விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் வருமானம் தருவது ஆடு வளர்ப்பு ஆகும். ஆகப் படியளக்கும் பகவானாகக் கருதப்படும் ஆடு வளர்ப்பில், சவாலானதாகக் கருதப்படுவது குடற்புழு நீக்கம்தான்.
இயற்கை பொய்க்கும் காலங்களில் கிராமப்புற அடித்தட்டு விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்தில் கால்நடை வளர்ப்பு முக்கிய பங்காற்றுகிறது . அத்தகைய கால்நடை வளர்ப்புத் தொழிலில், ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பைத்தரக் கூடியது குறிப்பாக நடக்கும் ஏ.டி.எம் என்று சொல்லக்கூடியது ஆடு வளர்ப்புத் தொழிலாகும்.
குடற் புழுக்கள் (Worms)
இந்த ஆடு வளர்ப்புத் தொழிலில் அவ்வப்போது ஏற்படும் நோய்களினால் பெரும் பொருளாதார இழப்பு உண்டாகிறது. ஆடுகளுக்கு நோய் உண்டு பண்ணும் முக்கிய காரணிகளுள் ஒட்டுண்ணிகள் அதிலும் குறிப்பாகக் குடற் புழுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பாதிப்புகள் (Vulnerabilities)
குடற்புழுக்களினால் ஆடுகளில் உடல் பலவீனம், தீவனம் எடுக்காமை, வளர்ச்சி குன்றுதல், குறைவான தீவன மாற்று விகிதம், உடல் எடைக் குறைவு ஆகியன ஏற்பட்டு பெரும் வருமான இழப்பு உண்டாகிறது.
குடற்புழு நீக்க மருந்துகள் (Drugs)
எனவே குடற்புழுக்களினால் ஏற்படும் இத்தகைய நேரடி மற்றும் மறை முக இழப்பினைக் கட்டுப்படுத்துவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். குடற்புழுக்களைக் கட்டுப்படுத்துவதில் குடற்புழு நீக்க மருந்துகள் முக்கிய பங்காற்றுகின்றன.
இத்தகைய குடற்புழு நீக்க மருந்துகளை ஆடுகளில் பயன் படுத்தும் உத்திகள் குறித்து ஆட்டுப் பண்ணையாளர்கள் அனைவரும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
குடற்புழு நீக்க உத்திகள் (Deworming techniques)
பொதுவாக குடற்புழுக்களின் தாக்கம் பரவலாகக் காணப்படும் மழை மற்றும் பனிக்காலங்களில் கால்நடை மருத்துவரின் ஆலோசனையின்படி குடற்புழுக்களினால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகும் ஆடுகளுக்குக் குறிப்பாகக் குட்டிகள், பால் கொடுக்கும் ஆடுகள் மற்றும் அதிகம் உற்பத்தி செய்யும் ஆடுகளுக்கு மட்டும் குடற்புழு நீக்க மருந்துகளைக் கொடுத்தல் வேண்டும்.
அதுபோலவே ஆடுகளில் குடற்புழுக்களினால் குறிப்பாக ஹெமாங்கஸ் வகை புழுக்களினால் இரத்தச் சோகை ஏற்படும். இதன் அளவினை ஆடுகளின் கண் கீழ் இமைச் சவ்வின் நிறம் FAMACHA Chart) மற்றும் ஒருங்கிணைந்த இரத்த அணுக்களின் கொள்ளளவு (PCV) ஆகியவற்றின் மூலம் கண்டறிந்து அந்த ஆடுகளுக்கு மட்டும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
பரிசோதனை (Experiment)
கழிச்சல் உள்ள ஆடுகளின் சாண மாதிரியில் எவ்வகையான குடற்புழுக்களினால் ஆடுகள் பாதிக்கப்பட்டிருக்கிறதா? என்பதை, கால்நடை மருந்தகத்தில் குடற்புழு முட்டை எண்ணிக்கை பரிசோதனை செய்து அதற்கேற்றார் போல் குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.
(FAMACHA Chart) மற்றும் ஒருங்கிணைந்த இரத்த அணுக்களின் கொள்ளளவு (PCV) ஆகியவற்றின் மூலம் கண்டறிந்து அந்த ஆடுகளுக்கு மட்டும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
ஐம்புள்ளி பரிசோதனை (Five-point experiment)
ஆடுகளில் குடற்புழுக்களின் பாதிப்பினை கண்டறிவதற்கு ஐம்புள்ளி பரிசோதனை முறையை பயன்படுத்தலாம். அதாவது குடற்புழுக்களினால் ஆடுகளின் ஏற்படும் உடல் அறிகுறி களான கழிச்சல், இரத்தச்சோகை, தாடை வீக்கம், மூக்குச்சளி, மற்றும் உடல் மெலிவு போன்றவற்றை ஏற்படுத்தும் உடல் உறுப்புகளை அவ்வப்போது உற்று நோக்குதல் மூலம் குடற் புழுக்களினால் பாதிகப்பட்டிருக்கும் ஆடுகளைக் கண்டறிந்து அவற்றிற்கு மட்டும் குடற்புழு நீக்கம் செய்யலாம்.
தகவல்
முனைவர் அ.மீனாட்சிசுந்தரம்,
முனைவர் த.அண்ணா, பேராசிரியர் மற்றும் தலைவர்,
மருத்துவர் கா.சுமதி, உதவிப் பேராசிரியர்
கால்நடை ஒட்டுண்ணியியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
இராமையன்பட்டி,
திருநெல்வேலி
மேலும் படிக்க: