலைக்கு செல்ல முடியாது என்பதால் கறவை மாடு வளர்த்து வருகிறேன். எனது மகன் மாதம், 50 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். பால் கறவையில் அவ்வளவு வருமானம் பார்க்க முடியாது. எனது தலைமுறைக்குப் பின் அடுத்த தலைமுறையில் மாடு மேய்ப்பது சந்தேகம் தான். பால் விலையை உயர்த்தித் தரவேண்டும்.
பழனிசாமி, வேலம்பட்டி: நான்கு மாடு வைத்துள்ளேன். ஆவின் நிறுவனத்தில், ஒரு லிட்டர் 30 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். இந்த விலை கட்டுப்படியாகாது. சொந்த ஆள் வேலை செய்வதால் நஷ்டம் ஏற்படுவதில்லை. கூலி உயர்ந்த அளவு பால் விலை உயரவில்லை. சத்துணவில் மாணவர்களுக்கு பால் கொடுத்தால் தேவை அதிகரித்து விலை உயரும். பருத்திக் கொட்டை விலை கிலோ, 45 ரூபாய் அதிகரித்துள்ளது.
நாள் முழுக்க வேலை செய்து அடுத்தவர்களுக்கு சும்மா கொடுக்கும் நிலையில் தான் பால் விவசாயிகள் உள்ளனர். வீட்டு தேவைக்கு ஒரு மாட்டை வைத்துக் கொண்டு மீதியை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளேன்.
மேலும் படிக்க