Animal Husbandry

Tuesday, 20 August 2019 05:36 PM

காளைகளே பண்ணையின் பாதி என்கிறது முதுமொழி ஒன்று. ஆனால், தற்காலத்தில் பொருளாதார நோக்கத்தில் பெரும்பாலான பண்ணைகளில் செயற்கை முறை கருவூட்டலே பின்பற்றப்படுகிறது.  இந்த முறையின் மூலம் சிறந்த மரபணு கொண்ட தகுதியுடைய காளையின் விந்தணுக்களைக் கொண்டு சீரிய முறையில் அடுத்த தலைமுறை கன்றுகளைப் பெறலாம்.

​செயற்கை முறைக் கருவூட்டலுக்காக சிறந்த காளைகளின் விந்து சேகரிக்கப்பட்டு ஆய்வுகளுக்குப் பின்னர் உறை வெப்பநிலைக்கும் கீழான வெப்ப நிலையில் சேமித்து வைக்கப்படுகின்றன.  இவ்வாறு சேகரித்து வைக்கப்பட்ட விந்தணுக்களை எல்லாக் காலத்திலும் பயன்படுத்தலாம்.

செயற்கை முறை கருவூட்டலுக்கு உகந்த காலம்

​பசுவானது சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்திய 12-24 மணி நேரத்திற்குள் செயற்கை முறை கருவூட்டல் செய்து 12 மணி நேரத்திற்குப் பின் மற்றொரு முறை செயற்கை கருவூட்டல் செய்யலாம்.  இம்முறையில் விந்தணுவானது இதற்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கருவியின் உதவியுடன் கருப்பையில் செலுத்தப்படும்.  எனவே, இவை சிறுநீர் வழியே வெளியேறும் என நினைத்து மாடுகளுக்கு தீவனம் கொடுக்காமலோ தரையில் படுக்க அனுமதிக்காமலோ இருக்கத் தேவையில்லை.

சினைப்பருவ அறிகுறிகள்

  • மாடுகள் ஒய்வின்றியும், உணர்ச்சி மிகுந்தும் காணப்படும்.
  • ​அடிக்கடி அடிவயிற்றியிலிருந்து சத்தம் இடும்.
  • ​தீவனத்தின் மீது நாட்டமின்றி உணவு உட்கொள்ளுதல் குறைந்து காணப்படும்.
  • ​பிற மாடுகளின் மீது தாவுதலும், பிற மாடுகளை தன் மீது தாவுவதற்கு அனுமதித்தலும்.
  • ​பிறப்புறுப்பு வீங்கி அல்லது தடித்து காணப்படுவதோடு சிவந்தும் இருக்கும்.  வாலை உயர்த்தி இருக்கும்.
  • ​அடிக்கடி சிறுநீர் கழிக்கும்
  • ​பால் உற்பத்தி குறையும்

நன்மைகள்

  • ​மிகக் குறைந்த அளவே விந்தணு பயன்படுத்தப்படுவதால் ஒரே காளையைக் கொண்டு ஆயிரக்கணக்கான பசுக்களை பராமரிக்கலாம்.  எனவே, அதிகளவிலான காளை மாடுகளை பராமரிக்கத் தேவையில்லை. இதனால் பராமரிப்புச் செலவு குறைகிறது.
  • ​இம்முறையின் மூலம் வீரியமிக்க ஆனால் வயது முதிர்ந்த மற்றும் ஊனமுற்ற காளைகளின் விந்தணுக்களையும் பயன்படுத்தலாம்.
  • ​வீரியமிக்க காளைகளின் விந்தணுக்களை தொலைதூரத்தில் உள்ள பசுக்களுக்கும் பயன்படுத்தலாம்.
  • ​தரமான விந்தணுக்கள் சோதனைக்குப் பின்னரே தேர்ந்தெடுக்கப்படுவதால் இனப்பெருக்கத்தின்  வழியாக பரவும் நோய்களை கட்டுப்படுத்தலாம்.
  • ​தகுதி வாய்ந்த காளைகள் இறந்த பின்பும் அவற்றின் விந்தணுக்களை சேகரித்து வைத்துப் பயன்படுத்தலாம்.
  • ​கலப்பின உயரினங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.
  • ​விந்தணுக்கள் நேரடியாக கருப்பையினுள் செலுத்தப்படுவதால் கருத்தரிப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது.

குறைபாடுகள்

  • செயற்கை முறை கருத்தரிப்பிற்கு தகுதி வாய்ந்த பயிற்சி பெற்ற நபர்கள் தேவை.
  • ​விந்தணுக்களை குளிர் நிலையில் சேமித்து வைப்பதற்கான கட்டமைப்புகள் தேவை.
  • ​தவறுதலாக இனப்பெருக்கத்தின் வழி பரவும் நோய் கொண்ட ஓர் காளை தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அது மிக அதிக அளவிலான பசுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.
  • ​சேமிக்கப்பட்ட விந்தணுக்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் போது உறை வெப்பநிலையை பராமரிக்க வேண்டும்.
  • ​விந்தணு சேமிப்பு மற்றும் ஆய்வுகளுக்கு நவீன உபகரணங்களும் ஆய்வக வசதிகளும் தேவை.
  • ​சில காளைகளுக்கு விந்தணு சேமிப்பு உபகரணங்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

Alimudeen S
Madras Veterinary College,
TANUVAS, Chennai.
9677362633

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)